நாவல் கொரோனா வைரஸ் அறிந்ததும் அறியாததும் – த.வி.வெங்கடேஸ்வரன்

நோய் அறிகுறி இல்லை என்றாலும் கிருமி தொற்று உள்ளவர்கள் அனைவரும் தொற்று பரப்ப முடியும்.
தும்மல் இருமல் வரும்போது மூக்கையும் வாயையும் துணியால் மூடிக்கொள்வது
தொற்றுப் பரவலை குறைக்கும். 
கிருமி தொற்று உள்ளவரின் உமிழ்நீர், சளி மற்றும் மலத்தில் கிருமி இருக்கும். 

தொற்று

தொண்டை மற்றும் நுரையீரல் புறத்தோல்களில் உள்ள செல்களில் மட்டுமே SARS-CoV-2 கிருமி தொற்ற முடியும். இந்த செல்களில்தான் ACE2 எனும் ஏற்பிகள்(Receptors) உள்ளன ACE2 ஏற்பிகளுடன் மட்டுமே SARS-CoV-2 பற்றிக்கொண்டு செல்களுக்குள் புகமுடியும். எனவே ACE2 ஏற்பிகள் இல்லாத தோல் மூலம் இந்த வைரஸ் உடலில் புக முடியாது.  யானை தன் தலையிலே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் என்பது போல, இந்த வைரஸ் நமது கைகளின் வழியேதான் கண், வாய், அல்லது மூக்குப் பகுதியை அடைந்து, தொண்டை மற்றும் நுரையீரலுக்குள் செல்லும். எனவே அடிக்கடி கைகளை சோப்பு போட்டு இருபது நொடிகள் தேய்த்து சுத்தம் செய்வதன் வழி தொற்றுப் பரவலை தடுக்கலாம்.

தொற்று ஊட்டு அளவு

சிறுகுரங்கின் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மூக்கு தொண்டை வழியே குறைந்தபட்சம் 7,00,000 PFU டோஸ் ஊட்டு அளவு கிருமி செலுத்தப்பட்ட பின்னர்தான் தொற்றுநோய் ஏற்பட்டது. நோய் அறிகுறி தென்படவில்லை என்றாலும் அதன் உமிழ்நீர் மற்றும் மூக்குசளி திவலைகளில் வைரஸ் இருந்தது. அதேபோல செயற்கையாக ACE2 ஏற்பிகளை பொருத்தி மரபணு மாற்றம் செய்த எலிகளில் சோதனை செய்தபோது, 240 PFU டோசிலேயே SARS கிருமி தொற்று ஏற்படும் நிலையில், SARS-CoV-2 தொற்று ஏற்பட 70,000 PFU தேவைப்பட்டது.

நோய்பரப்புகிற காலம்

கிருமி தொற்று ஏற்பட்ட ஒருவர் எவ்வளவு நாட்கள் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுத்த முடியும் என்பது உறுதியாக தெரியாது. சுமார் 10-14 நாட்கள் என மதிப்பீடு செய்கிறார்கள். கிருமி தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் வாய்ப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி செயற்கையாக தொற்றுப்பரப்புகிற காலத்தை குறைப்பதன் மூலம் தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்துகிறார்கள். மருத்துவமனையில் தனி படுக்கைகளில் அனுமதித்தல், வீட்டுக்குள்ளேயே தனிமைபடுத்தல்,  ஊரடங்கு முதலியன இதற்கு பயன்படுத்தப்படுகிறது.

யார் யாரால் தொற்று பரப்ப முடியும்?

நோய் அறிகுறி இல்லை என்றாலும் கிருமி தொற்று உள்ளவர்கள் அனைவரும் தொற்று பரப்ப முடியும். தும்மல் இருமல் வரும்போது மூக்கையும் வாயையும் துணியால் மூடிக்கொள்வது தொற்றுப் பரவலை குறைக்கும்.  கிருமி தொற்று உள்ளவரின் உமிழ்நீர், சளி மற்றும் மலத்தில் கிருமி இருக்கும்.

எப்படி தொற்று பரவுகிறது?

எச்சில், தும்மல், மூக்குசளி திவலைகள் வழியேதான் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. அதுவும் ஆறு அடி தொலைவுக்குத்தான் பரவும். அதனால்தான் காய்கறிக்கடை முதலிய பொது இடங்களில் ஒருவருக்கு ஒருவர் மத்தியில் 1.5 மீட்டர் இடைவெளி விட்டு இருக்க அறிவுறுத்துகிறார்கள். பாதுகாப்பு இடைவெளிவிட்டு இருப்பதன் மூலம் சுமார் 44% அளவுக்கு பரவலை குறைக்கலாம் என ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. கதவுகளின் கைப்பிடி, செல்பேசிகள், லிப்ட் பொத்தான்கள் மற்றும் கவுண்டர் மேசைகள் முதலியவற்றை தீண்டுவதன் வழியாகவும் பரவ முடியும், என்றாலும் இவற்றால் உண்மையாகவே எவ்வளவு தொற்றுப் பரவல் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வுத் தடயங்கள் இல்லை. பொது இடங்களில் கைவிரல்கள்(கை) புழங்கிய பிறகு எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக  கைகளை சுத்தம் செய்வது நலம்.

எவ்வளவு பேருக்கு தொற்று செய்கிறோம்?

சராசரியாக தொற்று ஏற்பட்ட ஒருவர் 2.2 முதல் 3.1 நபருக்கு கிருமியை பரப்புவார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன. இடைவெளி விட்டு அணுகுவதன் வழியும், தனிமைப்படுத்துதல், ஊரடங்கு அமலின் மூலமாகவும் செயற்கையாக பரவு விகிதத்தை குறைக்கலாம்.

எங்கிருந்து வந்தது?

வௌவால் சூப் குடித்ததால் நிச்சயம் வரவில்லை. உணவை சமைக்கும் போது வெப்பத்தில் வைரஸ் மடிந்துவிடும். துவக்கத்தில் வௌவால்களிடமிருந்து மனிதனுக்கு SARS-CoV-2  வைரஸ் தாவியது என கருதினர். சமீபத்திய மரபணு ஆய்வுகளுக்கு பிறகு வௌவால்களில் தோற்றுவாய் இருந்தாலும் இடையே வேறு ஒரு விலங்குக்கு தாவிய பின்னர்தான் மனிதனிடம் வந்து சேர்ந்தது என புலனாகியுள்ளது. வேறு ஒரு ஆய்வு பலகாலமாக இந்த வைரஸ் மனிதர்களிடம் சுற்றிக் கொண்டிருந்தது எனவும், சமீபத்தில்தான் வீரியம் கொண்டதாக மாறியது எனவும் கூறுகிறது.

எப்படி பரிணமித்தது?

மனிதனுக்கு நோய் ஏற்படுத்தவல்ல திறன்கொண்ட SARS-CoV-2 வைரஸ் முதலில் விலங்குகளில் பரிணமித்த பின்னர் தற்செயலாக மனிதரிடம் தாவியது, அல்லது அவ்வளவாக நோய் ஏற்படுத்தும் குணம் இல்லாமல் மனிதரிடம் குடிபுகுந்த பின்னர் நோய் ஏற்படுத்தும் குணம் கொண்ட SARS-CoV-2 பரிணமித்தது என இரண்டு கருதுகோள்களை விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். மேன்மேலும் செய்யப்படும் ஆய்வுகளில்தான்  இதில் எது சரி என்பது விளங்கும்.

SARS-CoV-2 வைரஸ் எப்போது உருவானது?

டிசம்பர் 2019 முன்னர் SARS-CoV-2 தொற்றுக்கான தடயங்கள் ஏதுமில்லை. எனினும் மரபணு தொடரை ஆராய்ச்சி செய்தபோது அக்டோபர் நடுப்பகுதியிலிருந்து டிசம்பர் நடுப்பகுதிக்குள் பிறந்துள்ளது என தெரியவருகிறது. இதன் பொருள், முதல் நோயாளி மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாகவே மனிதர்களிடம் இது பரவியிருந்திருக்கும். யாரும் இனம்காண முடியாதபடிக்கு சளி, இருமல், காய்ச்சல் என வந்து சென்றிருக்கும்.

நாய் பூனை போன்ற விலங்குகளில் இருக்குமா?

SARS-CoV-2 மரபணு பரிசோதனைக்குப் பிறகு மனிதனைத் தவிர வௌவால், புனுகுப்பூனை, குரங்கு மற்றும் பன்றிகளிடம் இந்த வைரஸால் வளர முடியும். நாய், பூனை, கோழி, ஆடு மற்றும் மாடுகளிடத்தில் வாழ முடியாது. கோழி, முட்டை உண்பதால் எந்தவித கொரோனா ஆபத்தும் இல்லை.

ஒரு முறை தொற்று ஏற்பட்டால் மறுமுறை ஏற்படுமா?

வாழ்கையில் ஒருமுறைதான் தட்டம்மை தொற்றும். அதன்பின்னர் இந்த வைரசுக்கு எதிராக நோயெதிர்ப்பு தன்மை உருவாகிவிடும். குரங்குகளில் நடத்தப்பட ஆய்வில் ஒருமுறை SARS-CoV-2  தொற்று ஏற்பட்ட பின்னர் மறுமுறை ஏற்படவில்லை. அதேபோல மனிதர்களிடமும் நோய் ஏற்பட்டு குணமான பின்னர் மறுமுறை ஏற்பட்ட தடயம் ஏதுமில்லை. ஆனால், இந்த நோயெதிர்ப்பு தன்மை ஆயுள் முழுவதும் நீடிக்குமா அல்லது சிலகாலம் மட்டுமே நீடிக்குமா என்பது இன்னமும் புதிர்தான்.

எவ்வளவு ஆபத்தானது?

COVID-19 நோய் மரணத்தை விளைவிக்கும் நோய் அல்ல. கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் சுமார் 81% மிதமான நோய் – சளி, ஜலதோஷம் முதலியவைதான் ஏற்பட்டது. சுமார் 15% நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. சுமார் 5% தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவம் பார்க்க நேர்கிறது. கிருமி தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பான்மையினருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை

யாருக்கு ஆபத்து?

மருத்துவம் பார்க்கும் மருத்துவ ஊழியர்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறனர். இத்தாலியின், லாம்பார்டியில், கொரோனா நோய்க்கு மருத்துவம் பார்த்த மருத்துவ ஊழியர்களில் சுமார்  20% கொரோனா நோயால் மடிந்தனர். பொதுமக்கள் இடையே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே இருதய நோய், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கவேண்டும்.

மரணம் எதனால் சம்பவிக்கும்?

சுவாசத் திணறல் மற்றும் சுவாசத் திணறலுடன் இருதயம் செயலிழப்பு ஆகியவைதான் மரணத்துக்கு முக்கிய காரணங்கள். நுரையீரலுக்குள் திரவம் சேர்ந்து மூச்சுவிட முடியாமல் தவிப்பதுதான் தீவிர நோய். வெண்டிலேட்டர் உட்பட செயற்கை சுவாச உதவிதான் முக்கிய சிகிச்சை. மருந்துகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன, முடிவு தெரியவில்லை.

பால் கவர் செய்தித்தாள் மூலம் கிருமி பரவுமா?

பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் சுமார் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். பால் கவரை கழுவுவதன் மூலமும், பாத்திரங்களை துலக்குவதன் மூலமும் அகன்றுவிடும். 10000 PFU அளவு SARS-CoV-2 கிருமிகளை செலுத்தி ஆய்வு செய்தபோது சுமார் ஐந்து நிமிடங்கள்தான் செய்தித்தாள் மற்றும் பருத்தி ஆடைகளில் அவற்றால் உயிர்ப்புடன் இருக்க முடிந்தது.

காற்றில் பரவுமா?

காற்றில் வெறும் 2.7 மணி நேரம் மட்டுமே அவை உயிர்ப்புடன் இருக்கும். எனவே ஊரடங்கு நேரத்தில் மொட்டை மாடி, பால்கனி முதலியவற்றில் அச்சம் இன்றி நடமாடலாம்.

வீரியம் குறைவான ரக SARS-CoV-2 உள்ளனவா?

இதுவரை பல ரகங்கள் இனம் காணபட்டுள்ளன. எனினும் பரவு விகிதம் அல்லது நோய் கடுமை தன்மையை பாதிக்கும் எந்த ஒரு மரபணு மாற்றமும் இதுவரை இனம் காணப்படவில்லை.

கோடை காலத்தில் SARS-CoV-2 மடிந்துவிடுமா?

பருவ காலங்களை சார்ந்து இதன் பரவல்தன்மை மாறுபடும் என்பதற்கான எந்தவொரு உறுதியான சான்றுகளும் கண்டுபிடிக்கபடவில்லை.

த.வி.வெங்கடேஸ்வரன் –

முதுநிலை அறிவியலாளர்,

விஞ்ஞான் பிரசார், புது டெல்லி

Total Page Visits: 57 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *