“சமூக விலகல் அல்ல”, நோய் விலகல்தான் – காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மார்ச் 24 அன்று தேசிய ஊரடங்கை அறிவித்துவிட்டு, இந்த கொரோனா தொற்றில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற “சமூக விலகல்தான்” ஒரே தீர்வு என்று அறிவித்தது முதற்கொண்டே, இந்தியாவில் உள்ள முதலமைச்சர்கள் எல்லோருமே இதே சொல்லாக்கத்தை பயன்படுத்தி வருகின்றனர். நாம் இதனை ‘நோய் விலகல்’ என்றுதான் பயன்படுத்த வேண்டுமே தவிர சமூக விலகல் என்று பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் பல்லாயிரம் வருடங்களாகவே சமூகத் தீண்டாமையையும், சாதிய விலகலையும் கண்டுவந்துள்ள நாடுள்ளதான் இந்தியா. இது தேசிய உளவியலுக்குள் சென்றுவிடுமேயானால், எதிர்காலத்தில் தீண்டாமையையும், சாதியத்தையும் அது இன்னும் மோசமாக்கவே செய்யும். இந்தியா ஒன்றும் ஐரோப்பாவோ, அமெரிக்காவோ அல்லது சீனாவோ அல்ல. இது பல்லாயிரம் ஆண்டுகளாக சமூக விலகலை கடைபிடித்த வந்துள்ள நாடு.

துரதிஷ்டவசமாக, ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியவை உலகிலேயே மிகப்பெரிய அமைப்பரீதியாக்கப்பட்ட வலையமைப்பு என சொல்லிக்கொள்கிறது. ஆனால் அவர்களுடைய தொண்டர்களை ஏழைகள், அரைப்பட்டினி தொழிலாளர்கள், நாடு முழுவதிலும் பிச்சைக்காரர்களிடையே பார்க்க முடியாது, ஏனென்றால் ஆட்சியாளர்களே அவர்கள்தான். தங்களுடைய அமைப்புக்களின் வழியாக ஏழைகள், வேலைவாய்ப்பற்றவர்கள், பிச்சையெடுப்பவர்கள், நாடோடிகள், நிரந்தர குடியிருப்பற்றவர்கள் போன்றோரை காப்பாற்றுவதற்கு மோகன் பாகவத்தோ, அமித் ஷாவோ தேசிய அழைப்பு எதையும் விடுத்துள்ளதாக தெரியவில்லை. இந்துத்துவா அமைப்புக்கள் எதுவும் பிச்சைக்காரர்களுக்கோ, ஆதரவற்றவர்களுக்கோ, நகர்ப்புற சேரிகளில் வாழும் ஏழைகளுக்கோ உணவு மற்றும் தண்ணீர் என எதுவும் வழங்கவில்லை. தேசியவாதம் என்றால் இதுபோன்ற நெருக்கடியில் ஏழைகளின் வாழ்க்கையை காப்பாற்றுவது என்றுதான் அர்த்தம்.

ஜோதிராவ்  புலே மற்றும் சாவித்ரிபாய் புலே

யாரும் “சமூக விலகல்” என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் எனவும், பதிலாக நோய் விலகல் அல்லது கொரோனா விலகல் என்பதைப் பயன்படுத்துமாறும் நான் எல்லா அமைப்புக்களையுமே கேட்டுக்கொள்கிறேன். பூனாவில், 1897-ஆம் ஆண்டில் ஏற்பட்ட புபோனிக் பிளேக்கின்போது ஏழைகளுக்கு சேவை செய்து மடிந்த சாவித்ரிபாய் புலே மற்றும் அவரது மகன் டாக்டர்.யஷ்வந்தராவ் புலே காலத்தில் இருந்தே நாம் இந்த சாதிய சமூக விலகலுக்கு எதிராக போராடிக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் அந்தப் போராட்டத்தை மறுபடியும் வலுப்படுத்த வேண்டும். ஏழைகள் இந்த நோயில் இருந்து மட்டுமல்லாமல் பட்டினியில் இருந்தும், குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்தும் காப்பாற்றப்பட வேண்டும். கேரளத்தினரைப் போன்று ஏழைகளிலும் ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலம் இந்த தேசத்தை காப்பாற்றுவோம்.

தமிழில்: மர்மயோகி
Total Page Visits: 129 - Today Page Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *