குருட்டு நம்பிக்கையும் கொரோனா போரும் – ராம் புனியானி

கொஞ்ச காலத்திற்கு முன்பு,
குருட்டு நம்பிக்கைகள் அடிப்படையிலான
அரசியல் கருத்தாக்கத்தின் செயல்பாடுகள்தான்
டாக்டர்.நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி
போன்றவர்களை கொலைசெய்ய காரணமாயின.
இவர்கள், இந்த குருட்டு நம்பிக்கைகளை பின்பற்றுவது
மற்றும் உயர்த்திப் பிடிப்பதற்கு எதிராகப் போராடி வந்தனர்.

 

இன்றைய உலகம் கொரோனா வைரஸின் பிடியில் இறுகிக் கொண்டிருக்கிறது. இது சீனாவில்தான் தொடங்கியது என்றாலும், தற்போது உலகம் முழுவதையும் தன் பிடியில் வைத்திருக்கிறது; இந்தியாவும் மலையளவு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கிறது. பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. இவை எல்லாவற்றையும் தாண்டி, இந்திய சுகாதாரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை மிகவும் சிக்கலாக்கியிருப்பது என்னவென்றால், அவை நம்பிக்கை அடிப்படையிலான சடங்குகள்தான். இவையெல்லாமே, மனிதர்களின் பேரிடர்கள் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பதற்கு உண்டான எல்லாமும் பழங்கால இந்திய சடங்குகளில் இருந்திருக்கின்றன என்று கூறுகின்ற, ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடைய எண்ணிக்கையில் அடங்காத கூட்டாளிகளால் பரப்புரை செய்யப்படுகின்றன.

சமீபத்திய காலங்களில் நம்முடைய சமூக வாழ்வின் அடித்தளத்தில் ஓடிக் கொண்டிருக்கின்ற, இந்த குருட்டு நம்பிக்கைகளின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள இரண்டு உதாரணங்களை மதிப்பிட்டுப் பார்க்கலாம். கொஞ்ச காலத்திற்கு முன்புதான் குருட்டு நம்பிக்கைகள் அடிப்படையிலான அரசியல் கருத்தாக்கத்தின் செயல்பாடுகள் டாக்டர்.நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்ஸாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி போன்றவர்களை கொலைசெய்ய காரணமாயின. இவர்கள், இந்த குருட்டு நம்பிக்கையை பின்பற்றுவது மற்றும் உயர்த்திப் பிடிப்பதற்கு எதிராக போராடி வந்தனர். பிரிவினைவாத அரசாங்கத்தின் எழுச்சியால் குருட்டு நம்பிக்கை கொண்டவர்கள் ஊக்கம் பெறுகிறார்கள்.

கடந்த மார்ச்-20 அன்று, ஒரு நாள் முழுவதும் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்த இந்தியப் பிரதமர், சுகாதாரப் பணியாளர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக மக்கள் தங்களுடைய பால்கனிகளுக்கு வந்து கைதட்டவும், மேளங்கள், பாத்திர பண்டங்களை அடித்து ஒலியெழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இவை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் தொணியை கொண்டிருந்தாலும், வேறு சில நிலைகளுக்கும் இட்டுச் சென்றுவிட்டன. இந்த வேண்டுகோளின்படி, நிறையபேர் ஒன்றுகூடி பல்வேறு ஊர்வலங்களை நடத்தியதால் நோய் விலகல் விதிமுறைகள் மீறப்பட்டன. அவர்கள் சங்குகளை ஊதியும், பண்டபாத்திரங்களை அடித்தும், கைதட்டவும் செய்தனர்.

இதற்கான காரணத்தை ரொம்ப தூரத்தில் எல்லாம் தேட வேண்டியதில்லை. மகாராஷ்டிர பிஜேபி தலைவரான என்.சி.சைனி, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இப்படி குரல் கொடுப்பதற்கான கோரிக்கைக்காக பிரதமருக்கு பாராட்டு தெரிவித்துவிட்டு, ‘இப்படி குரல் எழுப்புவதால் பாக்டீரியா/வைரஸ்கள் கொல்லப்படும்’ என்றும் சொல்லிவிட்டார். அவரைப் பொறுத்தவரையில், அதிகமுறை மறுடுவீட் செய்யப்பட்ட இந்தக் கூற்று புராண காலத்தைச் சேர்ந்தது. அதாவது, இப்படி மேளமடிப்பதும், சங்கூதுவதும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை கொன்றுவிடுவதாக அவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. இதேபோன்ற வாட்ஸ்அப் செய்திகளாலும் சமூக ஊடகம் நிரம்பி வழிந்தது.

