மக்களுக்கானதா மனநலத்துறை? – மரு.ஸ்ரீராம்

அடித்தட்டு மக்களின் மனநலம் பாதிக்காமல் இருக்க,
சமூக பொருளாதார காரணங்களை ஒட்டிய
சரியான கொள்கை முடிவுகளை எடுக்கவும்,
நோயின் தீவிரம் குறித்த
வெளிப்படையான தகவல்களை வெளியிடவும்,
அரசுக்கு எந்த ஒரு கவுன்சிலிங்கும் இல்லை.
இந்தியாவில் மக்களுக்கும் அரசுக்கும் மனநலத் துறையின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மனநலத்துறை என்பது மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், மனநல ஆலோசகர்கள் போன்றோரை உள்ளடக்கியது. மனநோய்களுக்கும் குறிப்பிட்ட சில மனநல சிக்கல்களுக்கும், தீர்வைக் கொடுக்கும் துறை. மன நோய்களுக்கு அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து, பெரும்பாலும் மருந்துகள் மூலமாகவும், மனநல சிக்கல்களுக்கு அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து சிலசமயம் மருந்துகள் மூலமாகவும், பலசமயம் ஆலோசனை சார்ந்த சிகிச்சை மூலமாகவும் தீர்வை கொடுக்கின்றது. மனநோய்கள் மற்றும் மனநல சிக்கல்களுக்கு, உடல் கட்டமைப்பு மற்றும் உடல் சார்ந்த காரணங்கள், உளவியல் காரணங்கள் மற்றும் சமூக பொருளாதார காரணங்கள் போன்ற காரணங்கள் உள்ளன.
அறிவியல் முறைப்படி, மேற்கூறப்பட்ட காரணங்களில் எந்த ஒரு காரணம் பிரதானமாக சிக்கலுக்கு வழிவகுக்கின்றதோ, அதை சரிசெய்வதே தீர்வாகும். ஆனால், அறியாமையினாலோ, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தினாலோ, பிழைப்பு வாதத்தினாலோ அல்லது மனநலத்துறையின் கட்டமைப்பினாலோ, இங்கு உடல் சார்ந்த மற்றும் உளவியல் காரணங்கள் மட்டுமே பிரதானமாகப்படுகின்றன. அதாவது தனிமனித காரணங்கள் மட்டுமே பேசப்படுகிறது. சமூக பொருளாதார காரணங்களை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால், இங்கு மனநோய் மற்றும் மனநல சிக்கலின் காரணம் எதுவாயிருந்தாலும், பொதுவான குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. இது, சில முக்கியமான தருணங்களில் மக்களுக்கே எதிராக அமைந்துவிடுகிறது.
இந்தியாவில் 70% மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். 14% மக்கள் கீழ் நடுத்தரவர்க்கத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றனர். 13% மக்கள் மேல் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், 3% பேர் மேல்தட்டு வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் யாருக்கு மனநல சிக்கல் வந்தாலும், அதற்கான சமூக பொருளாதார காரணங்களை புறந்தள்ளிவிட்டு, அனைத்து வர்க்கத்தினருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சைமுறை முன்வைக்கப்படுகிறது. இது மனநலத்துறையில் மட்டும் நடப்பதல்ல. உதாரணத்திற்கு, இந்த மாத லாபம் பல லட்சங்களை தொடவில்லையே என்பதால் வரும் மன அழுத்தத்திற்கும், இந்த மாதம் இன்னும் இஎம்ஐ கட்டவில்லையே என்பதால் வரும் மன அழுத்தத்திற்கும், நாளை அன்றாட செலவிற்கு வழி இல்லையே என்பதால் வரும் மன அழுத்தத்திற்கும் வர்க்கரீதியான வேறுபட்ட காரணங்கள் இருந்தாலும், இவற்றுக்கு முன்வைக்கப்படுகின்ற சிகிச்சை முறைகள் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றது. இது ஒட்டுமொத்த மருத்துவத் துறைக்கும் பொருந்தும்.
இதே சிகிச்சை முறையை, கோவிட் தொற்றுநோய் காலத்திலும் மனநலத்துறையை சார்ந்தவர்கள் உபயோகப்படுத்தி வருவது வருத்தமளிக்கிறது. வெகுஜன ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் முதலியவற்றில் தோன்றும் பெரும்பாலான மனநல மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும், பொருளாதார கட்டமைப்பில், மேல்நிலையிலுள்ள 15% மக்களுக்கான வழிமுறைகளை மட்டுமே முன்மொழிகின்றனர். இது வெகுஜன ஊடகங்களால், அனைத்து மக்களும் மனநல சிக்கலில் இருந்து வெளிவருவதற்கு, இவை மட்டுமே வழிமுறை என்ற பிம்பம் உருவாக்கப்படுகின்றது.
கோவிட் காலத்தில் ஊரடங்கு உத்தரவினால், மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார சிக்கல்களை சரிசெய்ய உதவுவதன் மூலமும், கோவிட் நோய் தன்மை பற்றி ஒளிவுமறைவின்றி தெளிவு ஏற்படுத்துதல் மூலமும், பல மனநல சிக்கல்களை தவிர்க்கலாம் என்ற குரலைவிட, தனிமனிதனாக நீங்கள் என்ன செய்து உங்கள் மனநலத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும் என்ற குரலே அதிகம் ஒலிக்கிறது. இது மேல்தட்டு மக்களுக்கான குரலே அன்றி, பொருளாதார சிக்கல்களினால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள அடித்தட்டு மக்களுக்கும், சமூக வாழ்வு சார்ந்த சிக்கலுக்கு உள்ளாகி இருக்கும் மற்றும் நோய் பற்றிய வெளிப்படைத்தன்மை உடைய தகவல்கள் இல்லாததால், பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்திற்குமான குரல் அல்ல.
இந்த மனநலத்துறையின் குரலை, அரசும் நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. யார் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தாலும், கவுன்சிலிங் மட்டுமே தீர்வு என்று அதை தனிமனித பிரச்சனையாக திசைதிருப்பி விடுகிறது. இதற்கு அரசு மற்றும் தனியார் மனநல துறைகளும் அறிந்தோ அறியாமலோ துணை நிற்கின்றன. ஊடகங்கள் வாயிலாகவும், தொலைபேசி ஹெல்ப்லைன் வாயிலாகவும் மக்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அடித்தட்டு மக்களின் மனநலம் பாதிக்காமல் இருக்க, சமூக பொருளாதார காரணங்களை ஒட்டிய சரியான கொள்கை முடிவுகளை எடுக்கவும், நோயின் தீவிரம் குறித்த வெளிப்படையான தகவல்களை வெளியிடவும், அரசுக்கு எந்த ஒரு கவுன்சிலிங்கும் இல்லை.
மக்களுக்கு சமூக பொருளாதார காரணங்களை பற்றிய தெளிவு இருந்தாலும், அவர்கள், மீண்டும் மீண்டும் மனநலத்துறையை சேர்ந்தவர்கள் தனிமனித வழிமுறைகளை கூறும்போது, பிரச்சனை தன்னிடம் மட்டும்தான் உள்ளதோ என்று நினைக்கத் துவங்குகிறார்கள். வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லாததால், அதிக வேலை நேரத்தால் குடும்பத்துடன் போதிய நேரம் செலவு செய்ய இயலாததால், வேலைக்கு செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் போக்குவரத்து பயணத்தினால், வேலையின் தன்மையால், பொருளாதார சிக்கல்களினால், மதம் மற்றும் சாதிய சமூகம் சார்ந்த பிரச்சினைகளினால், அரசின் கொள்கை முடிவுகளால், சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் மன சிக்கல்களுக்கு, தான்தான் காரணம் என்பதையும், தன்னிடம் மட்டுமே தீர்வு உள்ளது என்பதையும்தான், இப்போதிருக்கும் அரசு மற்றும் தனியார் மனநல மருத்துவ கட்டமைப்பு மக்களுக்கு எடுத்துச் சொல்கிறது.
துவக்கத்தில், சில மனநல நிபுணர்களின், அறியாமை மற்றும் பிழைப்புவாதத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த பிம்பம், இப்பொழுது அரசால், தான் செய்யத் தவறிய கடமைகளை மூடி மறைப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. அரசு தனது பொது சுகாதாரத் துறையின் மூலம், இந்த கட்டமைப்பைத்தான் இன்னும் பலமாக்குகிறது. தங்களது வர்க்க பின்புலத்திற்கு ஏற்ப, மனநல நிபுணர்கள் செய்யும் ஆராய்ச்சிகளும் அதன் முடிவுகளும் இந்த கட்டமைப்பையே வழிமொழிகின்றன.
சமூக பொருளாதார வாழ்வியல் காரணங்களைப் புறந்தள்ளுகின்ற இந்த நிலை தொடருமானால், மனநலத்துறையானது அரசு மற்றும் பெருமுதலாளிகளின் அடக்குமுறைக்கான ஆயுதமாக மாறுவது தவிர்க்க இயலாதது.
சமூக பொருளாதார வாழ்வியல் சிக்கல்கள் மற்றும் சாதி மத வர்க்க வேறுபாடுகளால், மக்களின் மன நலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அரசுக்கு எடுத்துரைப்பதன் மூலம், அரசின் கொள்கை முடிவுகளில் மாற்றம் கொண்டுவர வழிவகைகள் செய்தால்தான், மனநலத்துறை மக்களுக்கான அறிவியல்படி நின்று, மக்களுக்கான துறையாக இருக்க முடியும்.