பதவி உயர்வில் இடஒதுக்கீடு மறுப்பு: சமூகநீதிக்கு விழுந்த அடி – திலீபன் செல்வராஜன்

அரசியல் காரணங்களுக்காகவே, சுதந்திரத்திற்குப் பின்னர்,

சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த

எந்த அரசாங்கமும் விரும்பவில்லை.

அப்படி செய்யப்பட்டாலும்,

 எஸ்சி மற்றும் எஸ்டி-க்களுடைய மக்கள்தொகை மற்றும் விகிதாச்சாரம்

அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கும்.

பதவி உயர்வுகளில் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்த, இரு நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு – அதாவது, இடஒதுக்கீடு அடிப்படையில் யாரும் பதவி உயர்வு கோரமுடியாது மற்றும் இடஒதுக்கீடு வழங்குமாறு மாநில அரசாங்கங்களை கீழமை நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது –   நான்கு முக்கியமான அரசியலமைப்பு கேள்விகளை எழுப்புகிறது. 1.பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையா, இல்லையா? 2. இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் அரசுக்கு வழிகாட்ட முடியுமா? 3. பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, போதுமான பிரநிதித்துவம் இல்லை என்பதற்கான டேட்டாவை வழங்க வேண்டியது அவசியமா? 4. இடஒதுக்கீடு வழங்கவேண்டியது அரசின் கடமையா?

முதல் விஷயத்தில், இது பலபடித்தான அரசியலமைப்பு விவகாரங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதால், அட்டவணை பிரிவு(எஸ்சி), அல்லது பழங்குடியின பிரிவு(எஸ்டி) நீதிபதி ஒருவரைக் கொண்ட, ஒரு பெரும் அரசியலமைப்பு அமர்வினால்தான் இதனை எதிர்கொள்ள முடியும். அதனால், இந்த வழக்கை மேல்முறையீட்டிற்கு கொண்டுசென்று, அரசியலமைப்பு விசாரணை கோரவேண்டியது ஒன்றிய அரசாங்கத்தினுடைய தார்மீக பொறுப்பாகும். 2018-ஆம் ஆண்டில், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு, கிரீமி லேயரில் இருக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை மறுத்ததையும்; ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இதனை மறுசீராய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் பதவி உயர்வுகள் குறித்த இந்த தீர்ப்பு சமூக நீதி மற்றும் வசதிவாய்ப்பற்றவர்களின் முன்னேற்றத்தை பாதிக்கிறது.

முதல் கேள்வியைப் பொறுத்தவரையில், பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வரம்பு, அடிப்படை உரிமைகள்படி அரசியலமைப்பின் பாகம் 3-இல் உறுதியளிக்கப்பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க அதிகாரமளிக்கும் அந்தப் பிரிவின் ஒரு பாகமானது, “அரசு வேலைவாய்ப்பு விஷயங்களில் சரிசம வாய்ப்புக்கானது” என்பதை சட்டப்பிரிவு 16(4) மற்றும் 16(4A) ஆகியவை குறிப்பிடுகின்றன. சம உரிமை என்பது அரசியலமைப்பின் முகவுரையிலும் பேணிக்காக்கப்படுகிறது. இடஒதுக்கீடு என்பது சட்டப்பிரிவு 16-க்கு (சம உரிமை) எதிரானது என உள்நோக்கம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பிறப்பின் அடிப்படையில் காலம்காலமாக அநீதி இழைக்கப்பட்டதன் காரணமாக, பின்தங்கிய வகுப்பினருக்கு சமமான வாய்ப்புகள் இல்லாத நிலையில், அவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு உரிமை உண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வேறு வகையில் சொல்வதானால், சாதிகளுக்கிடையில் சமன்பாட்டை ஏற்படுத்த வேறு எதுவும் இல்லாத நிலையில்  சம உரிமை என்பதே இடஒதுக்கீட்டிற்கான அடிப்படையாகிறது. சட்டப்பிரிவுகள் 16(2) மற்றும் 16(4) ஆகியவை இயல்பிலேயே முரண்பாடு கொண்டவையோ அல்லது பரஸ்பரம் நேரடியானவையோ கிடையாது. உண்மையில், அவை ஒன்றை மற்றொன்று பூர்த்தி செய்பவை; சட்டப்பிரிவு 16(4) என்பது ஒன்றும் பிரத்யேகமான ஷரத்து அல்ல. இத்தருணத்தில்தான், இடஒதுக்கீடுகளை பதவி உயர்களுக்கும் பொருத்தலாமா என்ற கேள்வி எழுகிறது?

இதற்கான பதில், ஆமாம் என்பதுதான். ஏனென்றால், சாதிகளுக்கென்று திட்டவட்டமான படிநிலையாக்க அமைப்புமுறை இருக்கின்ற இந்தியாவில், எஸ்சி எஸ்டி-க்கள் அவ்வளவு எளிதாக உயர்பதவிகளுக்கு வரமுடியாதது தெளிவாகவே தெரிகிறது. பதவி உயர்வுகளில் எஸ்சி எஸ்டி-களுக்கு இடஒதுக்கீட்டை பொருத்திப்பார்க்க மறுப்பது அவர்களை பெருமளவுக்கு கீழ்மட்ட வேலைகளிலேயே முடக்கிப் போட்டுவிடுகிறது. இதனை, உயர் நீதியமைப்புகளில்கூட காணமுடியும். அதனால்தான், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவது பெரிதாக நியாயப்படுத்தப்படுகிறது, அத்துடன் அதுவே சமத்துவத்தை அடைவதற்கான உரிய வழியாகவும் இருக்கிறது. பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டிற்கு இடமளிக்கலாமா வேண்டாமா என்பது சட்ட விதிமுறைக்குரிய கேள்வியல்ல, ஆனால் இந்த தீர்ப்பு இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தடுமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது; உயர் பதவிகளுக்கென்று தனிப்பட்ட ஆள்சேர்ப்பு முறை எதுவும் இல்லாதபட்சத்தில், நியாயமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு எல்லா மட்டத்திலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பதே நியாயமானது. வேலையில் சேரும் நிலையிலும், பதவி உயர்வு நிலைகளிலுமாக இடஒதுக்கீட்டின் வரம்பை தனித்தனியாக உட்பிரிவாக்குவது சரியானதல்ல; இந்த எல்லைக்கோடு, இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தும். இப்படிப்பட்ட சமயத்தில், இடஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக கோரமுடியாது என அறிவிப்பதே சமூகநீதி வரலாற்றில் ஒரு ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும்.

இடஒதுக்கீடு வழங்குமாறு அரசுக்கு கீழமை நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? இது ஒரு சம்பந்தமில்லாத கேள்வி, ஏனென்றால் இடஒதுக்கீட்டினால் பாதிக்கப்படுவதாக சொல்லிக்கொள்ளும் முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கென்று அதிகப்படியான இடங்களை உருவாக்குமாறு ஒவ்வொரு ஆண்டும் உத்தரவுகள் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கும் நிலையில், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றத்தால் ஏன் அரசுக்கு உத்தரவிட முடியாது? சட்டப்பிரிவு 142-இன் கீழ் உச்சநீதிமன்றத்திற்கு அசாதாரணமான அதிகாரங்கள் உள்ளன, அதன்படி, “எந்த ஒரு காரணத்திற்காக அல்லது விஷயத்திற்காகவும் தனக்கு முன்னால் இருப்பனவற்றிற்கு நீதி வழங்க” எப்படிப்பட்ட உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

இடஒதுக்கீடு உள்ள மக்களுக்கு போதுமான பிரநிதித்துவம் இல்லை என்பதை நிரூபிக்க போதுமான தரவுகளை காட்டவேண்டியது அவசியமா என்பதே அடுத்துள்ள கேள்வி. இந்தக் கேள்வி அரசியலமைப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 16(4): “அரசின் அபிப்பிராயப்படி, அரசு பணிகளில் போதுமான அளவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று கருதப்பட்டால் எந்த பின்தங்கிய வகுப்பு குடிமக்களுக்கும் ஆதரவாக வேலை நியமனம் அல்லது பதவிகளுடைய இடஒதுக்கீட்டிற்கான எத்தகைய ஷரத்தையும் உருவாக்கிக்கொள்ளும் அரசின் உரிமையை இந்த சட்டப்பிரிவை தடுக்காது,” என்று குறிப்பிடுகிறது.

இவ்விடத்தில், “அரசின் அபிப்பிராயம்” என்பதை இடஒதுக்கீடு வழங்கலாமா வேண்டாமா என்ற அரசின் விருப்பம் என்பதாக புரிந்துகொள்ளலாகாது; மாறாக, எஸ்சி மற்றும் எஸ்டி-க்களின் பிரதிநிதித்துவம் போதுமான அளவில் இல்லை என அரசு கருதினால், அதற்கான இடஒதுக்கீடு வழங்கும் உரிமை அரசிடம் உள்ளது. பின்தங்கிய வகுப்பினரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுவது குறித்த தரவை சேகரிக்கும் பொறுப்பு அரசின் கையில்தான் இருக்கிறது. இதில் அவலம் என்னவென்றால், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், 1935-இல்தான், பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கடைசியாக சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்காகவே, சுதந்திரத்திற்குப் பின்னர், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நடத்த எந்த அரசாங்கமும் விரும்பவில்லை. சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு செய்யப்பட்டாலும், எஸ்சி மற்றும் எஸ்டி-க்களுடைய மக்கள்தொகை மற்றும் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கும். இந்தக் காரணத்தினால் மட்டுமே, சுதந்திர இந்தியாவில் முறைப்படி சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. மேலும், எஸ்சி மற்றும் எஸ்டி-க்கள் பிரதிநிதித்துவம் போதுமானதாக இல்லை என்று அரசு கருதினால், அரசே அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று சட்டப்பிரிவு 16(4) தெளிவாகவே குறிப்பிடுகிறது. அரசியலமைப்பில் “போதிய தரவுகள்” எனும்படியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு வழங்கப்பட்டு 70 வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் அவர்களுடைய பிரதிநிதித்துவம் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

இறுதியாக, இடஒதுக்கீடு வழங்குவது அரசின் கடமையல்ல என்று வாதிட்டால், இடஒதுக்கீட்டு உரிமைகள் என்பவை அடிப்படை உரிமைகளே ஆகும் என பகுதி 3-இல் குறிப்பிடப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அதன்படி, வாய்ப்பற்றவர்களுக்கு இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டியது அரசின் கடமையாகும். இந்த தீர்ப்பானது சட்டப்பிரிவுகள் 16(4) மற்றும் 16(4A) ஆகியவற்றை வாய்ப்பளிக்கும் ஷரத்துக்கள் என்றே விளக்கமளிக்கிறது. வாய்ப்பளிக்கும் ஷரத்துக்கள் என்றால், இந்த ஷரத்துக்களில் குறுக்கிடுவதற்கான அதிகாரத்தை அரசுக்கு அளிக்கின்றன என்பதே அர்த்தம்; உருவாக்குவதற்கான கடமை இருக்கிறது என்பதை அது குறிப்பிடாது. மாற்று அர்த்தம் கற்பிப்பது மற்றும் இஷ்டம்போல் வாசிப்பதன் மூலம் அரசியலமைப்பிற்கு விளக்கமளிப்பது ஆபத்தானது.

நிர்வாக செயல்திறன்

குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த தீர்ப்பு ஒரு முக்கியமான விஷயத்தை எழுப்பியிருக்கிறது என்பதுதான். அதாவது, எஸ்சி/எஸ்டி-களுக்கான இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான மாநில அரசின் முடிவு நிர்வாகத்தின் செயல்திறனை பாதிக்கக்கூடாது என்பதே அது. வேலைவாய்ப்பு சந்தையில் எஸ்சி/எஸ்டி-கள் நுழைவது நிர்வாகத்தின் தரத்தை குறைத்துவிடலாம் என்பதைத்தான் இது குறிப்பிடுகிறது; இதுவே பாரபட்சமானதுதான். சாதிய வகையில் நிர்வாக செயல்திறன் பாதிக்கப்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கடந்தகாலத்தில் இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்த தீர்ப்பு விரிவான சூழ்நிலைப் பொருத்தத்தை வைத்து விவாதிக்கப்பட வேண்டும் என்றே தோன்றுகிறது. மேலும், இது அரசியலமைப்பு அமர்வில் வைத்து கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற ஜனநாயகம் நிலவுகின்ற ஒரு நாட்டில், இந்திய அரசியலமைப்புகூட திருத்தியமைக்கப்படக் கூடியதே. மத்தியில் உள்ள அரசாங்கம் எஸ்சி/எஸ்டி-கள் மீது நேர்மையான அக்கறை கொண்டிருந்தால், அது தன்னுடைய அரசியல் பெரும்பான்மையை பயன்படுத்தி அரசியலமைப்பை மாற்ற முடியும்.

தமிழாக்கம்: மர்மயோகி

டாக்டர்.திலீபன் செல்வராஜன் – சமூக செயற்பாட்டாளர்

Source: thehindu.com

Total Page Visits: 36 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *