மோடியின் அறிவிப்புகளும் – திணிக்கப்படும் சடங்குகளும்: ராகுல் யோகி

எதிர்காலத்தில்,
கொரோனா பெரும் தொற்றிலிருந்து நாம் தப்பிப் பிழைத்து வாழ்ந்தோமானால்,
கொரோனா அரக்கனை மோடி, ஒளி-அம்பு வீசி வீழ்த்திய நாளை
கொண்டாட வேண்டி வரலாம். அந்த நாளுக்கான சடங்காக,
வீட்டுவாசலில் நான்கு திசைகளிலும்
தீபம் ஏற்றும் சடங்கும் இருக்கலாம்.

 

மோடியின் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள், வெறும் சடங்குத் திணிப்பு அறிவிப்புகளாகவே உள்ளன.

மார்ச் 21-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிப்பின்போது, அனைவரும் வீட்டு வாசலில் நின்று கைதட்டும்படி அறிவித்தார் மோடி. அடுத்து, 5-ம் தேதி ஞாயிறு இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நான்கு திசைகளிலும் ஒளியேற்ற வேண்டும் என்று அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்திலேயே, இந்த அறிவிப்பு குறித்த ஆன்மீக விளக்கங்களும் அறிவியல் விளக்கங்களும் சமூக வலைதளங்களை நிரப்பிவிட்டன.

குரு நீசம் அடைந்திருப்பதால்தான் கொரோனா நோய் உலகைத் தாக்குகிறது. எல்லோரும் சேர்ந்து தீபம் ஏற்றினால், குரு வலுப்பெற்று கொரோனா நோயை அழித்துவிடும் என்பதில் தொடங்கி, அனைவரும் ஒரேநேரத்தில் ஒளிவிளக்கு ஏற்றினால், பிரபஞ்ச வெளியில் உள்ள காஸ்மிக் கதிர்கள் திரண்டு பூமிக்கு வந்து கொரோனவை விரட்டிவிடும் என்பது வரை, பல செய்திகள் வாட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் உலாவின.

ஏற்கனவே, கொரோனாவால் உயிர் பயத்தில் முகமூடியுடன் அலையும் அப்பாவி மக்கள், நாட்டின் பிரதமரே அறிவித்த பின்னர் சும்மா இருப்பார்களா, ஏறக்குறைய அனைவருமே தீபம் ஏற்றிவிட்டார்கள். பிரதமர் மோடியும் வானுக்கு தீபாராதனை காட்டினார்.

கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக, பல கேள்விகளும் பல சந்தேகங்களும் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மரணம் நிச்சயமா? கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுப்பிடிக்கப் பட்டுவிட்டதா? அல்லது அதற்கான முயற்சிகள் நடக்கிறதா? இதுவரையிலான ஊரடங்கால் என்ன பலன் கிடைத்துள்ளது? ஊரடங்கு முடிந்துவிடுமா அல்லது நீட்டிக்கப்படுமா? நீட்டிக்கப்படுமானால், சராசரி மக்களின் தினசரி அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய, அரசிடமிருந்து என்னென்ன உதவிகள் கிடைக்கும்? இப்படி பல விசயங்களுக்கான விளக்கங்களை பிரதமரின் உரையில் மக்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவரோ கடவுளிடம் கையேந்த சொல்கிறார். கைதட்டுவது, தீபம் ஏற்றுவது போன்ற சடங்குகளை செய்யச் சொல்கிறார்.

சடங்குகள் பற்றி நாம் எப்போதும் கேள்வி எழுப்ப முடிவதில்லை. ஏனெனில், அவை உணர்ச்சிகரமானவை, மக்களின் நம்பிக்கை சார்ந்தவை. அதனாலேயே, அவை எப்போது வந்தன? எப்படி வந்தன? ஏன் வந்தன? என்பது தொடர்பாக நமக்கு எந்த விபரமும் தெரிவதில்லை. ஆனால் இப்போது, மோடியின் அறிவிப்புகளை பார்க்கும்போது, நாம் ஓரளவுக்கு புரிந்துகொள்ள முடிகிறது.

சமூக வலைதளங்களில், மோடியின் இந்த அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், அவற்றை சிறுபிள்ளைத் தனமானவை, கோமாளித் தனமானவை என்ற அளவில்தான் எடுத்துக்கொண்டு, கிண்டலும் கேலியும் செய்தார்கள். ஆனால் உண்மையில், இந்த அறிவிப்புகள் வில்லங்கமானவை. இந்துத்துவம் மற்றும் பார்ப்பனியம், இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக, இந்திய துணைக்கண்டத்தில் இப்படித்தான் புராணங்களையும் ஐதீகங்களையும் கட்டமைத்தது.

நரகாசூரனை கொன்ற நாள்தான் தீபாவளி என்கிறார்கள். வடமாநிலங்களில், அன்றைக்கு வீட்டுவாசலில் தீபங்கள் ஏற்றி, வெடிவெடித்து கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் வீட்டுவாசலில் தீபம் ஏற்றும் வழக்கமில்லை. அதற்கு பதிலாக, அன்று விடிவதற்கு முன்பு புதுத் துணிகள் வைத்து படைத்து, எண்ணை தேய்த்துக் குளிப்பார்கள். இது இறந்த முன்னோர்களுக்கு செய்யும் கருமாதி சடங்கை ஒத்திருக்கும். அதே சமயம், தமிழகத்தில் கார்த்திகை மாதம் கர்த்திகை திதி அன்று வீட்டுவாசலில் தீபங்கள் ஏற்றும் வழக்கமுள்ளது. கந்தபுராணக் கதையில் கந்தன் அதாவது கார்த்திகேயன் சூரனை கொன்றதாக வருகிறது. இது தீபாவளிக்கும் கார்த்திகை தீப சடங்கிற்கும் உள்ள தொடர்பை நினைவூட்டுகிறது.

ஜைனர்களின் குருவான மாகாவீரர் இறந்த நாள்தான் தீபாவளி என்ற ஒரு ஆய்வுத் தகவலும் உள்ளது. ஜைனர்கள் தீபாவளிக்கு மறுநாள் வீட்டுவாசலில் தீபங்கள் ஏற்றி, இனிப்பு வழங்கி, புதுக்கணக்கு துவங்குவார்கள். மாகாவீரர் இறந்த துக்கத்திலிருந்து மீண்டு, அவர்கள் புதுவாழ்வை துவங்கியதற்கான அடையாளமாக இதைக் கொள்ளலாம். தமிழர்களின் தீபாவளி சடங்குடன் இந்தத் தகவல் ஒரு வகையில் பொருந்துகிறது.

உயிர் கொல்லாமையை போதித்த ஒரு மனிதருக்கு மகாவீரர் என பெயர் இருந்தது ஆச்சரியம்தான். நரகாசூரன் என்ற பெயருக்கு அர்த்தம் – நரன் எனறால் மனிதம், சூரன் என்றால் வீரன் – மனிதர்களில் வீரன் என்பதுதான். தேவர்களின் அதாவது ஆரியர்களின் தலைவன் மகாதேவன். மனிதர்களின் தலைவன் நரகாசூரன், அதாவது மகாவீரன். இதை பார்க்கும்போது, மகாவீரர் ஜெயந்திக்கு முதல் நாள், மார்ச் 5-ம் தேதி, மோடி தீபம் ஏற்றச் சொன்னது, ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்காது என தொன்றுகிறது.

அது போலவே, வாமன அவதாரத்தால் பூமிக்குள் புதைக்கப்பட்ட மாவேலி மன்னன் தனது குடிமக்களை பார்க்க, பூமிக்கு மேல் வரும் நாள்தான், கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை என்கிறார்கள். அன்றைக்கு நிலத்தை பூக்களால் அலங்கரிக்கிறார்கள். பூமியைப் பிளந்துகொண்டு மாவேலி வருவதுபோல நிலத்தில் ஓவியம் வரைகிறார்கள். அன்றைய படையல் சடங்கில் பூக்கள், பழங்களுடன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியையும் வைத்துப் படைக்கிறார்கள். அந்த கண்ணாடிகளில் தெரியும் ஒவ்வொரு குடிமக்களின் முகமும் மாவேலியை பிரதிபலிக்கும் போலும்.

அதுபோல மற்றொன்று, வடமாநிலத்தில் கொண்டாடும் ராம்லீலா. இது தமிழகத்தில் கொண்டாடப்படுவதில்லை. இந்த ராம்லீலா கொண்டாட்டத்தின்போது, பிரம்மாண்டமான ராவணன் உருவத்தை செய்து, அதில் நெருப்பு அம்பு விட்டு எரிப்பதை ஒரு சடங்காக நடத்துகிறார்கள்.

எதிர்காலத்தில், கொரோனா பெரும் தொற்றிலிருந்து நாம் தப்பிப் பிழைத்து வாழ்ந்தோமானால், கொரோனா அரக்கனை மோடி ஒளி-அம்பு வீசி வீழ்த்திய நாளை கொண்டாட வேண்டி வரலாம். அந்த நாளுக்கான சடங்காக, வீட்டுவாசலில் நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றும் சடங்கும் இருக்கலாம்.

நன்றி: சதுரங்கம்.காம்
Total Page Visits: 124 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *