மாட்டு மூத்திர விபரீதம்: பிஜேபி தலைவர் கைது

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் என சொல்லி, மாட்டு மூத்திரம் குடிக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்த பிஜேபி தலைவர் நாராயண் சாட்டர்ஜியை கல்கத்தா காவல்துறை கைது செய்திருக்கிறது.

வட கொல்கத்தாவின் ஜோராசங்கோ பகுதியின் உள்ளூர் கட்சிப் பிரமுகரான சாட்டர்ஜி கடந்த திங்கள்கிழமை, மாட்டு வழிபாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாட்டு மூத்திரம் விநியோகித்திருக்கிறார். அவர் அதனுடைய “அற்புதமான” சக்திகளை எடுத்துக்கூறி கூடியிருந்தவர்கள் பலரையும் அதை குடிக்கச் செய்திருக்கிறார்.

அத்துடன், வீட்டுக் காவலில் இருந்த 34 வயது காவலாளி ஒருவரையும் அதை குடிக்க வைத்திருக்கிறார் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. அடுத்த நாளே, பிண்டு பிரமாணிக் என்ற அந்த காவலாளிக்கு வாந்தியும் குமட்டலும் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சாட்டர்ஜிக்கு எதிராக புகார் அளித்துள்ள அவர், அந்த மாட்டு மூத்திரத்தை “பிரசாதமாகவும், கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தாகவும்” குடிக்கத் “தூண்டியதாக” சாட்டர்ஜி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

பிரமாணிக்கின் புகார் அடிப்படையில், குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 269 (சட்டத்திற்கு புறம்பாகவோ அல்லது அறியாமலோ உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்த்தொற்றை பரப்புதல்), 278 (ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கும் வகையில் சுற்றுப்புறத்தை சீர்கெடுத்தல்) மற்றும் 114 (குற்றம் நிகழ்த்தப்படுகையில் அங்கே அதற்கு துணைபுரிவர் இருப்பது) ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த பிஜேபி தலைவர் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது. சாட்டர்ஜி கைது செய்யப்பட்டது குறித்து பிஜேபி மாநிலப்பிரிவு பொதுச் செயலாளர் சயாந்தன் பாசு, திரிணமூல் காங்கிரஸை விமர்சித்துள்ளார். “அவர் மாட்டு மூத்திரத்தை விநியோகித்திருந்தாலும், அதை வைத்து அவர் மக்களை முட்டாளாக்கவில்லை. அது மாட்டு மூத்திரம் என்று சொல்லித்தான் விநியோகித்திருக்கிறார், அவர் யாரையும் குடிக்கச்சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. அது ஆபத்தானதா இல்லையா என்று நிரூபிக்கப்படவில்லை. அதனால் எந்தவித காரணமும் இன்றி காவல்துறை எப்படி அவரை கைது செய்தது? இது முற்றிலும் ஜனநாயக விரோதமானது,” என அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

மேற்கு வங்க பிஜேபி தலைவர் திலீப் கோஷ், மாட்டு மூத்திரத்தை குடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தானும்கூட அதை குடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அவருடைய கட்சியைச் சேர்ந்தவரும், எம்பி-யுமான லாக்கெட் சாட்டர்ஜி இதனை “அறிவியல் ஆதாரமற்ற நம்பிக்கை” என்று கூறி, இதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Source: scroll.in

Total Page Visits: 60 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *