நான் ஏன் திரைப்படம் எடுக்கிறேன்? – ரித்விக் கட்டக்

நான் கலைஞனல்ல. திரைப்படக் கலைஞனுமல்ல. என்னைப் பொறுத்தவரை திரைப்படம் ஒரு கலை வடிவமே அல்ல. நான் என்னுடைய மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு கருவியாகவே திரைப்படத்தைப் பயன்படுத்துகிறேன். நான் ஒன்றும் சமூகவியல் அறிஞனல்ல, அதனால் என் திரைப்படங்கள் மக்களை மாற்றிவிடும் என்று கற்பனை செய்து பார்ப்பதில்லை.
ஒரே ஒரு படைப்பாளியால் மக்களை மாற்றிவிட முடியாது. அவர்கள் தாங்களாகவே மாறிக்கொண்டிருக்கிறார்கள். மாறிவரும் உலகை பதிவு செய்வதுதான் என் வேலை. என் மக்களின் வேதனைகளையும் துன்பங்களையும் கண்டு எனக்கு ஏற்படும் கோபத்தை வெளியிடுவதற்கான ஒரு கருவிதான் திரைப்படம். மக்களின் மகிழ்ச்சிகள், துன்பங்கள், ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் ஆகியவற்றை திரைப்படத்தைவிட இன்னும் வலுவாகவும், நேரடியான முறையிலும் வெளிப்படுத்தக்கூடிய வேறொன்றை மனித மூளை நாளை கண்டுபிடிக்கலாம்.
ரித்விக் கட்டக் – திரை படைப்பாளி