தொந்தரவு செய்யக்கூடிய மற்றொரு விஷயம் என்னவென்றால், ஸ்வாமி சக்ரபாணி மகராஜ் மேற்கொண்ட செயல்கள்தான். இவர் ஏற்பாடு செய்திருந்த மாட்டு மூத்திர விருந்தில் பரிமாறப்பட்ட மாட்டு மூத்திரமானது கொரோனா வைரஸை தடுக்கவும்/குணப்படுத்தவும் செய்யும் எனப் புரிந்துகொண்டு பலரும் வாங்கிக் குடித்திருக்கின்றனர். மற்றொரு பிஜேபி தலைவர் ஏற்பாடு செய்திருந்த இதேபோன்ற நிகழ்ச்சியில், ஒருவர் மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு உடல்நிலை சீர்கேட்டிற்கு ஆளானார். இதற்கு சற்றும் குறைவில்லாமல், அசாமை சேர்ந்த மற்றொரு பிஜேபி எம்எல்ஏ சுமன் ஹரிப்ரியா என்பவர் மாட்டு சாணத்தின் நற்குணங்கள் பற்றி பெரிதாக பேசி வருகிறார்.

மாட்டு மூத்திரம், மாட்டுச் சாணத்தை பிரபலப்படுத்துகின்ற பெரும்பாலானவையும் பிஜேபி சித்தாந்தத்தோடு சம்பந்தப்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 1998-இல் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிகாரத்திற்கு வந்தது முதலாக, கடந்த இருபது வருடங்களாகவே மாட்டு மூத்திரமான செய்திகளில் அதிகம் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. திருவாளர்.மோடியின் நெருங்கிய சகாவான, குஜராத்தை சேர்ந்த ஷங்கர் பாய் வெகாத் என்பவர், தான் இந்த 76 வயதிலும் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியமே மாட்டு மூத்திரம்தான் என்று கூறியுள்ளார். இதுபோன்ற பேச்சுக்களின் உச்சகட்ட வெளிப்பாடு, உத்திரப்பிரதேசத்தின் தற்போதைய போபால் தொகுதி எம்பி-யும், மலேகான் தீவிரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவருமான சாத்வி பிரக்யா சிங் தாக்கூரிடம் இருந்து வந்திருப்பதுதான். தன்னுடைய மார்பக புற்றுநோய் இந்த மாட்டு மூத்திரத்தினால்தான் குணமானது என அவர் கூறியுள்ளார். நல்லவேளையாக, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், இந்த நோய்க்காக அவர் மூன்றுமுறை அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என நம்மிடம் சொல்லிவிட்டார்.

எல்லாவிதமான நோய்க்கும் மாட்டு மூத்திரத்தில் மாயாஜால மருந்து இருக்கிறது என்று சொல்வதை நாம் எப்படி நம்புவது அல்லது நிராகரிப்பது? இந்தக் கேள்வி காற்றில் பரவும்போதே, ஆளும் அரசாங்கமானது மாட்டு மூத்திரம், பஞ்சகவ்யா (மாட்டுச்சாணம், மாட்டு மூத்திரம், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை) போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்ய பெரும் தொகையை ஒதுக்கீடு செய்திருக்கிறது. மாட்டுத் தயாரிப்புகள், குறிப்பாக இந்தியவகை மாட்டுத் தயாரிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்ய மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவ அறிவியலில் ஒரு மருந்தை அறிமுகப்படுத்துதல் என்பதற்கு பின்னணியில் உயிர்-வேதியல் ஆய்வுகள், மருத்துவக்கூடத்திற்கு முந்தைய சோதனைகள் (வெற்று மாத்திரைகள் உதவியுடன் இருபுறமும் மறைக்கப்ப்ட பரிசோதனைகள்) மற்றும் அறிமுகப்படுத்தியதற்கு பிந்தைய மதிப்பீடுகள் என பல விஷயங்கள் உள்ளன. மாட்டு மூத்திரத்தைப் பொறுத்தவரையில், பிற விலங்குகளைப் போன்றே இதுவும் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்ற கழிவுகளின் கலவைதான். மாட்டு மூத்திரத்தில் வேறு பல மருத்துவ குணங்கள் என்று பிரசங்கம் செய்வது முற்றிலும் சிந்தாந்த நோக்கம் மட்டுமே கொண்டதாகும்.

இது முழுமையான இந்து தேசியவாத திட்டத்தின் ஒரு பகுதிதான், அந்த திட்டத்தின் நோக்கமே பிறப்பின் அடிப்படையிலான சாதிய படிநிலை மற்றும் பாலின வேறுபாட்டில் காணப்படுகின்ற, பழங்கால மதிப்பீடுகள் அனைத்தையும் தற்கால சமூகத்தின் மீது திணிப்பதுதான். இதற்கு இணையாகவும், ஆனால் வேறு ஒரு வகையிலும், பழங்கால இந்தியாவானது புஷ்பக விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி, பயோ டெக்னாலஜி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எல்லாப் பிரிவுகளிலும் முன்னதாகவே சாதித்துவிட்டது என்பதையும், இதே திட்டம்தான் நிறுவ முற்படுகிறது.

கடந்துபோன பொற்காலத்தைச் சேர்ந்த நம்பிக்கைகள் அடிப்படையிலான புரிதல்கள் எனும் பெயரில், முழுமையான அரசியல் திட்டத்தின் இந்தப் பகுதிதான் போற்றிப் புகழப்பட்டு முன்வைக்கப்படுகிறது. பாரம்பரிய இந்து மதிப்பீடுகளின் மேலாதிக்கத்தை ஏற்கச் செய்வதற்கான முயற்சிதான் இது. மாட்டு விஷயத்தைப் பொறுத்தவரையில், ஒருபக்கம் மாட்டுக்கறி பிரச்சாரமானது மரத்தில் கட்டித் தூக்கிலிடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகிறது, மற்றொரு பக்கம் மாட்டுத் தயாரிப்புகள் முன்னிலைப்படுத்தப் படுகின்றன. இந்த பிரபலப்படுத்தலும்கூட, பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புகள் மற்றும் அதுபோன்ற பலவற்றிலும் மாட்டு மூத்திரத்தின் வணிகரீதியான ஆதாயங்களுக்குத்தான் காரணமாக அமைந்திருக்கின்றன.

கரோனோ உலகளாவிய நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுதல் என்பதற்குத்தான் அரசாங்கம் மற்றும் சமூகத்தின் தரப்பில் மிகப்பெரும் அளவுக்கான பெருமுயற்சி தேவைப்படுகிறது. இந்தியாவில், இந்து தேசியவாதத்தின் தாக்கம் அதிகரிப்பதும், அதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையேற்பதுமே, அறிவியல் மற்றும் பகுத்தறிவுக்கு முற்றிலும் எதிரான புரிதல்கள் மக்களிடம் பரவ காரணமாக அமைந்துள்ளன. புராணங்கள் போன்ற கட்டுக்கதைகளில் இருந்து, அறிவியல் என்று சொல்லிக்கொண்டு வடித்தெடுப்பதை தன்னுடைய செயல்திட்டத்திற்குள் பொருத்துவதற்காகவே, விக்யான் பாரதி போன்ற அமைப்புக்கள் ஆர்எஸ்எஸ்-ஆல் நிறுவப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, நாக்பூரில் உள்ள கோ விக்யான் அனுசாந்தன் கேந்த்ரா என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது, தர்க்கரீதியாகவும் அல்லாத, அறிவியல்பூர்வ சோதனைகளுக்கு தாக்குப்பிடிக்க இயலாத கருத்துக்களை பிரச்சாரம் செய்வதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட விஷயங்களை பரப்புரை செய்வது முன்னேற்றத்தை பின்வாங்கவே செய்ய வைக்கும். அதுபோக, இவை ஏற்கனவே சமூகத்தின் ஒருபிரிவு மக்களிடத்தில் இந்த பகுத்தறிவற்ற விஷயங்களை துளைபோட்டு சொருகி வைத்திருப்பதாலும் அவை முன்னேற்றங்களுக்கு தடைக்கற்களாகத்தான் இருக்கும். ஆளும் அதிகாரவர்க்கம்தான் தாமாக முன்வந்து இத்தகைய பாதகமான விஷயங்களை இல்லாமல் செய்ய வேண்டும்.

தமிழில்: மர்மயோகி

ராம் புனியானி:

பாம்பே ஐஐடி-யில் பயோமெடிக்கல் என்ஜினியரிங் பேராசியராக பணியாற்றியவர். இந்தியாவில் சமூக ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் குறிக்கோளுடன், முழுநேரமாக பணியாற்றுவதற்காக டிசம்பர் 2004-இல் சுய-விருப்ப ஓய்வு பெற்றார். மனித உரிமைகள் நடவடிக்கைகளில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கிறார்.

Source: countercurrents.org

தொடர்புடைய கட்டுரை:

ஆதிவாசிகள் இந்துக்களா? மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஆர்எஸ்எஸ் திட்டம் – ராம் புனியானி

Total Page Visits: 339 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *