அம்பேத்கர் எச்சரித்த மூன்றுவகை சர்வாதிகாரம் – காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

இந்திய உழைக்கும் வர்க்க வெகுமக்கள்

நீண்டகாலமாகவே வர்ண தர்மத்தின் கட்டுப்பாட்டில்தான்

இருக்கிறார்கள், இந்த வர்ண தர்மமே

ஆன்மீக, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகள் அனைத்திலும்

முழுமையாக வியாபித்திருக்கிறது

 

இந்திய அரசியல் சாசன வரைவை உருவாக்கும்போது, இந்த தேசத்திற்கு கற்பிக்க வேண்டியிருந்த ஜனநாயகம் மற்றும் சமத்துவ பண்புகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கப்போகும் மூன்றுவிதமான அச்சுறுத்தல்களை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அடையாளம் கண்டார். அதனால், இந்த அரசியலமைப்பு குடிமகன்களுக்கான உரிமைகளை வழங்குவதற்கானது மட்டுமாக இருந்துவிடக் கூடாது என்றும், எந்தவகையான சர்வாதிகாரமும் உருவாவதன் அச்சுறுத்தல்களையும் தடுத்து வைத்திருப்பதற்கான தடையரணாகவும் அது இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

அம்பேத்கர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் தன்னுடைய உயர்கல்வியை முடித்துவிட்டு அரசியலில் நுழையும்போது கம்யூனிஸ இயக்கங்கள் இந்த உலகை ஆட்டுவித்துக் கொண்டிருந்தன. எல்லா நாடுகளிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரட்சி வெற்றிபெற்றுவிட்டால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவிவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்தனர்.

பாட்டாளி வர்க்கம் என்பது தொழிலாளர் வர்க்கத்தை குறிக்கிறது என்பதால், ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் (இவை இந்தியாவில் சாதிகள்) பெரும்பாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்தனர். சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சாதியை – ‘தீண்டத்தகாதோராக’ கருதப்பட்ட சாதியை – சேர்ந்தவராகையால் இயல்பிலேயே அம்பேத்கரும் கம்யூனிஸ்ட்டாகத்தான் ஆகியிருக்க வேண்டும். ஆனால், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் எனும் கோட்பாட்டை அவர்கள் பிரகடப்படுத்தியதாலேயே அவர் இந்திய கம்யூனிஸத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த எதிர்ப்புணர்வு எங்கிருந்து வந்தது? அச்சமயத்தில், அவர் இந்தியாவிற்கே உரிய, சாதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, மிகவும் வன்முறையான ஒரு சுரண்டல் அமைப்பாகிய வர்ண தர்மத்தின் தீவிரமான மாணவர். இந்திய உழைக்கும் வர்க்க வெகுமக்கள் நீண்டகாலமாகவே வர்ண தர்மத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்துகொண்டார். இந்த வர்ண தர்மமே ஆன்மீக, சமூக மற்றும் அரசியல் கட்டமைப்புகள் அனைத்திலும் முழுமையாக வியாபித்திருந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும்கூட பிராமண தலைமையின் (பி.சி.ஜோஷி, டாங்கே மற்றும் ரணதிவே ஆகியோர்தான் அச்சமயத்தில் முக்கிய தலைவர்களாக இருந்துள்ளனர்) கட்டுப்பாட்டில் இருந்தபடியால், பாட்டாளி வர்க்கம் என்ற பெயரில் அவர்களே நிஜமான சர்வாதிகரிகளாக இருப்பார்கள் என்ற, ஒரு குறிப்பிடும்படியான தர்க்கப்பூர்வ முடிவிற்கு அவர் வந்தார். கம்யூனிஸம் வெற்றிபெறுமேயானால், சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகள் தொடர்ந்து பிராமண சர்வாதிகாரத்தின் கீழேதான் இருப்பார்கள் என்பதையும் அவர் புரிந்துகொண்டிருக்கிறார்.

அம்பேத்கர் காலத்தில், ஒரு சுரண்டல் கருத்தியல் அமைப்பாகவே வர்ண தர்மம் நிறுவப்பட்டிருந்தது. எல்லா அரசியல் அமைப்பாக்கங்களுமே பிராமண அறிவுஜீவிகளின் (அவர்கள் எல்லோருமே சாதிய பற்றுள்ளவர்கள் இல்லை என்றபோதிலும்) கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அவர்கள் ஆங்கிலம் கற்ற அறிவுஜீவிகள் மற்றும் தலைவர்களாக இருந்தனர். சாதிய ஒடுக்குமுறையின் தீவிரத்தை அவர்கள் முழுமையாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. அச்சமயத்தில், சூத்திரர்/தலித்/ஆதிவாசி மக்களிடையே எந்தவித அறிவுஜீவி சக்தியும் இல்லை.

நவீன காலங்களில், எந்த ஒரு சர்வாதிகார அமைப்புமே கற்றறிந்த மேட்டுக்குடியினரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் இந்தியாவிலும், சாதிய தீண்டாமைதான் இயல்பிலேயே சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறை அமைப்பாக விளங்குகிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பிராமண அறிவுஜீவிகளே (சொல்லப்போனால் அவர்கள் மட்டுமே) அந்த சர்வாதிகாரத்தை இயக்குவிப்பார்கள் என்பதை அம்பேத்கார் கண்டார். அதனால்தான், கம்யூனிஸ்ட்டுகள் குறிப்பிட்டு வந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமும், வேறொரு வடிவத்தில் சாதிய சர்வாதிகாரமாகவே இருக்கும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

இந்த காலகட்டங்களில்தான், நல்வாழ்வு மற்றும் சமூக மாற்றத்தில் கவனம் செலுத்துகின்ற, தன்னுடைய கம்யூனிஸ் மற்றும் வர்ண தர்ம எதிர்ப்புள்ள இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் வாய்ப்பு அம்பேத்கருக்கு கிடைத்திருக்கிறது. இது ஒரு மிகமுக்கியமான நேரத்தில் அவருக்கு கிடைத்த எதிர்பாராத வாய்ப்பாகும். இன்று, ஒடுக்கப்பட்ட இந்திய வெகுமக்கள், அவர் அந்தக் குடும்பத்திலும் அந்த சாதியிலும் பிறந்தது ஒரு தெய்வ அருள்தான் எனவும், அதனாலேயே, ஒரு ஜனநாயகத்தில் வாக்களிப்பதற்கான உரிமை என்ற, தங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றை அவரால் தரமுடிந்திருக்கிறது எனவும் நம்புகின்றனர்.

இரண்டாவது வகை சர்வாதிகாரம்

தன்னுடைய வாழ்க்கை அனுபவம் மற்றும் ஆய்வின் வழியாக அம்பேத்கர் எதிர்கொண்ட இரண்டாவது வகை சர்வாதிகாரம் என்ன? அதுதான் இந்திய வகைப்பட்ட வர்ண தர்ம சர்வாதிகாரம். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் குறித்து நிறைய ஆய்வுகளும் சோதனைகளும் செய்யப்பட்டுவிட்டன, ஆனால் வர்ண தர்ம சர்வாதிகாரத்திற்கு அப்படி எதுவும் செய்யப்படவில்லை. சொல்லப்போனால், இந்த வகைப்பட்ட ஒன்றுதான் இந்தியாவிற்குள் நீண்டகாலமாகவும், பல்லாயிரம் ஆண்டுகளாக அமலில் இருக்கின்ற சர்வாதிகாரமுமாக இருந்து வருகிறது.

தன்னுடைய ஆரம்பகால அரசியல் சிந்தனைகளின் அடிப்படையில், வர்ண தர்ம சர்வாதிகாரத்தின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்த அவர், இந்து மகாசபையிலோ அல்லது வேறு எந்த அரசியல் அமைப்பிலோ – இந்திய தேசிய காங்கிரஸ் – இணைந்து கொள்வதைத் தவிர்த்துவிட்டார். அரசியல் அமைப்பு வரைவு மற்றும் அவரது அரசியலினூடாக, பிரிட்டிஷார் சென்ற உடனேயே வர்ண தர்ம சர்வாதிகாரம் நிறுவப்படுவதற்கான வாய்ப்பை அடியோடு நீக்கும் பணியை அவர் மேற்கொண்டிருந்தார்.

பல வருடங்களாகவே, இந்த விஷயத்தில் அரசியல் சக்திகள் அவரை புறக்கணித்து வந்தன, ஆனால் ஆர்எஸ்எஸ்/பிஜேபி – அடிப்படையில் த்விஜர்களின் (பிராமண, பனியா மற்றும் சத்ரியர்கள்) சமூக மற்றும் அரசியல் வலையமைப்பு – முதலில் 1999-ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் அதிகாரத்திற்கு வந்துள்ளபோதுதான் அதற்கான தீவிரத்தன்மையை உணர்ந்துள்ளனர். அதிகாரத்தில் இருக்கும்போது, இந்த வலைமயமைப்பானது இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை நெருக்கடிக்குள் தள்ளவே முயற்சித்துக்கொண்டு இருக்கிறது, குறிப்பாக 2019 வெற்றிக்குப் பின்னர் இது அதிகரித்தே வந்திருக்கிறது.

ஆர்எஸ்எஸ்/பிஜேபி தன்னுடைய சர்வாதிகாரத்தை, ஜெர்மனியின் அடால்ப் ஹிட்லரைப் போன்றே ஜனநாயக வழிகளில் நிறுவ விரும்புகிறது. தங்களுடைய ‘தேசியவாத’ கருத்தியல் நாசிஸத்துடன் தொடர்புகொண்டிருக்கலாம் என மோகன் பகவத்தே சொல்லியிருக்கிறார். தங்களுடைய ஆட்சியின்கீழ் இந்தியாவின் எதிர்காலம் ஹிட்லரின் ஜெர்மனிக்கு இணையாக இருக்கலாம் என்பது உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருவதையும் அவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

சுதந்திரத்திற்குப் பின்னர் உடனடியாக டெல்லியில் வர்ண தர்ம நம்பிக்கையில்லாதவர்கள் அதிகாரத்தை அடைந்ததற்கான பெருமை அம்பேத்கரை மட்டும் சேர்ந்ததல்ல, அது ஜவஹர்லால் நேருவையும் சேரும். வர்ண தர்ம சர்வாதிகாரம் அமைவதற்கு மகாத்மா காந்தி போதுமான எல்லையை உருவாக்கிவிட்டார், தெரிந்தோ தெரியாமலோ சர்தார் வல்லபாய் படேல் அதை அனுமதிக்க விருப்பம் கொண்டார். வர்ண தர்மம் நிறுவப்படுவதற்கு மனமில்லாத ஒரே பிராமணர் நேரு மட்டும்தான், அவருக்கு அந்த அமைப்பை பற்றிய ஆழ்ந்த புரிதல் இருந்தது. அம்பேத்கருக்கும் அந்த புரிதல் இருந்தது மட்டுமல்லாது, அதனுடைய ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலில் வரலாற்றுரீதியான அனுபவமும் பெற்றிருந்தார்.

வர்ண தர்ம சர்வாதிகாரத்தின் இயல்பு மற்றும் குணவியல்பு என்றால் என்ன? இது பல அடுக்குகளில் செயல்படுகிறது, ஆனால் மற்ற எந்த வகைப்பட்ட சர்வாதிகாரத்தைக் காட்டிலும் இது மிக ஆபத்தானது. இந்த வகைப்பட்ட சர்வாதிகாரத்தில் எல்லாவிதமான கருத்தியல் மற்றும் அரசியல் முடிவுகளும் மேல்மட்டத்தில் உள்ள சிறுகூட்டத்தினரால்தான் எடுக்கப்படும். அப்படி மேல்மட்டத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் நிரந்தரமாக மேல்மட்டத்தில் இருப்பவர்களாக வரையறுக்கப்பட்டவர்கள். இந்துவாக முடியாது : ஒரு ஆர்எஸ்எஸ் தலித்தின் கதை என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதையை சமீபத்தில் வெளியிட்டிருக்கும் பன்வார் மேக்வன்ஷி சொல்வதன்படி, ஆர்எஸ்எஸ் கொள்கை வகுப்பாளர்கள் அமைப்பு என்பது 36 பேரை கொண்டிருக்கும் ஏபிபிஎஸ் (அகில பாரதிய பிரதிநிதி சபா) எனப்படுகிறது. இவர்களில் 26 பேர் பிராமணர்கள், 5 பேர் வைசியர்கள், 3 பேர் சத்ரியர்கள் மற்றும் 2 பேர் சூத்திரர்கள், ஆனால் அட்டவணைப் பிரிவினர் யாரும் அதில் கிடையாது. இந்த அமைப்பிற்கு தேர்தல் முறைப்படியல்லாமல் தேர்வுசெய்யப்படும் தலைவராகிய சர்சங்சலக் ஒரு பிராமணராகவே இருப்பார். டெல்லியில் பிஜேபி அதிகாரத்தில் இருக்கும்போது, அதனுடைய உண்மையான அதிகாரம் ஏபிபிஎஸ் மற்றும் ஆர்எஸ்எஸ் கையில்தான் இருக்கும்.

த்விஜர்கள் எனப்படும் மூன்று சிறு சமூகங்களிடமே எல்லாவிதமான ஆன்மீக, அரசு மற்றும் நிதிசார்ந்த அதிகாரங்களும் இருக்கும். முழு சூத்திர சமூகமும் அவர்களுடைய நலன்களுக்காகவே சேவை செய்யும், சமூகத்தின் மற்ற அடுக்குகளில் இருப்பவர்கள் அவர்களுக்கு கீழ்பணிந்தவர்களாக இருப்பார்கள். இல்லாவிட்டால் ஆன்மீகம், நிதிநிலை மற்றும் அரசு அதிகாரம் ஆகியவை அவர்களைத் தாக்குவதற்கு பயன்படுத்தப்படும்.

நாம் த்விஜ பத்ரலோக் என்று அழைக்கக்கூடிய இந்த மூன்று சமூகங்களும்தான் தங்களுடைய கைகளை கறைபடுத்திக்கொள்ளாமல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்தபோதும், பின்னர் பிரிட்டிஷ் ஆட்சி அமைந்தபோதும் இந்த த்விஜர்கள் அரசு அதிகாரத்தை மட்டுமே இழந்திருந்தனர். இந்த ஆட்சிகளின்போதுகூட ஆன்மீக, சமூக மற்றும் நிதிசார் அதிகாரங்கள் அவர்களிடமே இருந்தன.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்து மகாசபை மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைத்ததன் மூலம், பிரிட்டிஷார் வெளியேறிய உடனேயே வர்ண தர்ம சர்வாதிகாரத்தை மிகவும் நுணுக்கமாகவும், நவீன வழிமுறையிலும் அமைக்க வேண்டும் என்றுதான் இந்த த்விஜ பத்ரலோக் விரும்பின.

அம்பேத்கரின் பார்வையில், இந்த சித்தாந்தத்திற்கு எதிராகவே அரசிலமைப்பு அமைக்கப்பட்டது.

மூன்றாவது வகை

அம்பேத்கர் முன்கூட்டியே உணர்ந்த மூன்றாவதுவகை சர்வாதிகாரம் இஸ்லாமிய கலீபா வகைப்பட்டது. பிரிவினைக்குப் பின்னர் இந்திய முஸ்லீம்கள் அதிகாரத்திற்கு வருவதற்கும், கலீபா வகைப்பட்ட சர்வாதிகாரம் அமைவதற்கும் வாய்ப்பில்லை என்பதை அம்பேத்கர் உணர்ந்திருந்தார். ஆனாலும்கூட, பாகிஸ்தான் குறித்து அவர் புத்தகம் எழுதுகையில் இந்த அமைப்பை அவர் மிக நெருக்கமாக ஆராய்ந்திருந்தார். அநேகமாக, இந்தியாவில் அவர் அமைக்க விரும்பிய ஜனநாயகம் இஸ்லாமிய நாடுகளில், குறிப்பாக பாகிஸ்தான் போன்ற நாடுகளில் நீடிக்க முடியாது என்பதை அவர் முன்கூட்டியே உணர்ந்திருக்கலாம். இதுவும்கூட 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சரி என்றே நிரூபணமாகியிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் கல்வி கற்றதனால் மட்டுமே இந்த வகையான சர்வாதிகாரங்களை எதிர்கொள்வதற்கான துணிவும் நம்பிக்கையும் அவருக்கு கிடைத்திருக்கிறது என அம்பேத்கரின் அறிவுத்திறமைக்கு காரணம் புகட்டுவது சரியல்ல. அவர் படிக்கவும், கற்கவும், சிந்திக்கவும், இந்தியாவில் இருக்கும் இத்தகைய சக்திகளுக்கு எதிராக எழுதவும், கற்பிக்கவும் பிரத்யேக சிரத்தை எடுத்துக்கொண்டார். இப்படியான திறமையும், துணிவும், அறிவுத்திறனும் கொண்ட அம்பேத்கர் இருந்திருக்காவிட்டால், நேருவால்கூட வர்ண தர்ம சர்வாதிகாரத்தை தடுத்து நிறுத்த முடிந்திருக்காது, அநேகமாக அது நிறுவப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் ஒரு பாகமாகவும் அவர் ஆகியிருக்ககூடும். இந்த அமைப்பிலான அவருடைய பிறப்பு அப்படிச் செய்யுமாறுதான் அவரை ஆக்கியிருக்கும்.

இந்திய அரசியல் சாசன வரைவுக்கு அம்பேத்கர் தலைமையேற்றபோது அவர் அதனை அதிகபட்ச கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் கையாண்டார். அது 70 வருடங்கள்வரை நீடித்திருக்கிறது, இந்தியாவின் எல்லாப் பிரிவு மக்களுடைய வாழ்வையும், த்விஜாக்களுடையதையும்கூட, முன்னேற்றியிருக்கிறது. இந்த பிராந்தியத்தில் உள்ள சீனாவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், பாகிஸ்தானில் இஸ்லாமிய சர்வாதிகாரம் மற்றும் நேபாளத்தில் இந்து வர்ண தர்ம சர்வாதிகாரம் நிலவிவரும் நிலையிலும் இந்திய ஜனநாயகம் மட்டும் உயிர்பிழைத்திருக்கிறது. இப்போதுதான், அதற்கும் ஆபத்து நேர்வதுபோல் தெரிகிறது.

ஆர்எஸ்எஸ்/பிஜேபி வர்ண தர்ம சிந்தாந்தத்திற்கு வெளியே இருக்கின்றவர்களால் இது புரிந்துகொள்ளப்பட்டு, அரசியலமைப்பு பாதுகாக்கப்படவில்லை என்றால், அதனுடைய சர்வாதிகாரம் மறுபடியும் நிறுவப்பட்டுவிடும், மீண்டும் இந்த தேசம் மத்திய காலப்பகுதிக்குள்ளேயே மூழ்கிப் போய்விடும். அது நடந்த உடனே, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்களுடன் சேர்ந்து, இந்த சித்தாந்தத்திற்கு வரலாற்றுரீதியாகவே பலியாகிக் கொண்டிருக்கும் சூத்திரர்கள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

தமிழாக்கம்: மர்மயோகி

காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

– அரசியல் கோட்பாட்டாளர்,

சமூக செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர்

Source: kanchailaiah.com/

Total Page Visits: 206 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *