கொரோனா தடுப்பு மருந்து: விலைபேசிய டிரம்ப் – ஜேக் ஜான்சன்

தனியார் துறையினரின் முதலீடு தேவைப்படுவதால்
இதன் விலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது
– அமெரிக்க சுகாதார செயலாளர்
அலெக்ஸ் அஸர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி, உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கையில், ஜெர்மன் நிறுவனமான CureVac உருவாக்கிவரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து நேரடி உரிமையை வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் விலை பேசியுள்ளதாக, ஜெர்மன் நாடாளுமன்றவாதிகளும், அரசு அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமையன்று செய்தி வெளியாகியுள்ளது.

ஜெர்மன் செய்தித்தாளாகிய Welt am Sonntag, பெயர் குறிப்பிட விரும்பாத ஜெர்மன் அரசு அதிகாரி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள செய்தியில், கோவிட்-19 தடுப்பு மருந்திற்கான நேரடி உரிமையை அமெரிக்காவிற்கு வழங்க CureVac நிறுவனத்துக்கு டிரம்ப் நிர்வாகம் 1 பில்லியன் டாலர் கொடுக்க முன்வந்துள்ளது.

டிரம்ப் இந்த மருந்து “அமெரிக்காவிற்கு மட்டுமே” வேண்டும் என நினைக்கிறார் என்று கூறியுள்ளார் அந்த ஜெர்மன் அதிகாரி. CureVac நிறுவனம் தன்னுடைய ஆராய்ச்சியை அமெரிக்காவிற்கு மாற்றச் செய்வதற்கான முயற்சியையும் டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டதாகவும், ஜெர்மன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதைப் போல் அந்த நிறுவனத்திற்கு “பெரும் தொகை” பணம் வழங்க முன்வந்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பொழுதில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவலுக்கு பதிலளித்துள்ள பொருளாதார அமைச்சரான பீட்டர் ஆல்ட்மெயர் “ஜெர்மனி விற்பனைக்கு அல்ல” என்றும், வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியது மிகைப்படுத்தல் என்றும் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச ஒத்துழைப்புதான் இப்போது அவசியமே தவிர, ஒரு நாட்டின் சுயநலன் அல்ல,” என்று கூறியுள்ளார் ஜெர்மன் நாடாளுமன்ற சுகாதார ஆணையத்தின் உறுப்பினரான எர்வின் ரூடல்.

ஜெர்மனியில் உள்ள Tübingen நகரத்தில் மட்டுமல்லாமல், அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்திலும் தலைமையகத்தை கொண்டுள்ள CureVac நிறுவனம் குறித்தும், நெருக்கடி நிலை குறித்தும் விவாதிப்பதற்காக ஏஞ்சலா மார்கெல் தலைமையிலான ஜெர்மன் அரசாங்க அமைச்சர்கள் நேற்று(திங்கள்) ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

“CureVac நிறுவனத்துடன் அதிபர் டிரம்ப் தொடர்புகொண்டதாகவோ அல்லது டிரம்ப் அந்த நிறுவனத்துக்கு ஏதேனும் வாய்ப்பு வழங்கியது பற்றியோ வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகளுக்கு ஏதும் தெரியவில்லை,” என்று ஒரு பெயர் தெரிவிக்க விரும்பாத நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆனாலும், தன்னுடைய அலுவலர்களுக்கு தெரியாமல் டிரம்ப் அடிக்கடி தனிப்பட்ட முறையில் பேசிவருவதாகவும், அதனால் இதுபோன்று ஏதேனும் உரையாடல் நடந்திருப்பது பற்றி அதிகாரிகளால் எதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்றும் அந்த நிர்வாக அதிகாரி எச்சரித்துள்ளார்.

மேலும், கோவிட்-19 தடுப்பு மருந்து அமெரிக்காவில் உள்ள எல்லோருக்கும் கிடைக்கும் விலையில் இருக்கும் என்று வாக்குறுதி அளிக்க டிரம்ப் நிர்வாகம் மறுத்துள்ளதும் அதனுடைய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதை இலவசமாகவே வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“இது எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தவே விரும்புகிறோம், ஆனால் இதற்கு தனியார் துறையினரின் முதலீடு தேவைப்படுவதால் இதன் விலையை எங்களால் கட்டுப்படுத்த முடியாது,” என அமெரிக்க சுகாதார செயலாளர் அலெக்ஸ் அஸர் கடந்த மாதமே தெரிவித்திருந்தார்.

CureVac நிறுவனம், “பலபடித்தான தடுப்பு மருந்துகளை சோதித்துள்ளது, இப்போது அவற்றில் சிறந்த இரண்டை மருத்துவ பரிசோதனைக்கு தேர்வு செய்திருக்கிறது. இந்த பரிசோதனை மருந்துகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்படும் எனவும் அந்த தனியார் நிறுவனம் கூறியுள்ளது,” என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

CureVac நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான Dievini Hopp Biotech Holding நிறுவன்த்தின் முதன்மை செயலதிகாரி கிறிஸ்டோப் ஹெடிக், செய்தியாளர்களிடம் கூறியுள்ளபடி, “கோவிட்-19 தடுப்புமருந்தின் நேரடி உரிமையை வாங்க எந்த தேசத்தையும் அனுமதிக்கப்போவதில்லை. தனிப்பட்ட நாட்டிற்காக அல்லாமல் மொத்த உலகத்திற்கும் தடுப்பு மருந்தை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்.”

Source: commondreams.org & countercurrents.org

Total Page Visits: 412 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *