கொரோனா ஊரடங்கை அமல்படுத்திய கேங்ஸ்டர்கள்: இது பிரேசில் பாணி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் அதிபர் போல்ஸனரோ
கொரோனா வைரஸை ‘லிட்டில் ஃப்ளூ’ என்று அழைத்ததை அடுத்து
பிரேசில் கேங்ஸ்டர்கள்
ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.

பிரேசில் அதிபர் ஜேர் போல்ஸெனரோ இந்த கொரோனா தொற்றுப்பரவலை “லிட்டில் ஃப்ளூ” என்று தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், ரியோ டி ஜெனிரோ நகரின் சேரிப்பகுதிகளை நீண்டகாலமாக ஆண்டுவரும் கிரிமினில் கேங்குகள், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தங்களுடைய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

கேங்ஸ்டர்களால் வெளியிடப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் செய்திகள் ரியோ டி ஜெனிரோ நகரை சுற்றுவருகின்றன. ஒரு கேங் வெளியிட்டுள்ள செய்தியில், “இரவு 8 மணியில் இருந்து ஊரடங்கு அமலாகிறது. இந்த நேரத்திற்குப் பிறகு தெருவில் காணப்படுகின்ற யாரும் அடுத்தமுறை அதை எப்படி மதிப்பதென்று கற்றுக்கொள்வார்கள்,” என சொல்லப்பட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், “மக்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறோம். இந்தப் பிரச்சினையை சரிசெய்ய அரசாங்கத்திற்கு திறனில்லை என்றால், ஆர்கனைஸ்டு கிரைம் அதை தீர்த்துவைக்கும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரமே, 2,200-க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கள் பிரேசில் சுகாதார அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 15 நாட்களில் நாட்டின் பொது சுகாதார அமைப்பு குலைந்துபோக வாய்ப்புள்ளது என கவர்னர் வில்ஸன் விட்ஸல் தெரிவித்துள்ளார்.

கிரிமினல் கேங்குகளும், தீவிரவாதக் குழுக்களும் ஊரடங்கு விதித்திருப்பதற்கு மேலாக, அவர்களுடைய “திறந்தவெளி போதைப்பொருள் சந்தைகளும்” மூடப்பட்டுள்ளன. கேங்ஸடர்கள் நகரை சுற்றிவந்து, குடியிருப்புவாசிகளிடம் சத்தமாக எச்சரிக்கை செய்தி விடுப்பதாக அந்நகர செய்தித்தாளான Extra தெரிவித்துள்ளது. மேலும், கேங்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், “இதை யாரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளாத காரணத்தாலேயே நாங்கள் இந்த ஊரடங்கை பிறப்பித்திருக்கிறோம். இந்த நேரத்தில் தெருக்களில் சுற்றிக்கொண்டிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்பட்டு, முன்னுதாரணம் ஆக்கப்படுவார்கள். எதுவும் செய்யாமல் வீட்டில் இருப்பதே நல்லது,” என கூறப்பட்டுள்ளது.

பிரேசில் மக்கள் இந்த நோய்ப்பரவலை “பணக்கார நோய்” என்றே புரிந்து கொண்டுள்ளனர். இந்த வைரஸ், ஐரோப்பாவில் இருந்து திரும்பியிருக்கும் நாட்டின் பணக்காரர்களிடம் இருந்தே வந்துள்ளதாக அவர்கள் நம்புகின்றனர். இப்போது, இந்த நோய்ப்பரவல் சுகாதார பராமரிப்பு பற்றாக்குறையாக உள்ள ஏழ்மை சமுதாயங்களிடமும் பரவியுள்ளது.

கைகளை கழுவிக்கொள்வதற்குகூட தண்ணீர் வசதி இல்லாத, பெரும் மக்கள் அடர்த்திமிக்க பகுதியில் இந்த நோய் பரவுவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவ வசதி என்பதே கிடையாது.

கடந்த, 2014-17-ஆம் ஆண்டுகளில், அதற்கு முந்தைய 100 வருடங்களில் ஏற்பட்டிராத வறட்சியையும், தண்ணீர் பற்றாக்குறையையும் பிரேசில் எதிர்கொண்டது. கடந்த வருடம் ஏற்பட்ட அமேஸான் காட்டுத்தீ பிரேசிலின் பெரும் வனப்பகுதியை சாம்பலாக்கியது.

Source: theprint.in

Total Page Visits: 252 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *