ரத்தவெறி சைவர்கள்! – புஷ்பேஷ் பந்த்

சட்ட விதிமுறைகளால் ஆளப்படுகின்ற ஒரு நாட்டில்,

ஒரு குடிமகனுடைய முற்றிலும் தனிப்பட்ட விஷயங்களை,

மற்றொரு குடிமகன் தன்னுடைய விருப்பப்படி

கட்டாயப்படுத்தி தடுப்பது சாத்தியமா என்பதே

அடிப்படையான கேள்வி

சைவர்கள் அடிப்படையில் வன்முறையாளர்கள் அல்ல என்றும், உணவுக்காக விலங்குகளை கொல்வது பாவகரமான வன்முறை என்று நம்புவதால் அவர்கள் அசைவ உணவைத் தவிர்த்துவிடுகிறார்கள் என்ற அறியாமையிலேயே ஒருவர் பலவருடங்களுக்கு வாழ்ந்திருக்கலாம். ஆனால், அத்தகைய சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கைகளை சீராட்டுவதற்கு அவசியமில்லை என்பதற்கு நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளே சாட்சி.

பசு-பாதுகாவலர்களாக தங்களை அறிவித்துக்கொண்ட கொலைகார கும்பல்கள், மாமிச உணவாளர்களை நோக்கி அபாயகரமான கோஷங்களை கட்டவிழ்த்துவிடத் தொடங்கியது முதலே வெறிபிடித்த தாவர உண்ணிகள் ரத்தத்தை சுவைத்துப் பார்த்துவிட்டன என்பதும், பாவப்பட்ட மாமிச உணவாளர்களின் நாட்கள்தான் எண்ணப்படுகின்றன என்பதும் தெளிவாகிவிட்டது. சமீபத்திய நாட்களில், மத தலைவர்கள் மற்றும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுடைய தொந்தரவுபடுத்தும் அறிக்கைகள் பெரும் எண்ணிக்கையில் வெளிவருவது இந்த அபாயகரமான சூழ்நிலையை அதிகரிக்கவே செய்கின்றன. இவற்றை வெறும் முட்டாள்களின் உளறல்கள்தான் என்று, தற்போது நிலவிவரும் சமூக கொந்தளிப்பு மிகுந்த நாட்களில் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

கொரானோ வைரஸ் என்பதே அசைவ உணவாளர்களை தண்டிக்க பூமிக்கு வந்துள்ள நரசிம்ம அவதாரத்தைப் போன்றதுதான் எனவும், அவர்களை தண்டித்தவுடன் பாதி மனிதனும் பாதி மிருகமாகவும் இருக்கின்ற சீற்றம்கொண்ட அந்தக் கடவுளின் அவதாரம் மறுபடியும் மேலுலகம் சென்றுவிடும் எனவும் அறிவித்து, அனைத்திந்திய இந்து மகாசபையின் தலைவர் ‘முட்டையில்லாத’ கேக் சாப்பிட்டுள்ளார். வேறு சிலரோ, தீவிர சைவ உணவாளர்களும், பசு பாதுகாவலர்களும் இந்த நோய்ப்பரவல் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை எனவும், ஏனென்றால் மாமிசம் சாப்பிடுகின்றவர்களை மட்டுமே அழிக்கின்ற அந்த வைரஸுக்கு எதிரான இயற்கை நோயெதிர்ப்புத் திறன் சைவ உணவாளர்களுக்கு இருக்கிறது என்ற அவசர உத்திரவாதங்களை அளித்து வருகின்றனர்.

வழக்கம்போல், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவம் டெங்கு, கேன்சர் முதல் கோவிட்-19 வரையிலான எல்லாவற்றையும் குணப்படுத்தும் என நமக்கு சொல்லப்படுகிறது. இந்த வைரஸை அழிக்கும் மனிதநேய செயல்திட்டத்திற்காக இப்படிப்பட்ட பிரசங்கிகளும் வைத்தியர்களும் இன்னும் அங்கே புறப்பட்டுச் செல்லாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. அல்லது, ஒருவேளை நம்முடைய மிகப்பெரிய எதிரியான சீனாவை பலவீனப்படுத்தும் வகையில்தான் அவர்கள் இப்படிச் செய்யாமல் இருக்கிறார்களோ?

இந்தியா ஒரு சைவர்களின் தேசம் என்ற கட்டுக்கதையை உடைத்தெறிய வேண்டிய தேவை இருக்கிறது. பெரும்பான்மையான இந்தியர்கள் அசைவ உணவாளர்கள்தான். அவர்கள் சில மத/சடங்கு காரணங்களுக்காக அல்லது உடல்நலக் காரணங்களுக்காக குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள், ஆனால் எப்போதுமே மாமிச உணவைத் தவிர்த்துவிட வேண்டும் என நிச்சயம் நினைக்க மாட்டார்கள். இதற்கு முரணாக, ‘தீவிர சைவ’ சமூகத்தைச் சேர்ந்த பலரையும் அசை உணவாளர்களைப் போன்றவர்கள் என்றுதான் குறிப்பட வேண்டியிருக்கும்; ஏனென்றால்,  அவர்கள் இந்த மாமிச விலக்கை வீட்டில் மட்டுமே கடைப்பிடிப்பார்கள், நண்பர்கள் புடைசூழ இருக்கும்போது இந்த விலக்கப்பட்ட ‘கனியை’ சாப்பிட அவர்களுக்கு எந்தத் தடையும் இருக்காது. பெரும்பாலான இந்துக்கள் மாட்டுக்கறியை தொடுவதில்லை. இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் பன்றிக்கறியிடமிருந்து ஒதுங்கியே இருக்கிறார்கள், ஆனால் மாமிசம், கோழிவகைகள் மற்றும் மீன் ஆகியவை பல கோடிக்கணக்கானவர்களால் உண்ணப்படுகின்றன. பழங்குடியினர், தலித்துகள் அல்லது கிறிஸ்தவர்களிடையே அசை உணவில் எந்த தடையும் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், அதிகாரத்திலுள்ள பெரும்பான்மை ஆட்சியானது சைவ உணவை முன்னிறுத்துகின்ற ஒரு ஆணவமிக்க சிறு கூட்டத்தை/குழுவை விட்டு கலவரம் செய்யவும், மக்கள் மீது சுதேசி இந்திய உணவு குறித்த விளக்கத்தை திணிப்பதற்கும் அனுமதி அளித்திருக்கிறது.

பிஜேபி ஆளும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளின் மதிய உணவு பட்டியலில் இருந்து முட்டை நீக்கப்பட்டது முதலே இது தொடங்கிவிட்டது. பிறகு, ரயில்களிலும், விமானங்களில் சிக்கன வகுப்பிலும், பயணம் செய்கிறவர்களுக்கு தரப்படும் உணவுகளின் மீது இந்தக் கோடாரி விழுந்தது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே, இந்து அபத்தவாதியான பார்தெந்து ஹரீஷ்சந்திரா, ‘Vaidiki hinsa, hinsa na bhavati’ எழுதிவிட்டார். அவர் சொல்லவந்த விஷயம் என்னவென்றால், ஒருவருடைய எதிரியை அழிப்பதற்கு (சில மேன்மையான பலிகளில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் போல்) பயன்படுத்தப்படும் வன்முறையானது அதைப் பயன்படுத்துபவர்களால் வன்முறையல்ல என பறைசாற்றப்பட்டதைத்தான். கடந்தகாலம் நம்மை விசித்திரமான முறைகளில் வட்டமிடுகிறது. புராதான இந்தியாவைப் பற்றியோ அல்லது நாம் எல்லோருக்கும் பொதுவான கலாச்சார பாரம்பரியம் பற்றியோ யாரும் உண்மையிலேயே அக்கறைப்படுவதில்லை. அறிவியல் ஆதாரங்கள் – ரேடியோ கார்பன் டேட்டிங், டிஎன்ஏ பகுப்பாய்வு அல்லது கணிப்பொறி உதவியுள்ள மொழியியல் எதுவானாலும் – இந்துக்களை இரையாக்கும் இந்தியாவை வெறுக்கும் வெளிநாட்டினருடைய சதி என ஒதுக்கப்பட்டன. இந்தியாவையும், இந்தியர்களையும் ஏளனம் செய்வதற்காக காலனிய அறிஞர்களின் ‘கண்டுபிடிப்புகளை’ கிறிஸ்துவ மிஷனரிகள் திரித்துக்கூறின எனவும், சமீப காலங்களில் மார்க்சிய பிடிவாதக்காரர்கள் வரலாற்றை வைத்து ஆபத்தான ஆட்டத்தை ஆடியிருக்கிறார்கள் எனவும், தற்போது பீறிட்டெழும் முட்டாள்தனத்தின் ஆபத்துக்களுக்கு நாம் கண்ணை கட்டிக்கொண்டு இருந்துவிட முடியாது.

இனியும் தவறு செய்யாதிருப்போம். நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக்கூடாது என்பது பிரச்சினையல்ல. சட்ட விதிமுறைகளால் ஆளப்படுகின்ற ஒரு நாட்டில், ஒரு குடிமகனுடைய முற்றிலும் தனிப்பட்ட விஷயங்களை, மற்றொரு குடிமகன் தன்னுடைய விருப்பப்படி, கட்டாயப்படுத்தி தடுப்பது சாத்தியமா என்பதே அடிப்படையான கேள்வி. கொஞ்சகாலம் முன்புவரையிலும் பைத்தியக்காரத்தனமான அடிப்படைவாதம் என்று நையாண்டி செய்யப்பட்டவற்றால் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படும் காலகட்டத்தில் அரசாங்கமும், நீதித்துறையும் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கும் போக்குதான் எல்லாவற்றையும்விட ஆபத்தானது. பிஜேபி அதிகாரத்தை பெருக்கிக் கொண்டிருப்பது, தங்களுடைய நச்சுப்பற்களை இப்போது மறைத்து வைத்திருக்கும் தீய முட்டாள்களுக்கு ஆபத்தான வகையில் துணிவளிப்பதுபோல் தோன்றுகிறது.

தமிழாக்கம்: மர்மயோகி

புஷ்பேஷ் பந்த்

ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர்

Source: newindianexpress.com

Total Page Visits: 59 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *