கொரானோ வைரஸும் மருத்துவ தொழில்துறையும் – வித்யாதர் ததே

கார்ப்பரேட்-மருத்துவ அமைப்பினால் ஏற்படும் மரணங்களை

சமூக கொலைகள் என்றார் எங்கெல்ஸ்.

மருத்துமனைகள் மற்றும் மருத்துவத்தைத் தாண்டியும்

சுகாதாரத்திற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சமூக-பொருளாதார வறுமை இதற்கான முக்கியக் காரணம்.

நம்முடைய கவனம் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்.

ஆனால், நாம் கார்ப்பரேட்-மருத்துவ சிண்ட்ரோமால்

அலைக்கழிக்கப்படுகிறோம்.

நம் கைகளை நாம் 20 நொடிகளுக்கு கழுவ வேண்டும் எனவும், உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தால் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் நமக்கு சொல்லப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் செய்யாவிட்டால் உங்களுக்கு என்னவாகும்? அடிப்படைத் தேவைகளுக்கே தண்ணீர் பற்றாக்குறையுள்ள, குறுகலான இடவசதியும், பங்கு போட்டுக்கொள்ளும் அறைகளும்கொண்ட சேரிகள் அல்லது முறைசாரா குடியிருப்பிடங்களில்தான் பத்துகோடி மக்கள் வாழ்கிறார்கள். ஆனாலும்கூட, இத்தகைய பின்னணியில் வாழ்பவர்கள் பாதிக்கப்படுவது குறித்து இன்னமும் விவாதிக்கப்படாமலேயே இருப்பதுதான் திடுக்கிடச் செய்கிறது.

இன்றைக்கு மருத்துவக் கொள்கைகளை தீர்மானிக்கின்ற மருத்துவ தொழிலகங்களும் கொரானோ வைரஸ் பரவலுக்கு ஆளாகியிருக்கின்றன. இப்படியான தொழிலகம், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களும்கூட சுகாதாரம் என்பது வெறுமனே தனிப்பட்ட நோயாளி, மருத்துவர், மருத்துமனை சம்பந்தப்பட்ட விஷயமல்ல என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய சுகாதாரத்தை பரந்துபட்ட அளவில் பாதிக்கின்ற, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்ற, சமூகப் பொருளாதார மற்றும் காலநிலை பிரச்சினைகள் நிறையவே இருக்கின்றன என்பதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இன்று உலகம் முழுவதிலும், (ஹைச்ஐவி/எய்ட்ஸ், ஹண்டாவைரஸ், ஹெபடைடிஸ் சி, சார்ஸ் போன்று) புதிதாக வலம் வந்துகொண்டிருப்பவை உட்பட தொற்று ஏற்படுத்தக்கூடிய பல நோய்கள் அதிகரிப்பது உண்மைதான். இது வேகமான மக்கள்தொகை பெருக்கம், சுற்றுச்சூழல், சமூக, தொழில்நுட்ப மற்றும் பிற மாற்றங்களினால் நம்முடைய வாழ்க்கை முறைகளில் ஏற்பட்டுள்ள ஒருங்கமைந்த தாக்கங்களையே பிரதிபலிக்கிறது. காலநிலை மாறுதல்கள்கூட தொற்றுநோய் ஏற்படுவதில் தாக்கமேற்படுத்தலாம் என உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

எழுத்தாளரும், இரைப்பை நிபுணருமான டாக்டர் சீமஸ் ஓமஹோனி, மருத்துவ ஆராய்ச்சியின் பயன் மற்றும் நம்பகத்தன்மை; முன்னேற்றம் எனும் அறியாமை; நம்மால் மேம்படுத்திக்கொள்ள முடியும் என்ற வீம்பான நம்பிக்கை; மிதமிஞ்சிய மருத்துவப் பரிந்துரை; பலபடித்தான மருந்துகள் பரிந்துரைப்பு; முறைசார்ந்து கொடுக்கப்படும் பல்வேறு மருந்துகளின் திறன்; கல்வித்துறைசார்ந்த மருத்துவ ஆராய்ச்சி; மருந்தே எல்லாவற்றையும் குணப்படுத்திவிடாது என்பதையும், உண்மையில் அதுவே பிரச்சினைக்கு காரணமாகலாம் என்பதையும் ஏற்க மறுக்கின்ற நம்முடைய கூட்டுத் தோல்வி; மருத்தாக்கியல் துறை மற்றும் அது பெரிதாக எட்டியுள்ள இடம் மற்றும் அதனுடைய செல்வாக்கு ஆகியனவற்றை கேள்விக்கு உட்படுத்துகிறார்.

மருத்துவத்தில் ‘பொற்காலம்’ என ஒன்று இருந்திருக்கிறது, 1930 முதல் 1980 வரையிலான இந்த காலகட்டத்தில்தான் மிகப்பெரிய முன்னேற்றங்கள் நிறைய உருவாகின. காசநோய், சின்னம்மை, போலியோ ஆகியவற்றுடன் எல்லாவிதமான கொலைகார நோய்கள் அனைத்தும் இந்த முன்னேறிய உலகில் சுத்தமாக அழிக்கப்பட்டன. அந்த பொற்காலம் முடிந்துவிட்டது. அதுமுதல் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனதான், ஆனால் அந்த 50 வருடங்களில் நிகழ்ந்த துரிதகதியிலான கண்டுபிடிப்பு மற்றும் புத்துருவாக்கத்தைப் போல் எதுவும் நடந்துவிடவில்லை. அதிலிருந்தே மருத்துவம் தன்னுடைய வழியை தொலைத்துவிட்டது.

ஒரு சீரான, கட்டுக்கோப்பான, முற்றிலும் நம்பகமான வழிமுறையில் நடத்தப்படுகின்ற மருத்துவ ஆராய்ச்சியானது அம்முறையில்தான் எல்லா நோய்களையும் படிப்படியாக குணமாக்கும் என பலரும் கருதினர். அதற்காக ஒருவர் காத்திருக்கத்தான் வேண்யிருந்தது, மற்ற எல்லாவற்றையும் ஆராய்ச்சி பார்த்துக்கொண்டது, நோய்களுக்கு நாம் இரையாவதற்கு வெகுமுன்பாகவே அவை நிவாரணங்களை கண்டுபிடித்தன. இப்போது பார்த்தால், அப்படியில்லாமலும் இருக்கலாம் என்பதைப் போலத்தான் இருக்கிறது. “தற்காலத்து உயிர்-மருத்துவ ஆராய்ச்சியே எதுவும் செய்ய முடியாமல் நோயுற்றுத்தான் போயிருக்கிறது,” என்கிறார் ஓமஹோனி. “உயிர்-மருத்துவத் துறையே தன்னுடைய வழியைத் தொலைத்துவிட்டது என்ற ஒப்புதலும் ஒருமித்த கருத்தும்கூட நிலவுகிறது. உயிர்-மருத்துவத் துறையில் 85 சதவிகிதம் வரையிலான எந்த ஒரு ஆராய்ச்சியுமே காலவிரயம்தான என மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு, வருடாந்திர அளவில் 170 பில்லியன் டாலர் (150 பில்லியன் யூரோ) செலவாகிறது.”

19-ஆம் நூற்றாண்டில்கூட இந்த விஷயம் குறித்த தீவிர கருத்தாக்கங்கள் பிரடெரிக் எங்கெல்ஸ் மற்றும் ருடால்ப் வியர்கோவ் ஆகியோரிடமிருந்து தோன்றியிருக்கின்றன. இந்த கார்ப்பரேட்-மருத்துவ அமைப்பினால் ஏற்படும் மரணங்களை சமூக கொலைகள் என்றார் எங்கெல்ஸ். நான் வியர்கோவ் பற்றி டாக்டர் பினாயக் சென்னிடம் இருந்துதான் முதல்முதலாக தெரிந்துகொண்டேன். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவத்தைத் தாண்டியும் சுகாதாரத்திற்கென்று நிறைய விஷயங்கள் இருக்கின்றன. சமூக-பொருளாதார வறுமை இதற்கான முக்கியக் காரணம். நம்முடைய கவனம் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். ஆனால், நாம் கார்ப்பரேட்-மருத்துவ சிண்ட்ரோமால் அலைக்கழிக்கப்படுகிறோம்.

உளவியல் ஆய்வாளரும் மருத்துவத்துறை பேராசிரியருமான ஜார்ஜ் எங்கெல் 1977-இல் அறிவியல் ஆய்வறிக்கை ஒன்றை பதிப்பித்தார். அதில் எந்தவிதமான டேட்டாவும் கிடையாது, சொல்லப்போனால் அதை இன்றைய காலகட்டத்தில் படித்தால் எந்தவித சுவாரஸியமும் இருக்காது, ஆனால் அதிலுள்ள 1,600 சான்றாதாரங்களும் அதனை ஒரு கிளாசிக் படைப்பாக்கியிருக்கின்றன. அவருடைய இந்த (“The Need for a New Medical Model: a Challenge for Biomedicine” (புதிய மருத்துவ மாதிரிக்கான தேவை: உயிர்-மருத்துவத்திற்கான சவால்) ஆய்வினுடைய முக்கிய சாதனையே, மருத்துவக் கல்வியில் அதனை biopsychosocial  என்ற ஒரே வார்த்தையாக நிரந்தர இடம்பெறச் செய்ததுதான்.

நேரடியான உயிர்மருத்துவ அனுகுமுறை, “தன்னுடைய வரையறுக்குள் நோய்குறித்த எந்தவிதமான சமூக, உளவியல் மற்றும் நடத்தைமுறை பரிமாணத்திற்கும் இடமளிப்பதில்லை,” என எங்கெல் வாதிடுகிறார், இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் நோயிலான இத்தகைய காரணிகளின் பங்கினை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. உண்மையிலேயே, நோய் என்பதில் உள்ள சமூக நிகழ்முறைகளின் பங்கை அடையாளம் காணுதல் என்பது எங்கெலின் பெயரைக் கொண்ட ஒருவரிடமாவது சென்றுசேர்கிறது, அவர்தான் ஃபிரடெரிக் எங்கெல்ஸ். அவர்தான் 1845 காலகட்டத்தில் வேகமாக தொழில்மயமாகிவந்த இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கத்தினுடைய அதிர்ச்சியளிக்கும் வாழ்நிலையை தன்னுடைய தொழிலாளர் வர்க்க வாழ்க்கைநிலை என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார். “இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அடித்தட்டு மக்கள் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் எப்படித்தான் வாழமுடியும்? மிதமிஞ்சிய இறப்பு விகிதம், தொடர்ச்சியான கொள்ளை நோய்கள், உழைக்கும் மக்களுடைய உடல் படிப்படியாக அழிக்கப்படுவது ஆகியனவற்றைத் தவிர்த்து வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்புகிறார் எங்கெல்ஸ்.

மார்க்சிய சிந்தனையாளரான எர்ன்ஸ்ட் ப்ளாக், வெறுமனே ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துகின்ற நம்முடைய வாழ்நிலை மேம்படுத்துநர்கள் எல்லோருமே அடித்தட்டு நடுத்தர வர்க்கத்தினர்தான், விசித்திரமான வகையில் இவர்கள் பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் மட்டுமே சாப்பிடுவார்கள், அவர்கள் உணர்வுப்பூர்வமான தாவர உண்ணிகள், அல்லது பிரத்யேகமான மூச்சுப்பயிற்சி செய்கிறவர்கள். கடுமையான ஏழ்மையுடன் ஒப்பிடுகையிலும், பலவீனமான சதையினால் அல்லாமல் சக்திவாய்ந்த பட்டினியினால் உருவான நோய்களுடன் ஒப்பிடுகையிலும், தவறான சுவாசமுறையினால் அல்லாமல் தூசி, புகை மற்றும் ஈயத்தை சுவாசிப்பதனால் ஏற்படக்கூடியவற்றோடு ஒப்பிடுகையிலும் இவை எல்லாமே ஏளனம் செய்பவைதான்.

சுகாதார நிபுணரான ப்ரித்பால் டிம்பர், சுதாதாரம் என்பது மருத்துவமனைகளாலும் சுகாதார அமைப்பினாலும் உருவாக்கப்படுபவை அல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறார். சமூக காரணிகளே (செல்வம், வீட்டுவசதி, கல்வி, மத்தியதர வர்க்க அதிகாரம் போன்றவை) சுகாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள். சுகாதாரம் என்பது வளமான, அதிகாரமும் அறிவும் மிகுந்த சுகாதார அமைப்பால் கைப்பற்றப்பட்டிருக்கிறது, அவைதான், சுகாதாரம் என்றால் என்ன, அது எப்படி அளவிடப்பட வேண்டும் என்பதை வரையறுக்கின்றன.

அதிகார அமைப்புகளின் பாரபட்சத்தினால் மருத்துவக் கல்லூரிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ள சமூக மற்றும் முன்தடுப்பு மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தரவேண்டியவை தேவை ஏற்பட்டிருக்கிறது. மிகுந்த லாபத்தையும், பணத்தையும் சார்ந்திருக்கின்ற இந்த மொத்த அமைப்புமே இதைப்பற்றி கவலைப்படுவதில்லை, சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாவதில் பெரும் பங்காற்றுகின்ற சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை குறித்தும் அது அக்கறைப்படுவதில்லை.

சுகாதார நிபுணர்களைக் காட்டிலும் படைப்பூக்கமிக்க எழுத்தாளர்களிடம் சுகாதாரம் குறித்த மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை இருந்திருக்கிறது. இப்ஸனின் அமர காவியமான மக்கள் விரோதி என்ற நாடகத்தில், சுற்றுச்சூழல் மாசுபாடே அந்நகரத்தில் நோயுறுதலுக்கான முக்கியக் காரணம் என்பதை காட்டியிருப்பார். இதில், இப்படியான கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் சீர்திருத்தவாதி சுயநல நோக்குள்ளவர்களால் எதிரியாக கருதப்படுவார். அதேபோல்தான், சார்லஸ் டிக்கன்ஸ், இங்கிலாந்தில் சுகாதார சீர்திருத்தத்திற்காக தன்னுடைய வளமான எழுத்து வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை செலவிட்டிருக்கிறார்.

தமிழாக்கம்: மர்மயோகி

வித்யாதர் ததே

– மூத்த பத்திரிக்கையாளர்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா சிறப்பு செய்தித் தொடர்பாளர்.

Source: countercurrents.org

Total Page Visits: 224 - Today Page Visits: 1

1 thought on “கொரானோ வைரஸும் மருத்துவ தொழில்துறையும் – வித்யாதர் ததே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *