பழங்குடியின சகிப்பின்மை – ரான் ந்யூபை

மக்களை எப்போதுமே தலைவர்களின் கட்டளைக்கு
கீழ்பணியச் செய்துவிட முடியும். அது மிகவும் சுலபம்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மக்களிடம் சென்று,
அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும்,
தேசப்பற்று இல்லாமல் நாட்டை ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும்
போர் எதிர்ப்பாளர்களை புறக்கணித்து விடுங்கள் என்பதையும் சொல்ல வேண்டியதுதான்.

 

யூதம், இஸ்லாம், கிறிஸ்துவம், இந்துத்துவம் மற்றும் பலதரப்பட்ட மதக் குழுக்களை பழங்குடியினர் எனக் கருதலாம்; ஒரு சமூகத்திற்குள் இருக்கும் சமூகப் பிரிவினையானது, பொதுத்தன்மையுள்ள தனிநபர்களால் ஆன குழுக்களைத்தான் உள்ளடக்கியிருக்கிறது, இவ்விடத்தில், மதக் கண்ணோட்டங்கள்தான் அந்த பொதுத்தன்மை. இந்தப் பழங்குடிகள் மிகவும் ஒரேவிதமான, உயரிய தார்மீக மதிப்பீடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள்; குடும்பத்தை நேசிப்பவர்களாக, ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் கவனித்துக் கொள்பவர்களாக மற்றும் தங்களுடைய மத விதிமுறைகளுக்கு கீழ்பணிந்தவர்களாக இருப்பார்கள். ஆனாலும்கூட, பழங்குடிகளிடையே காணப்படும் சச்சரவானது, வெறுப்பு மற்றும் ஆயுதமேந்திய தகராறு எனும் அளவுக்கான, கசப்பான கருத்து வேறுபாடுகளுக்கே காரணமாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு மதப் பழங்குடிகளும் உயர்வான தெய்வங்களை வைத்திருக்கின்றன என்றால், சேர்த்துக்கொள்ளப்படாத பிற பழங்குடிகளிடத்தில், அவர்களுக்கு எப்படி பகையுணர்வு ஏற்படுகிறது? இது புதிராக இருக்கிறது இல்லையா?

இடதோ வலதோ, பழமைவாதமோ முற்போக்குவாதமோ, அரசியல் குழுக்களிடையே கசப்பான உடன்பாடின்மைகள் என்பது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது, ஒருமனதான கருத்தை அடைவது சாத்தியம்தான் எனும்போதுகூட பழங்குடிகளுக்கு இடையில் அவ்விதமான போக்கு சிக்கலாகவே இருக்கிறது. மற்றொரு கேள்வி என்னவென்றால்; ஹோமோசெக்ஸுவல்கள், கறுத்த நிறமுள்ளவர்கள் மற்றும் வேறுபட்ட தொல்குடி மக்கள் ஏன் எப்போதுமே இழிவாக கருதப்படுகிறார்கள்? வெளியாட்கள் குறித்தும்; பிற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏன் இதுபோன்ற சகிப்பின்மைகள் நிலவுகின்றன?

60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நம்முடைய ஹோமினின்(ஆரம்பகால மனித இனம்) வம்சாவளியானது சிம்பன்ஸி வம்சாவளியிடமிருந்து பிரிந்துசென்று இந்த மொத்த கிரகத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது. இதில் மறக்கப்பட்ட விஷயம் என்னவென்றால், இதுபோன்ற ஹோமினின் உயிரினங்களான ஹோமோ ஹேபிலிஸ், ஹோமோ எரக்டஸ், ஹோமோ எர்கஸ்டர் மற்றும் ஹோமோ ஹைடல்பர்ஜெனிஸ் போன்ற, டசன்கணக்கான பிற ஹோமினின் உயிரினங்கள் இருந்திருக்கின்றன என்பதுதான். ஹோமோ ஸேபியன் அல்லாத கடைசியானவை என்றால், அது 40,000 வருடங்களுக்கு முன்பாக தொலைந்துபோய்விட்ட நியாண்டர்தால்கள் ஆவர். அப்படியென்றால், மீதமிருந்த பிற டசன்கணக்கான ஹோமினின் உயிரினங்களுக்கு என்னவானது? அவை வாழத் தகுதியில்லாமல் போய்விட்டனவா? அவை அறிவார்ந்தவை இல்லையா? அவை ஏதேனும் இயற்கை பேரழிவுக்கு பலியாகிவிட்டனவா? அல்லது மற்றவற்றின் அழிவுக்கு ஹோமோ ஸேபியன்கள் “உதவி” செய்திருக்கின்றனவா?

10 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக, பழங்குடிகளாகவே எஞ்சியிருந்த பழங்குடியின உயிரினங்களும், நவீன மனிதர்களுமாக நாம்தான் இருந்திருக்கின்றோம். விளக்கிக்கூற முடியாத, ஏற்க இயலாத, வெறுப்பூட்டுகின்ற அல்லது ஒருவருடைய நம்பிக்கைக்கு முரண்பட்டதாக காணப்பட்டாலும், இதுதான் அறிவியல் உண்மை. கரடுமுரடான சூழ்நிலையிலும், குறைவான மூலாதாரங்களையும் கொண்டு பரிணமித்த, மிகவும் தகுதியானவை மட்டுமே தப்பிப் பிழைத்திருக்கின்றன. பிற ஹோமினின் உயிரினங்களுக்கு இடையிலான போட்டி மூர்க்கமானதாகத்தான் இருந்திருக்க வேண்டும். உயிர்பிழைத்த ஒரே ஹோமினின் உயிரினங்களாக இருப்பதற்காக, மற்ற பழங்குடி மக்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது வெறுப்பை, அல்லது அதைவிட இன்னும் மோசமான போக்கை கையாளுவதற்கான திறனை ஹோமோ ஸேபியன்கள் வளர்த்துக்கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. வகைமுறைகள், குறியீடுகள், உடல்சார் குணவியல்புகள், நடத்தைகள், அரசியல் மற்றும் மதம்சார் இணைப்புகளில் உள்ள மாறுபாடுகளை கவனிப்பதில் நாம் மிகவும் கைதேர்ந்தவர்கள்; இதுபோன்ற முட்டாள்தனங்கள்தான், பிறர் நமக்கு போட்டியாளர்களாக இருந்துவிடக்கூடும் என்று கருதுவதற்கு நம்மை இட்டுச் சென்றிருக்கின்றன.

போட்டியாளர்களை அழித்தொழித்தல் என்பது நீண்டகாலமாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஒரு பாரம்பரியமாக விளங்குகிறது. நவீன மனிதர்களைப் பொறுத்தவரையில், பிற பழங்குடி மக்களை அழித்தல் என்பது அவர்களை கொலைசெய்தல் மற்றும் அவர்கள் மீது போர்தொடுத்தல் என்ற வடிவத்தையே வழக்கமாக எடுத்துக்கொள்கிறது. பழங்குடியின தலைவர்கள் அவர்களுடைய அடிப்படையை கிளறிவிடுவதன் மூலம் இந்த திறமையை முழுமைப்படுத்துகிறார்கள்; எதிராளியின் “இழிவான” குணவியல்புகளை இனம்கண்டு சொல்கிறார்கள். அதனால், பழங்குடியின உறுப்பினர்கள் தங்களுடைய தலைவரை அப்படியே உண்மையாக பின்பற்றுகிறார்கள்.

பயம், மூர்க்கத்தனம், பேராசை மற்றும் பரிவுணர்ச்சி ஆகியவைதான் நம்மை ஒன்றாக பிணைத்து வைத்திருக்கின்ற மரபார்ந்த நடத்தை குணங்கள். இவைதான், ஒரு வலுவான மற்றும் மிகுந்த போட்டித்திறனுள்ள பழங்குடியாக விளங்க காரணமாகின்றன. பயம் என்பது புராதனமான ஒரு மரபியல் குணம். இந்த குணம் இல்லாமல் ஒரு நிகழ்வை நாம் விவேகத்துடன் மதிப்பிடாமல் போய் இறந்துவிடுவோம். மூர்க்கத்தனம் என்பதுமே ஒரு மரபார்ந்த குணம்தான், அதுதான் ஹோமோ ஸேபியன்கள் பிரதேசவாத சச்சரவுகளில் ஆதிக்க செலுத்த உத்திரவாதம் அளித்திருக்கிறது. பேராசை என்பது நாம் உயிர்பிழைக்க போதுமானவற்றை அடைய உறுதியளிக்கிறது. பரிவுணர்ச்சி என்பது உறுப்பினர்கள் தங்களுடைய மூலாதாரங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் ஒன்றாக வைத்திருக்கச் செய்கிறது.

பழங்குடியின வாதம் இப்போதுள்ள நவீன மனிதர்களிடத்தில் எப்படி வெளிப்படுகிறது? இந்த பூமி வெப்பமடைந்து கொண்டிருக்கிறது, இதை மறுப்பவர்கள் அறிவியலை இகழ்வதோடு மட்டுமல்லாமல், காலநிலை மாற்ற கருத்தியலாளர்களை ஏளனம் செய்யவும் தவறுவதில்லை. ஸ்வீடனின் காலநிலை மாற்றப் போராளியான, 16 வயதே நிரம்பிய கிரேட்டா தன்பெர்க் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாகவே கிண்டல் பேச்சுக்களை அள்ளி வீசுகிறார். “ அந்தப் பெண் ரொம்பவே பாவம். கிரெட்டா தன்னுடைய கோபக் கட்டுப்பாட்டு பிரச்சினையை சரிசெய்துகொள்ள வேண்டும், பிறகு ஒரு நல்ல பழைய திரைப்படத்தை நண்பர்களுடன் சென்று பார்க்க வேண்டும்! கூல் கிரெட்டா, கூல்!” என்கிறார் டிரம்ப். பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்ஸனரோ இன்னும் மோசமாக சென்று துன்பெர்க்கை ‘குட்டிச் சாத்தான்’ என்கிறார். அவர்களுடைய லட்சக்கணக்கான தொண்டர்களும் இதே கருத்தை பிரதிபலிக்கிறார்கள்.

நம்முடைய உயிரினம் இப்போது ஆந்த்ரோபோஸின் யுகத்தில் (Anthropocene – புவியில் மனித ஆதிக்கத்தின் உச்சநிலை) அடியெடுத்து வைத்திருக்கிறது, ஆனால் ஒருமித்த கருத்துதான் எங்குமே காணப்படவில்லை. அறிவியலை கேலிசெய்வது காலநிலை மாற்ற பிரச்சினைகள் என்பதற்கும் அப்பால் விரிந்து செல்கிறது. ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் மருத்துவ நிபுணரான Dr. Fauci, இப்போது தீவிர வலதுசாரிகளின் விஷமச் சொற்களுக்கு இலக்காகியிருக்கிறார். டிரம்பின் கருத்துக்களோடு முரண்பட்டதும், அவருடைய தவறான கருத்துக்களை சரிசெய்ததுமே Dr. Fauci மேற்கொண்ட காரியங்கள். கோவிட்-19 பற்றிய தவறான தகவல்களை பரப்புவதில், டிரம்ப் ஆதரவாளர்களுடைய ஒரு பகுதியினர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நியூரெம்பெர்க் விசாரணை நடைபெற்ற 1946, ஏப்ரல் 18 அன்று, நாஜி ராணுவத் தலைவராக இருந்த ஹெர்மன் கோயரிங்(1893–1946) சொன்னதை இங்கே குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்: “குரல் எழுப்புகிறவர்களோ, எழுப்பாமல் இருப்பவர்களோ, இந்த மக்களை எப்போதுமே தலைவர்களின் கட்டளைக்கு கீழ்பணியச் செய்துவிட முடியும். அது மிகவும் சுலபம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மக்களிடம் சென்று, அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், தேசப்பற்று இல்லாமல் நாட்டை ஆபத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் போர் எதிர்ப்பாளர்களை புறக்கணித்து விடுங்கள் என்பதையும் சொல்ல வேண்டியதுதான்.”

தமிழில்: இரா.செந்தில்

Ron Newby உயிரியல் ஆராய்ச்சியாளர்.

The Bronowski Art&Science Forum நிறுவனர் மற்றும் இயக்குநர்.

இவருடைய புத்தகங்கள்:

Homo sapiens, A Liberal’s Perspective, (2014).

The Nature Of Humans: Why We Behave As We Do (2016).

Tribalism, An Existential Threat to Humanity (2020)

Source: countercurrents.org

Total Page Visits: 268 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *