கொரோனா ஊரடங்கு எனும் பெரும் புறப்பாடு – பிரேம் வர்மா

மிகப் பெரும்பான்மையாக உள்ள ஏழை மக்களின் தேவைகள்
 மற்றும் கோரிக்கைகளுக்கு மிகக்குறைவான கவனம் செலுத்துவதும்,
அவர்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டுமே தவிர
அதற்கு மேலாக ஏதும் கேட்கக்கூடாது என நினைப்பதும்
 இந்த நாட்டில் ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது.

 

நாட்டின் மீது 21 நாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டது ஏன் என்று யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை. சமூகரீதியான தொடர்பின் காரணமாக கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதே மக்கள் விலகி இருக்க வேண்டும் என்பதன் கருத்தாக்கம். பேரழிவுடன், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் பரவிக்கொண்டிருப்பதைப் போல் இந்த வைரஸ் இங்கேயும் பரவக்கூடாது என்பதற்காக மக்களை பிரித்து வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த மிகப்பெரிய நாட்டில் ஊரடங்கை இறுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட நேரம் மற்றும் முறையைத்தான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாம் மார்ச்-21 அன்று தன்னார்வத்துடன் ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டோம், அது மார்ச் 22 வரை அடுத்த 24 மணிநேரத்திற்கும் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகும் நமக்கு 21 நாட்களுக்கான ஊரடங்கு தேவை என்றால், வரப்போகும் 21 நாட்கள் ஊரடங்கைப் பற்றி நாம் மக்களுக்கு எச்சரித்திருக்க வேண்டும், இந்த மிக நீளமான நிகழ்வுக்கு தங்களை தயார்நிலையில் வைத்துக்கொள்ளும்படி அவர்களை கேட்டிருக்க வேண்டும். இந்த தயார்படுத்தலுக்கு ஒரு வாரமாவது காலக்கெடு விதித்திருக்க வேண்டும், அப்படிச் செய்திருந்தால் தங்களுடைய சொந்த ஊரில் இருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள் தங்களுடைய நகரத்திற்கோ/கிராமத்திற்கோ சென்றுசேர அவரவர் மாநில அரசாங்கத்தின் பேருந்துகள், ரயில்கள் மற்றும் பலவகையிலான, முறைப்படியான போக்குவரத்து வழிமுறைகளின் மூலமாக உதவி செய்திருக்க முடியும்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், 22-ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கும் 21 நாட்கள் ஊரடங்களை அதே 22-ஆம் தேதி இரவு நம்முடைய பிரதமர் திடீரென்று அறிவித்ததுதான். இது மக்களை பீதியடைய வைத்து, பெருமளவில் பொருட்களை வாங்கிக் குவிக்க வைத்தது. அடுத்து வந்ததுதான் இன்னும் மோசமான விஷயம்.

நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோயின, வீட்டு உரிமையாளர்கள் இந்த பாவப்பட்ட தினக்கூலி மக்களை தங்கள் வசிக்கும் இடத்தைவிட்டு காலிசெய்யுமாறு சொல்லத் தொடங்கினர். கொரோனா பயம், வாழ்வாதாரம் மற்றும் தங்குமிட இழப்பு ஆகியவற்றினால் இந்த தினக்கூலி மக்களில் பெரும்பகுதியினர் தங்களுடைய பாதுகாப்பு கருதி தங்களுடைய குடும்பம் மற்றும் கிராமம்/நகரத்திற்கு திரும்பிச் செல்லுகின்ற நீண்ட பயணத்தை தொடங்கினர். தங்களைப் பற்றி அக்கறைப்படுகின்றவர்கள் யாருமில்லாமல் கேட்பாரற்று போய்விட்டதால், ஒரு பிரம்மாண்டமான புறப்பாட்டை மேற்கொண்ட இந்த பாவப்பட்ட குடிமக்கள் நம்முடைய சாலைகளிலும், நகரங்களிலும் நிறைந்து காணப்படுகிறார்கள்.

என்னுடைய குடும்பத்தைவிட்டு விலகி, தொலைவில் உள்ள ஒரு விரும்பத்தகாத நகரத்தில் பணமோ, உணவோ, தங்குமிடமோ இல்லாமல், என் தலைக்கு மேல் கொரோனா வைரஸ் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மாட்டிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். தங்களுடைய வீடுகளில் சௌகரியமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் தலைவர்களுக்கு இந்த தினக்கூலி தொழிலாளர்களின், இப்படிப்பட்ட சாமானிய மக்களின் பதட்டத்தையும் பயத்தையும் பற்றி ஏதேனும் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இத்தகைய முடிவுகளால் ஏற்படும் துயரத்திற்கு எத்தகைய முக்கியத்துவமும் கொடுக்காமலேயே, இப்படியான பேரிடர் நிகழ்வுகளை திட்டமிட்ட நம்முடைய நாட்டையும், நாட்டின் தலைவர்களையும் நினைத்து வெட்கப்படத்தான் வேண்டியுள்ளது.

மிகப் பெரும்பான்மையாக உள்ள ஏழை மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு மிகக்குறைவான கவனம் செலுத்துவதும், அவர்கள் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டுமே தவிர அதற்கு மேலாக ஏதும் கேட்கக்கூடாது என நினைப்பதும் இந்த நாட்டில் ஒரு ஃபேஷனாகவே மாறிவிட்டது. அதேநேரத்தில், பணம்கொழிக்கும், கேவலாமான செல்வச் சீமான்களால் பல-கோடி ரூபாய் செலவழித்து திருமணங்களை நடத்திக் கொண்டாடவும், இந்த பாவப்பட்ட பெரும்பான்மை மக்கள் கடும் உழைப்பில் கொண்டுவந்த கனிகளை ருசிக்கவும் முடிகிறது.

ஏழை மக்களுக்கும், தேவையுள்ளவர்களும் உதவும் வகையிலான எந்தவித முன்னேற்பாடும் இல்லாத 21 நாட்கள் ஊரடங்கு என்பது என்னவென்றால், நம்முடைய தினசரி பொருளாதாரத்தை தலையில் தாங்கியிருக்கும் இந்தப் பெரும் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தேவையில்லாத சுமையை ஏற்றி வைப்பதுதான். இனியும், போதுமான எச்சரிக்கையோ தயார்படுத்தலோ இல்லாமல் இந்தத் தவறினை மறுபடியும் நிகழ்த்தாமல் இருப்போம்.

தமிழில்: மர்மயோகி

பிரேம் வர்மா – ஒருங்கிணைப்பாளர், Jharkhand Nagrik Prayas,

Ranchi, Jharkhand

Source: countercurrents.org

Total Page Visits: 185 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *