கணித மேதை அடா லவ்லேஸ் (1815-1852) – சோ.மோகனா

அடா லவ்லேஸ்!

உங்களில் யாராவது அடா லவ்லேஸ் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த  ஆங்கிலேய கணிதப்  பேரரசி அவர். கணினிக்கு வரைபடம் அமைத்தவர் ? பிறவியிலேயே கற்பனைத் திறன்மிக்க பெண். மிகச் சிறந்த எழுத்தாளர். அவர்தான் அகஸ்தா அடா கிங் லவ்லேஸின் கோமாட்டி (Augusta Ada King-Noel, Countess of Lovelace ). இதனை சுருக்கி “அடா லவ்லேஸ்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் இயற்பெயர் அகஸ்தா அடா பைரன்  என்பதே.

அடா  பேர் சொல்லும் கணினி 

கணினிக்கு அடிப்படையான முதல் நிரலை (புரோகிராம்) வடிவமைத்தவர் அடா லவ்லேஸ்தான். கணிப்பொறியின் முழுத் திறமையை/பரிமாணத்தை  அறிந்துகொண்டு பணியாற்றியவர் இவரே. கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற சாதாரண செயல்பாடுகளைத்  தாண்டியும் கணினி  அற்புதமாக  செயலாற்றுவதாக  கண்டறிந்தார். கணினியின் முதல் அல்காரிதத்தை 1843-ல் வெளியிட்டவர் அடா லவ்லேஸ்

கணினி கணினி 

இன்று கணினியைத் தவிர்த்துவிட்டு இந்த உலகைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. சிறு குழந்தையிலிருந்து நவீன உலகில் பணியாற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானி வரை கணினியின்றி செயல்பாடு இல்லை.  கணினிக்கு வன்பொருள்(Hardware) கட்டமைப்பு தேவையான அளவுக்கு, மென்பொருள் தரவுகளும் அவசியம். மென்பொருளை மையமாகக் கொண்டு உயர்கல்வி, வேலைவாய்ப்பு, தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும்  தொழில்நுட்பம் என நவீன உலகம் இதுவரை இல்லாத அளவு றெக்கை கட்டி பறக்கிறது.  இதற்காண விதை போட்டவர், அடித்தளமிட்டவர் அடா லவ்லேஸ் என்ற கணித மேதைதான்.

அடாவின் பிறப்பு 

அடா லவ்லேஸ் யாருடைய மகள் தெரியுமா? புகழ்பெற்ற காதல் ரசம் சொட்டும் கவிதைகளின் சொந்தக்காரார், படைப்பாளி ஆங்கில கவிஞர் லார்ட் ஜார்ஜ் கோர்டான் பைரனின் (Lord George Gordon Byron) சட்டபூர்வமான ஒரே மகள். அடா லவ்லேசின் அன்னை பெயர் ஆன்னி இசபெல்லா மில்லிபான்கி பைரன் (Lady Anne Isabella Milbanke Byron)  மற்ற பெண்கள் மூலம் பைரனுக்கு நிறைய குழந்தைகளும் இருந்தன. அடா லவ்லேஸ் 1815, டிசம்பர் 10-ம் நாள் லண்டனில் உள்ள பிக்காடிலி என்ற இடத்தில் பிறந்தார். இவர் பிறந்த ஒரு மாதத்திலேயே பைரன் அவர் மனைவி ஆன்னி இசபெல்லாவையும், குழந்தையையும் விட்டுப்  பிரிந்துவிட்டார். பின்னர் 4 மாதத்தில் லண்டனை விட்டே  சென்றுவிட்டார். அதன் பின் லண்டனுக்கு பைரன் திரும்பவே இல்லை.

லார்ட் பைரனின் முடிவு 

லார்ட் பைரன் 1824-ல், கிரேக்கத்தின் சுதந்திரப்போரில், காய்ச்சல் ஏற்பட்டு, மிசோலாங்கி (Missolonghi) என்ற இடத்தில் உயிர்நீத்தார். அப்போது அடா லவ்லேசுக்கு வயது 8.  அதன் பின்னர் எப்போதும் அடா லவ்லேஸ் தன் தந்தையை சந்தித்ததே இல்லை. முழுமையாக  தாயின் கண்காணிப்பிலேயே வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெண்தான் அடா லவ்லேஸ்

அடாவின் கல்வித்தாய் 

அடா லவ்லேசின் அன்னை ஆன்னி இசபெல்லா அடாவுக்கு கணிதமும், தத்துவமும் சொல்லிக் கொடுத்தார். அந்த காலத்தில் பெண்கள் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது கிடையாது. பெண்களுக்கு அவை வேண்டாம், தேவையில்லை என சமூகம் கருதிய காலம் அது. அடாவுக்கு தந்தையின் குணங்கள் வந்துவிடக்கூடதே என்று கவலைப்பட்டார் அவரது அன்னை ஆன்னி பெல்லா. எதிலும் பைரனின் சாயல் கொஞசமும் இல்லாதபடி, முக்கியமாக மகளின் கவனம் கவிதை பக்கம் சாயாதபடி, ஆன்னி   பார்த்துப் பார்த்து வளர்த்தார். அது மட்டுமன்று, அடா லவ்லேசின் அன்னை ஆன்னிபெல்லாவும் கணிதத்தில் திறமைசாலிதான். லார்ட் பைரனேகூட ஒருமுறை ஆன்னி பெல்லாவை “இணை வரைபடங்களின்(parallograms)” இளவரசி என்று பெருமையுடன் பாராட்டி உள்ளார். எனவேதான் இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆன்னிபெல்லா தன மகள் அடாவுக்கு கணிதமும் அறிவியலும் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.

அடா லவ்லேஸ் சொந்த வாழ்க்கை 

அடா லவ்லேஸ் 1835-ல் வில்லியம் கிங்  என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இதானால் அடா லவ்லேஸ் மூன்றாண்டுகள் லவ்லேசின் இளவரசியாகவும், பின்னர் கோமாட்டியாவும்  வாழ்ந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அடா லவ்லேசின் கணவர் அவரை சமூக தளத்தில் மேலேற்றி  ஏராளமான உதவிகள் செய்தார். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் அடா லவ்லேஸ் தனது இரண்டு மகன்களுக்கு தந்தையின் மேலுள்ள பிரியத்தினால் பைரன் மற்றும் கோர்டான் என்று பெயர் வைத்தார். அது மட்டுமில்லை, அடா லவ்லேஸ் இறந்த பின்னர், அவருடைய விருப்பத்திற்கு இணங்க, அவளது உடல், லண்டன் நாட்டிங்காமில்(Nottingham, England) உள்ள செயின்ட் மேரி மக்டலேனே தேவாலத்தில், லார்ட் பைரனின் கல்லறைக்கு பக்கத்திலேயே வைக்கப்பட்டது.

கணிதக்காதலி அடா 

அடாவுக்கு கணிதத்தின் மீது அளப்பரிய காதல், அவள் சிறு வயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பாள். அப்போதும்கூட அடா கணிதத்தோடுதான் பேசிக்கொண்டு இருப்பாள்; கணிதத்தை கற்றுக்கொள்ள அதிக நேரம் செலவிட்டார். அவளுக்கு 12 வயதாகும்போது, அவள் பறக்க ஆசைப்படுகிறாள். எப்படி பறக்க என்று யோசித்து அவளாகவே இறக்கைகள் செய்கிறாள். இதனை அடா பறவைகளில் இறக்கைகளைப் பார்த்தும், அவை எப்படிப் பறக்கின்றன என்று அறிந்தும் பறக்கும் எந்திரத்தை உருவாக்குகிறாள். பின்னர் அதையே “பறக்கும் கலை”(The art of flying) என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதினாள். பின்னர் அது அவளின் நண்பரான சார்லஸ் பாபேஜுக்கு தெரிந்தது. அடா லவ்லேசை அவர் பறக்கும் தேவதை(Lady Fairy) என்று அழைக்கிறார்

எண்களின் தேவதை 

குழந்தைப்பருவத்த்தில் அடா லவ்லேஸ் அடிக்கடி நோய்வாய்ப்படுவார். பள்ளி செல்ல  முடியாது. இருப்பினும் கல்வியில் சிறந்து விளங்கினார். வீட்டில் உடல் நலமின்றி ஓய்வாக இருந்தார். அப்போது அடா லவ்லேஸ்  பறக்கும் எந்திரத்தின் மாடலை உருவாக்கினாள். இளம் வயதிலேயே அடாவுக்கு எண்கள் மற்றும் மொழியின் மேல் காதல் அதிகமாக இருந்தது. அவள் சமூக சீர்த்திருத்தவாதி வில்லியம் பிரென்ட், குடும்ப மருத்துவர் வில்லியம் கிங், ஸ்காட்டிஷ் கணிதமேதை மற்றும் வானவியலாளர் மேரி சோமேர்வில்லி இவர்களிடம் அடா லவ்லேஸ் ஏராளமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றார். இவர்களில் மேரி சோமேர்வில்லி  என்பவர், ராயல் வானவியல் கழகத்தில் முதல் பெண். இவர்தான் அடா லவ்லேசுக்கு சார்லஸ் பாபேஜை அறிமுகம் செய்து வைத்தவர்.

கல்வி மேலும் கல்வி 

அவரது கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆண்ட்ரூ கிராஸ், சார்லஸ் பாபேஜ், சர் டேவிட் புரூஸ்டர், சார்லஸ் வீட்ஸ்டோன், மைக்கேல் பாரடே மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் மூலம் வெளிப்பட்டது. இந்த தொடர்புகள் மூலம்தான் அடா லவ்லேஸ் மேலும் அவரது கல்வியைத் தொடர்ந்தார். அடா அவரது செயல்பாட்டை கவிதை அறிவியல் என்கிறார். அவரையே Analyst&Metaphysician என்றும் சொல்கிறார்கள்.

பருவ வயதும் கணித ஈர்ப்பு நட்பும் 

அடா லவ்லேசுக்கு 17 வயது ஆனது. அப்போது அடா, கணிதத்தில் பெருமையும், கண்டுபிடிப்புகளும் செய்த பிரிட்டிஷ் நாட்டின் சார்லஸ் பாபேஜ் என்ற கணித மேதையை அவரது ஆசானான மேரி சோமேர்வில்லி  மூலம் சந்தித்தார். பின்னர் அடா லவ்லேஸ், சார்லஸ் பாபெஜின் கணிதம் பற்றி உரையாடல் செய்கிறார். சார்லஸ் பாபேஜ் கணக்கீடு செய்யும் Difference Engine என்னும் ஒரு கணினிக்கு முன்னோடியான ஓர் எந்திரத்தை 1833-ல் வடிவமைக்கிறார். அதனைப் பார்த்து வியந்த அடா லவ்லேஸ் சார்லஸ் பாபேஜின் நண்பராகிறார். அதன் பின்னர் 18 வயது அடா லவ்லேஸ், 45 வயது சார்லஸ் பாபேஜ் இருவரும் மதிப்பிடமுடியாத அளவுக்கு கணிதத்தால் நெருங்கி வாழ்நாள் நண்பர்கள் ஆனார்கள்.  45 வயது சார்லஸ் பாபேஜ் அடாவின் வழிகாட்டி மற்றும் ஆசான் ஆனார். அடா பாபேஜ்  மூலமாக லண்டன் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் அகஸ்டஸ் டி மார்கன் உதவியுடன் கணிதத்தின் நவீன கருத்துகளைப் படித்தார். சார்லஸ் பாபேஜ்  கணக்கு போடும் வித்தியாசமான எந்திரமான கணினியின் பிதாமகன் என்பதாலும் அவரது கணித கொள்கையாலும் அடா  அவர் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். 1837-ல் சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய  கணக்கு எந்திரம் (Analytical Engine) மெகா சைசில் இருந்தது.

மொழியாக்கவியலாளர் & திட்டவியலாளர் அடா லவ்லேஸ் 

அடா லவ்லேஸ் இளம் வயதிலேயே ஒரு வரம்பெற்ற கணிதமேதை எனலாம். அவரது அறிவுத் திறமையால், 1843-ல் இத்தாலிய கணித மேதை லூய்கி மெனாப்ரியா(Luigi Menabrea) என்பவர், கணக்கு போடும் எந்திரம் (Analytical Engine) பற்றி  பிரெஞ்ச் மொழியில் ஸ்விஸ் நாட்டு அறிவியல் பத்திரிகையில் எழுதி இருந்த தகவல்களை எல்லாம் ,அந்த  எந்திரத்தின் அற்புத திறமைகள் பற்றிய தகவல்களை அடா லவ்லேஸ் அனாயாசமாக மொழிபெயர்த்தார். அத்துடன் அது பற்றி 1,௦௦௦ வார்த்தைகளில்  ஒரு விவரண குறிப்புகளையும் அத்துடன் இணைத்தார்.  லூய்கி மெனாப்ரியா எழுதியதைவிட மூன்று மடங்கு அதிகமாகவே எழுதினர். இவை எல்லாம் சேர்த்து  65 பக்கங்களுக்கு எழுதி தள்ளினார். அவை எல்லாம் லூய்கி மெனாப்ரியா சொன்னதைவிட அதி அற்புதமாக விளக்கப்பட்டு இருந்தன. சார்லஸ் பாபேஜுக்கும் எளிதில் புரியும்படி இருந்தன. மேலும் இந்த எந்திரம் இன்னும் அதிகமாக பணிபுரியக்கூடிய விஷயம் பற்றியும், அல்காரிதம் பற்றியும் அடா லவ்லேஸ் விளக்கி இருந்தார். உதாரணமாக இந்த எந்திரம் எப்படி பெர்னாலி எண்களை (Bernoulli numbers) கணக்கிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். எனவே இவற்றைப் பார்த்த கணினியின் வரலாற்றியலாளர்கள் அவைதான் கணித தகவல்களை பற்றி விளக்கிய முதல் கணினி திட்டம்/திட்டவமைப்பு  (First Computer Program)  என்றும் தெரிவிக்கின்றனர். அடா லவ்லேஸ் கணித கணக்கீடுகள் தவிர இசை குறியீடுகள்/சுரம் கூட இதன் மூலம் பயன்படுத்த முடியும் என குறிப்பிட்டார். இதையெல்லாம் செய்தபோது அடா லவ்லேசின் வயது 27 மட்டுமே.

அடாவின் உடல் நிலை 

அடாவின் உடல்நிலை 1837-லிருந்தே பாதிப்புக்குள்ளானது. முதலில் காலரா வந்தது.  பின்னர் அதன் வழியே ஆஸ்துமா தொற்றிக்கொண்டது. பின்னர் வயிறு தொடர்பாக பிரச்சினைகள். அவரது வலியைப் போக்க மருத்துவர் வலி நிவாரணியாக ஓபியத்தை அடா லவ்லேசுக்கு கொடுத்தார். அதன் பின்னர் அவரது குணம் இதனால் மாறத் தொடங்கியது. மனநிலை மாறி இதானால் மாயத் தோற்றங்கள் அவருக்கு ஏற்பட்டன

அடாவின் குறிப்புகள் 1843ல் ஆங்கில பத்திரிகையில் வெளியானது. அதில் அவரது பெயரை AAL என்றே குறிப்பிட்டிருந்தார். AAL என்பதற்கு அகஸ்டா அடா லவ்லேஸ் எனபது பொருளாகும். அவரது குறிப்பில், அடா, எவ்வாறு குறியீடுகள் ஒரு வார்த்தை அல்லது எழுத்துகள் மற்றும் பயன்படுத்தும் விதம் பற்றியும் சொல்கிறார்.

அவர் அனலிடிகல் எஞ்சின் பற்றி எழுதி முடித்ததும், அவரின் உடல்நிலை ரொம்பவும் மோசமாகிறது. அவருக்கு பலவகையான நோய்கள் உருவாகின்றது. அடா லவ்லேஸ் இறுதியாக கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். பல ஆண்டுகள் நோயுடன் மற்றும் வலியுடன்தான் வாழ்கிறார். இறுதியில் அவரது மருத்துவர் அவருக்கு வலி நிவாரணியாக ஓபியம் தருகிறார். அவர் 1852-ல், நவம்பர் 27-ம் நாள், தனது 36 வயதில் இறப்பை தழுவுகிறார்.

அடாவின் இறுதி நாள் 

இறக்கும் தறுவாயிலும்கூட தான் ஒருமுறை கூட பார்த்திராத அப்பா மேல் அவ்வளவு பாசம் கொண்டு அவரது கணவரிடம் தான் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டார்.

அடா லவ்லேஸ் 36 வயதிலியே 1852-ல், நவம்பர் 27-ம் நாள் இறந்துவிட்டார். ஆனால் அப்போது கணினி கணக்கு போடும் எந்திரம் முழுமையாக  உருவாக்கப்படவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய கணினி மொழி /திட்டம் அவரது பெயரிலேயே அடா திட்டம் மொழி(Ada programming language) என்று அழைக்கப்படுகிறது.  இன்றுவரை அப்படியே இயங்கி வருகிறது. இன்று நீங்கள் கணினித்திரையில் பார்ப்பது அவரது வடிவமைப்பு செயல்பாடுதான். அதன்பின்னர் அதுபற்றிய குறிப்புகளும் அவரது செயல்பாடும், அடா லவ்லேசுக்கும், சார்லஸ் பாபேஜுக்கும் இடையில் உள்ள நட்பு, இருவரின் திறமைகள், 2015-ல்   கிராபிக் நாவல் உருவாக்கிய, இயங்குபட அமைப்பாளர், சிட்னி படூவாவின் எழுத்துக்களில் ஏராளமான தகவல்களாக உள்ளன. அவர் இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி முழுமையாக எழுதியுள்ளார். அதனால் Scientific American  பத்திரிக்கை படூவாவிடம் அடா லவ்லேஸ் நாளின்  முக்கியம்/அவசியம் குறித்து பேசியது. அது மட்டுமின்றி 1837-43-களில் ஒரு பெண் எவ்வாறு டிஜிட்டல் அனிமேஷன் துறையில் வருவது என்பது பற்றியும் பேசியது.

இறப்புக்குப் பின்னர் பெருமை 

கணிதத்திற்கு இவ்வளவு பங்களிப்பு செய்த அடா லவ்லேசை இந்த உலகம் 1950 வரை கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் அவரது குறிப்புகள் மீண்டும் இந்த உலகில் B.V. Bowden என்பவரால் 1953-ல் மீள்துவக்கம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே அடாவுக்கு அவரது கணித பங்களிப்புகளுக்கு இறப்புக்கு பின் கிடைக்கும் ஏராளமான  விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் 1980-ல், அமெரிக்கன் பாதுகாப்புத் துறை புதியதாக ஒரு கணினி மொழியை உருவாக்கி, அதற்கு அடா எனப் பெயரிட்டு அவருக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

அடா லவ்லேஸ் நாள் 

2௦௦9-ம் ஆண்டிலிருந்து  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அடா லவ்லேஸ் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று பிரிட்டிஷ் சிவில் ஆக்சன் இடத்தின் முன்பு ஓர் உறுதிமொழி அடா லவ்லேஸ் பெயரால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில்(Science, Technology, Engineering, and Mathematics (STEM)) பங்களிப்பு செய்த பெண்களுக்கு விருது கொடுத்து அடா லவ்லேஸ் நாளாக கொண்டாடப்படுகிறது.

– பேராசிரியர் சோ.மோகனா

Total Page Visits: 39 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *