இந்திய பட்டினிக் குழந்தைகள் – ஆனிந்த்யா சக்ரவர்த்தி

இந்தியாவில்,

தானிய களஞ்சியங்கள் நிரம்பி வழிகின்றன,

கார்ப்பரேட்டுகள் மாபெரும் வரிச்சலுகை

பெற்று குதூகலிக்கிறார்கள்,

குழந்தைகள் பட்டினி கிடக்கிறார்கள்

குழந்தையாக இருக்கையில் நான் ஈரல் உணவை சாப்பிட விரும்பியதேயில்லை. எல்லோரும் சாப்பிட்ட முடித்த பின்னரும், மேசையில் வெறுமனே சிந்தனையில் ஆழ்ந்தபடி என் தட்டை உற்றுப் பார்த்தபடியே அமர்ந்திருப்பேன். என் அம்மாதான் என்னைத் திட்டுவார், “எத்தியோப்பியாவில் உள்ள குழந்தைகள் பட்டினி கிடந்து சாகிறார்கள், நீயோ உணவை வீணடித்துக் கொண்டிருக்கிறாய்.” இது நான் மட்டும் அல்ல. ஏறக்குறைய நாம் எல்லோருமே, எத்தியோப்பிய குழந்தைகள் பட்டினி கிடப்பது பற்றிய இந்த நீதிக்கதையை கேட்டிருப்போம்.

நாற்பது வருடங்களுக்குப் பின்னர் அந்த மேசைகள் இடம் மாறிவிட்டதைப் போல் தோன்றுகிறது. இன்று, உலகளாவிய பட்டினி குறியீட்டெண்ணில் எத்தியோப்பியா நம்மைக் காட்டிலும் மேம்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம், நம்முடைய நாட்டில் உள்ள குழந்தைகளைக் காட்டிலும் எத்தியோப்பிய குழந்தைகள் நல்ல ஊட்டச்சத்து உணவை பெறுகிறார்கள் என்பதுதான். இது எத்தியோப்பியாவில் மட்டுமல்ல, நைஜீரியா, தான்ஸானியா, மொஸாம்பிக், அங்கோலா, கினியா-பிஸோ மற்றும் நைஜர் போன்ற வேறு பல ஏழை ஆப்பிரிக்க தேசங்கள் இந்தக் குறியீட்டெண்ணில் நமக்கு மேலே இருக்கிறார்கள். சொல்லப்போனால், நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தானும் பங்களாதேஷுமே இதில் அடங்கும்.

இருந்தாலும், இந்த ஒட்டுமொத்த தரவரிசை அபாயகரமான ஒன்றை மறைத்தே வைத்திருக்கிறது. இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பட்டினி குறியீட்டெண் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம். இது நான்கு விரிவான அளவீடுகளைப் பயன்படுத்துகிறது, அவற்றின் மூன்று அளவீடுகள் நேரடியாகவே ஊட்டச்சத்து அளவுகளுடன் தொடர்புள்ளவை.

முதலாவது அளவீடு, ஒரு நாட்டில் உள்ள மக்கள்தொகையில் ‘ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள்’ யார் என்ற விகிதம், அதாவது போதுமான அளவுக்கு கலோரிகள் பெறாதவர்கள்.

இரண்டாவது அளவீடு, தங்களுடைய உயரத்தோடு ஒப்பிடுகையில் குறைவான உடல் எடை கொண்ட ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விகிதம். இது ‘வீணாம்சம்(Wastage)’ எனப்படுகிறது, மேலும் இதுவே, தீவிர ஊட்டச்சத்து குறைபாடு அல்லது கடந்தகாலத்தில் போதுமான அளவு உணவு கிடைக்காத நிலை என்பதற்கான குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

மூன்றாவது குறிப்பானானது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் தங்களுடைய வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாதவர்களின் விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘வளர்ச்சிக் குறைபாடு(Stunting)’ எனப்படும் இது நாள்பட்ட, அல்லது நீடித்த ஊட்டச்சத்து குறைபாட்டின் குறியீடாகும்.

ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஒட்டுமொத்த விகிதாச்சாரம் என்று பார்த்தால், உலகளாவிய பட்டினி குறியீட்டெண் 2019-இல் பல்வேறு நாடுகளைக் காட்டிலும் இந்தியா மேம்பட்ட நிலையிலேயே இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் விகிதம் 14.5, இது 14.7 என்ற விகிதத்தில் உள்ள பங்களாதேஷைக் காட்டிலும் நூலிழை வித்தியாசம் கொண்டது, மற்றும் பாகிஸ்தான் 20.3%, எத்தியோப்பியா 20.6% மற்றும் ருவாண்டா 24.5% என்பதைக் காட்டிலும் மேம்பட்டிருக்கிறது. வேறுவகையில் சொன்னால், இந்த நான்கு நாடுகளைக் காட்டிலும், ஒட்டுமொத்த பட்டினி குறியீட்டெண்ணில் இந்தியா சிறிய அளவிலான பட்டினி கிடக்கும் மக்களைத்தான் கொண்டிருக்கிறது.

சிறு குழந்தைகளின் நாள்பட்ட பட்டினி என்று வரும்போதுகூட, அதாவது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நாள்பட்ட விகிதமாக மேலே குறிப்பிட்டுள்ளதுபோல், இந்தியாவின் செயல்பாடு மற்ற நான்கு நாடுகளைக் காட்டிலும் மோசமல்ல. இந்தியாவில், 37.9% சிறு குழந்தைகள் தங்களுடைய வயதுக்கு குறைவான எடை கொண்டிருக்கிறார்கள். இந்த விகிதம் பங்களாதேஷில் 36.2%, பாகிஸ்தானில் 37.4%, எத்தியோப்பியாவில் 38.4% மற்றும் ருவாண்டாவில் 37.6% உள்ளன்ன. விரிவாக பார்த்தால், இந்த ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள 10-க்கு நான்கு குழந்தைகள் ‘நாள்பட்ட பட்டினி’ கிடப்பவர்கள், அதாவது அவர்களுக்கு பல வருடங்களாகவே முறையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை.

இந்தக் காட்சி ‘வீணாம்சம்’ என்று வரும்போது, அதாவது ஒரு குழந்தை மிக சமீபத்தில் போதுமான ஊட்டச்சத்து அல்லது உணவைப் பெறவில்லை என்பதைக் குறிப்பிடும்போது அப்படியே மாறுகிறது. ருவாண்டாவில், ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளிடையே காணப்படும் வீணாம்ச விகிதம் 2.1% மட்டுமே. எத்தியோப்பியாவில் இது 7.1%, பாகிஸ்தானில் 10%, பங்களாதேஷில் 14.4% என்பதாக இருக்கிறது. இந்தியாவில், இது மிகப்பெரிய அளவில் 20.8% என்பதாக, எந்த நாட்டைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

சமீபத்திய பட்டினி குறியீட்டெண்ணில் அடங்கியுள்ள காலகட்டத்தில், 2014-18-க்கு இடையில், இந்தியக் குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்டுள்ளார்கள். 2008-12 டேட்டாவுடன் ஒப்பிடப்பட்ட டேட்டாவானது, வீணாம்ச பரவல் 16.5% இருப்பதை, அல்லது ஏறக்குறைய ஆறு குழந்தைகளில் ஒருவர் என்ற அளவில் இருப்பதைக் காட்டுகிறது. 10 வருடங்களுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும், இந்த தீவிர பட்டினியானது கடந்த 5 வருடங்களில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதையே குறிக்கிறது.

இதனை, மக்கள்தொகையை முழுமையாக எடுத்துக்கொண்டு ஊட்டச்சத்தின்மை டேட்டாவுடன் ஒப்பிடலாம். மேலே குறிப்பிட்டுள்ளபடி, 2014-18 காலகட்டத்திற்கு இடையில் 14.5% இந்தியர்களுக்கு போதுமான கலோரிகள் கிடைக்கவில்லை. அந்த சதவிகிதம் 2008-12 இடைப்பட்ட காலத்தில் 17.5 சதவிகிதமாக இருந்திருக்கிறது. இது, வயதான பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் சிறு குழந்தைகளைக் காட்டிலும் நல்ல ஊட்டச்சத்தை பெற்றிருப்பதற்கான வாய்ப்பிருப்பதைக் காட்டுகிறது.

இந்த டேட்டா அபாயத்தை வெளிக்காட்டுகிறது, ஏனென்றால் உடல் திறனுள்ள உழைக்கும் மக்கள் இளம் பிள்ளைகளுக்கு குறைவான உணவைத் தரவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கட்டதைப் போலவும், மறுநாள் வேலைக்கு செல்லவேண்டியுள்ளதால் அவர்கள் மட்டுமே தங்களுக்கு வேண்டிய அளவுக்கான உணவை எடுத்துக்கொள்ளவேண்டி இருப்பதைப் போலவும் தெரிகிறது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளித்துவிட்டு பட்டினி கிடப்பார்கள் என்ற பழமைவாத அறிவுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. உச்சகட்ட வறுமையான காலங்களில் வேண்டுமானால், இதை நியாயப்படுத்தலாம். சொல்லப்போனால், உழைக்கும் பெரியவர்கள், அதாவது தங்களுடைய வேலைக்கு கூலி பெறுகிறவர் அல்லது கூலியில்லாமல் வீட்டில் உழைப்பை செலுத்துகிறவர் என எதுவானாலும் தங்களுடைய உழைப்பு சக்தியை மீட்டெடுக்க, அல்லது மறுநாள் வேலை செய்வதற்கு வேண்டிய திறனைப் பெற்றுக்கொள்ள அவர்கள் அடிப்படை அளவிலாவது கலோரிகளை பெறத்தான் வேண்டியிருக்கிறது.

நரேந்திர மோடி ஆட்சி செய்த மொத்த காலகட்டத்திலும், மற்ற எவற்றையும் போலவே, குறிப்பாக, பெரிதாகிவரும் நாட்டுப்புற வேலைவாய்ப்பின்மை, மிகக் குறைந்த நாட்டுப்புற வேலைக் கூலிகள், விவசாயத்தில் அதிகரித்துவரும் வருமானமின்மை போன்ற மற்ற டேட்டாக்களோடு சேர்த்துப் பார்க்கும்போது இதுவும் ஏழ்மை அதிகரிப்பதன் அறிகுறிதான்.

இதில் மிகவும் வெட்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்திய உணவுக் கழக தானியக் களஞ்சியங்கள் நிரம்பி வழிந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் இந்த விவரங்களும் வெளிவந்துள்ளன என்பதுதான். உபரியாக உள்ள உணவுதானியங்களை மனிதநேய உதவியாக ‘தகுதியுள்ள’ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று செயலாளர்கள் கமிட்டி ஏற்கனவே பரிந்துரை செய்திருப்பதாகவும், இப்போது உணவு அமைச்சகமும்கூட இதே கோரிக்கையுடன் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனை விற்பனை செய்தால் அதனுடைய அடக்க விலையைக்கூட இந்திய உணவுக் கழகத்தால் பெற முடியாது என்கிற அளவுக்கு உணவுதானிய சந்தை விலை மிகக்குறைவாக உள்ளது என்பதே உண்மை. நல்வாழ்வு நோக்கமுள்ள எந்த அரசாங்கமும் பொது விநியோக அமைப்பை விரிவுபடுத்தவே செய்திருக்கும், மிகுதியாக உள்ள இருப்பை பட்டினி கிடப்பவர்களுக்கு கொடுத்திருக்கும். ஆனால் அதுவே, கொள்கை உருவாக்கம் என்று வரும்போது மோடி அரசாங்கம் பின்பற்றுகின்ற நவ-தாராளவாத கொள்கைகளுக்கு எதிரானதாகிவிடும்.

அதனால், இந்திய குழந்தைகள் பட்டினி கிடப்பார்கள், இந்திய கார்ப்பரேட்டும் மாபெரும் வரிச்சலுகை பெற்று குதூகலிப்பார்கள்.

தமிழாக்கம்: மர்மயோகி

ஆனிந்த்யா சக்ரவர்த்தி

NDTV India & NDTV Profit

ஆகியவற்றின் மூத்த நிர்வாக ஆசிரியர்

Source: https://www.newsclick.in  

Total Page Visits: 194 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *