வௌவால் பாவம்…! – ராகுல் யோகி

தமிழகத்தின பல பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாக
மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே உள்ள
மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள், பழமையான கோயில்களில்
ஆயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன.
அருகில் வாழும் மக்களுக்கு
இவற்றால் எந்த வைரஸும் பரவியதாக,
இன்றுவரை எந்தப் பதிவும் இல்லை

இது கொரோனா பெருந்தொற்று நெருக்கடி காலம். கண்ணுக்குத் தெரியாத நோயை எண்ணி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மன உளைச்சல் அடைந்துள்ளனர். இந்த நேரத்தில், அவர்களின் மனதில் வெறுப்பும் கோபமும் இயற்கையாகவே எழும். இந்த சந்தர்ப்பத்தில்  சின்னச்சின்ன விசயங்கள்கூட அவர்களை திசைத் திருப்பிவிடும்.

கொரோனா வைரஸ் பரவல் துவங்கிய முதல் சுற்றிலேயே, பாம்பு, தேளு, வௌவால் என்று சீனர்கள் கண்டதையும் தின்று கொரோனா வைரஸை கிளப்பிவிட்டார்கள் என்றும், வூகான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட உயிரியல் ஆயுதமான கொரோனா தவறுதலாக வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் பரவியதால், உலகமே சீனாவிற்கு எதிராக திரும்பியது.

அடுத்ததாக இந்தியாவில், டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் இஸ்லாமிய மாநாட்டிற்கு மலேசியாவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா இருந்துள்ளது. அவர்கள் மூலம் இந்திய முஸ்லீம்களிடம் கொரோனா பரவியது. இது முஸ்லீம்கள்தான் கொரோனாவை பரப்புகிறார்கள் என்ற அர்த்த்த்தில், சமுக வலைத்தளங்களில் செய்திகள் பரவ வாய்ப்பானது.

மற்றொரு விசயம், கொரோனா வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவியது என்ற தகவல். எப்போது எல்லாம் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு வைரஸ் தொற்று நோய் வருகிறதோ, அப்போது எல்லாம் வௌவால்கள் குறித்த செய்திகளும் கூடவே வந்துவிடும்.

உண்மையில், வௌவால்களின் உடலில் பல வகையான வைரஸ்கள் உள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வௌவால்கள் அசாதாரண நோய் எதிர்ப்புசக்தி கொண்டதால். அந்த வைரஸ்கள் வௌவால்களை பாதிப்பதில்லை. அதேசமயம், அந்த வைரஸ்கள் வேறு உயிரினங்களுக்கு செல்லும்போது பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லை, வௌவால்களிடம் இருந்து நேரடியாக வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவதில்லையாம்.

தற்போது சீனாவில் இருந்து பரவிவரும், கொரோனா வைரஸ் வௌவால்கள் மூலம் அலங்கு அல்லது எறும்புத்திண்ணி உயிரினத்துக்குச் சென்று, அதன் மூலம் மனிதனுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது.

தமிழகத்தின பல பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாக மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே உள்ள மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள், பழமையான கோயில்களில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் வாழ்ந்து வருகின்றன. அதே சமயம், அருகில் வாழும் மக்களுக்கு அந்த வௌவால்களால் எந்த வைரஸும் பரவியதாக, இன்றுவரை எந்தப் பதிவும் இல்லை.

பூமியில் 1,200 சிற்றினங்களைச் சேர்ந்த வௌவால்கள் உள்ளன. அதில் இந்தியாவில் 120 சிற்றினங்களைச் சேர்ந்த வௌவால்கள் மட்டுமே உள்ளன. நமது கிராமங்களில் 3 வகையான பழந்திண்ணி வௌவால்கள் உள்ளன. அவை ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழும். பழந்திண்ணி வௌவால்கள் பழங்களை தின்று விதைப்பரவலுக்கு உதவுகின்றன. இலுப்பை, நாவல், அத்தி, ஆல், அரசு போன்ற  மரங்கள் தொடர்பில்லாத இடங்களிலும் முளைத்து வளர்வதற்கு பழந்திண்ணி வௌவால்களால் விதைக்கப்படுதே காரணம். இலவம் பஞ்சு மரம் போன்ற, இரவில் மலரும் மரங்களில் மகரந்த சேர்க்கை நடப்பதற்கு, பழந்திண்ணி வௌவால்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

மிக சாதாரணமாக நம் கண்ணில் படக்கூடியது பூச்சியுண்ணி வௌவால்கள். நூற்றுக்கும் மேற்பட்ட வகை பூச்சியுண்ணி வௌவால்கள் இந்தியாவில் உள்ளன. இந்த வகை வௌவால்கள் அல்ட்ரா சவுண்ட்களை (மீயொலி) எழுப்பி பூச்சிகளைப் பிடித்து உண்ணுகின்றன. ஒரு வௌவால் ஒரு இரவில் 500 பூச்சிகள் வரை உண்ணுகின்றது. விளைப்பயிர்களைப் பாதிக்க கூடிய பூச்சிகளை இந்த வௌவால்கள் உண்ணுவதின் மூலம் விவசாயிகளின் நண்பனாகிறது. மேலும் இவை கொசுக்களையும் உண்ணுகின்றன.

காடழிப்பு, மரங்கள் அழிப்பு, மலைக் குன்றுகளில் குவாரி அமைத்து வெடி வைத்து தகர்ப்பது மற்றும் நகர விரிவாக்கம் என நாம் வௌவால்களின் வாழ்விடங்களை அழித்து வருகிறோம். இந்த இயற்கை சூழல் மாற்றம் வௌவால்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கலாம். அதனால் வௌவால்களின் சிறுநீர், மலம், எச்சில் மூலம் வைரஸ்கள் மற்ற விலங்குகளுக்கு பரவலாம். இதிலும் நாம்தான் குற்றவாளிகள்.

பூமி மனிதர்கள் மட்டுமே வாழ்வதற்கானது அல்ல. அது விலங்குகளும் வைரஸ்களும்கூட வாழ்வதற்கானதுதான். கொரோனா மூலம், அதை மீண்டும் ஒருமுறை இயற்கை நமக்கு நினைவூட்டி உள்ளது.

நன்றி: சதுரங்கம்.காம்
Total Page Visits: 127 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *