டெல்லி கலவரம்: கெஜ்ரிவாலின் மௌனம் எதற்கானது? – நவீலா இஷ்தெயாக்

டெல்லி வன்முறை குறித்து

அர்விந்த் கெஜ்ரிவால் மௌனம் சாதிப்பது

பெரும்பான்மைவாத அரசியல் அறிகுறியா?

 

ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை வெற்றிபெற்று மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஏறக்குறைய ஒருமாதம்தான் ஆகப்போகிறது. இருதுருவ போட்டியில் எதிர்க்கட்சியான பிஜேபி-யை ஒற்றை இலக்க (8 இடங்கள்) எண்ணில் மட்டுமே விட்டுக்கொடுத்து 62 இடங்களில் வெற்றிபெற்றுள்ள அந்தக் கட்சியின் சாதனை போற்றத்தக்கதுதான்.

ஷாகீன் பாக் போராட்டக்காரர்களை தேச-விரோதிகளாக முத்திரை குத்தியது, டெல்லி தேர்தல்களை தேசியவாதத்திற்கும் எதிர்-தேசியவாதத்திற்கும் இடையிலான போர்க்களமாக உருவாக்கியது ஆகியவற்றை மையப்படுத்தியே பிஜேபி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டதற்கு டெல்லியே சாட்சியானது. ஏஏபி தன்னுடைய முன்னேற்றம் எனும் துருப்புச் சீட்டை வைத்து மிக நன்றாக ஆடியது, அத்துடன் தங்களுக்கு நம்பிக்கை அரசியல்தான் வேண்டுமே தவிர வெறுப்பு அரசியல் தேவையில்லை என்பதை டெல்லி மக்களும் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தினர்.

இருப்பினும், பல்வேறு சமூக, அரசியல் பிரச்சினைகளில் கெஜ்ரிவால் தொடர்ந்து மௌனம் சாதித்து வருவது அவரை தங்களுடைய முதலமைச்சராக ஏற்றுக்கொண்ட டெல்லிவாசிகளை தோற்கடித்துள்ளது. பிஜேபி-யின் இந்து-முஸ்லீம் வர்ணிப்பை புறம்தள்ளிய கெஜ்ரிவாலின் தேர்தல் பிரச்சாரம் நன்றாக வேலை செய்திருப்பதும், எதிர்கட்சிகள் எல்லோரிடம் இருந்து பாராட்டுதல்களை பெற்றிருப்பதும் உண்மைதான், ஆனால் தேர்தல்களுக்குப் பிறகும் இந்த மௌனம் தொடர்வதுதான் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஆம் ஆத்மி கட்சியே போராட்டத்தில் இருந்துதான் பிறந்திருக்கிறது, கெஜ்ரிவாலும்கூட, டெல்லியின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக, தன்னுடைய நெருங்கிய உதவியாளர்களுடன் தர்ணாக்களில் ஈடுபட்டுத்தான் அங்கீகாரம் பெற்றார். பிறகு எதற்காக அவர் சட்டென்று தன்னுடைய வாக்காளர்களிடத்தில் தன் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்? எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவோ, குற்றச்சாட்டை ஏற்காமல் அல்லது தேவையான அவசிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவோ செய்யாமல், எதற்காக மௌனம் என்கிற பாதுகாப்பான ஒருவழிப்பாதையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நிறைய இருக்கலாம், ஆனால் இப்போது அவர் ஒரு பெரிய செயல்திட்டத்தின் மீது சவாரி செய்வதைப் போலவும், அந்தப் பெரிய இலக்கு என்னவென்று அவருக்கு நன்றாகத் தெரியும் போலவும்தான் தோன்றுகிறது. பரந்துபட்ட தேசிய இயல்புகளை தடுப்பதற்கான புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை புறம்தள்ளுவது என்ற அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது அவருடைய கட்சியின் வியூகத்தினுடைய வரம்புகள் அனைத்துமே, வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தபோது அதற்காக அந்த அரசாங்கத்தால் சிறிதளவு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைத்தான் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன. டெல்லியில் வன்முறை பரவி பலரையும் பலிவாங்கிக் கொண்டிருந்தபோது அமைதியாக இருக்க கோரிக்கை விடுத்தும், கொல்லப்பட்ட தலைமைக் காவலர் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்தும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மத்திய அரசை வலியுறுத்தியும் கெஜ்ரிவால் சில டிவீட்களை பதிவிட்டுக் கொண்டிருந்தார்.

“தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட யாரையும் விடக்கூடாது,” என்றும் அவர் டிவீட் செய்திருக்கிறார். டிவீட் செய்வது, கோரிக்கை விடுப்பது, குற்றம்சாட்டுவது ஆகியவற்றுடன், நிராதரவான முதலமைச்சராக இருந்திருப்பதற்கும் மேலாக கெஜ்ரிவால் நிறைய செய்திரு முடியும். ஒரு மாநிலத்தின் முதல்வராக, இந்தக் கலவரங்களுக்கு அவர் பொறுப்பேற்றிருக்க வேண்டும், பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டும், பிரச்சினைக்குரிய பகுதிகளில் இயல்புநிலையை சீரமைக்க எல்லா அரசியல் கட்சிகளுடனும் இணைந்தும் செயல்பட்டிருக்க வேண்டும். தன்னால் முடிந்த எல்லாவற்றையும் அவரால் செய்திருக்க முடியும், டெல்லி காவல்துறையின் திறனின்மை பற்றி தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்களை அமைத்திருக்க முடியும். மக்களின் முதல்வராக அவர் செய்திருக்கக்கூடியவை பற்றி ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது, ஆனால் அவருடைய மௌனமோ, சமீபத்தில்தான் ஜனநாயகத்தின் வெற்றியைக் கொண்டாடியுள்ள டெல்லி வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.

டெல்லி தேர்தல் பிரச்சாரங்களின்போது “மக்களின் முதல்வன், டெல்லியின் மகன்,” என்று தன்னைத்தானே குறிப்பிட்டுக்கொண்ட அவருடைய இரட்டை நிலைப்பாடு, இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி அவருடைய வீட்டிற்கு வெளியே கூடியிருந்த மாணவர் குழுக்களை, காவல்துறையை வைத்து தண்ணீரை பீய்ச்சியடித்து கலைந்துபோகச் செய்தபோதே வெளிப்பட்டுவிட்டது. இந்தச் செயலும்கூட, சிஏஏ, என்ஆர்சி மற்றும் ஷாகீன் பாக் போன்ற இடைவிடாமல் தொந்தரவு செய்யும் அசௌகரியான பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டு, தங்களை அனுமானுடைய பக்தர்களாக கெஜ்ரிவாலும் பிற ஏஏபி தலைவர்களும் வெளிப்படுத்திக்கொண்டதன் மூலம், தற்போது பிஜேபி கையில் இருக்கின்ற இந்து கட்சி என்ற இடத்தை ஆக்கிமிரக்க அவர்கள் செய்யும் முயற்சிதான் என்பது வெளிப்பட்டிருக்கிறது, இருப்பினும் முன்னேற்றம் என்பதை சுற்றியே கெஜ்ரிவால் தன்னுடைய நங்கூரத்தை இட்டிருந்தார்.

இதனை, பலரும் ஒரு சட்டமன்ற தேர்தலுக்கான உத்தியாக பார்க்கலாம், ஆனால் அதே வியூகம் தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது. மேலும், அரசியல்ரீதியாக குரல் கொடுக்கும் நடிகை ஸ்வரா பாஸ்கரா, ரேடியோ மிர்ச்சி ஆர்ஜே சயேமா மற்றும் பிற பத்திரிக்கையாளர்கள் டெல்லி வன்முறை குறித்து அவரை விமர்ச்சித்திருந்த நிலையில் அவர்களை தன்னுடைய சமூக ஊடகத்தில் இருந்து Unfollow செய்தபோது, கெஜ்ரிவால் தன் மீதான விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிவற்றவர் ஆகிவிட்டார் என்பதைத்தான் காட்டுகிறது.

ஷாகீன் பாக் போராட்டக்களம்

இப்படிப் பேசாமலேயே இருந்துவிடுவதன் மூலமாக, சிஏஏ-என்சிஆர் ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறவர்கள் ‘தேச-விரோதிகள்’ என்றோ அல்லது தாக்கப்பட்ட மாணவர்கள் அல்லது வடகிழக்கு வன்முறையில் தங்கள் உயிர்களை இழந்தவர்கள் காவல்துறையிடமிருந்து கிடைத்த அத்தகைய தண்டனைக்கு உரியவர்கள்தான் என்றோ நம்புகின்ற வாக்காளர்களுக்கு, கெஜ்ரிவால் தொடர்ந்து வசதியேற்படுத்தித் தரவே செய்கிறார். இந்தக் கட்சியின் கருத்தியல் தெளிவின்மையை, இந்தக் கட்சி ‘இடதுபக்கமும் செல்லும், வலதுபக்கமும் செல்லும்’ என்று ஏஏபி-யின் சமூக ஊடக வியூகவாதியான அங்கித் லால் பதிவிட்டிருப்பதை வைத்து மிக சுருக்கமாக நம்மால் விளங்கிக்கொள்ள முடியும்.

இந்தக் கட்சிக்கு கருத்தியல் தெளிவும், எதிர்ப்புக் கண்ணோட்டமும் தேவை என்பதுடன், டெல்லி வன்முறை மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கிறது. ஆனாலும்கூட, இப்போதுவரை அப்படி எதுவும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. டெல்லி மக்கள் ஒரு வலிமையான, சக்திவாய்ந்த, கருத்தியலால் உந்தப்பட்ட முதல்வரைத்தான் தேர்வு செய்திருக்கிறார்களே தவிர, நிராதரவான முதுகெலும்பற்ற முதல்வரை அல்ல.

 தமிழாக்கம்: மர்மயோகி

நவீலா இஷ்தெயாக்

 – எழுத்தாளர் மற்றும் அரசியல் ஆலோசகர்.

Source:countercurrents.org

தொடர்புடைய கட்டுரை:

ஆம் ஆத்மி வெற்றியும், வெற்றிபெறாத மதச்சார்பற்ற இந்தியாவும் – பினு மாத்யூ

Total Page Visits: 106 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *