கற்பிக்கப்பட வேண்டிய அரசியலமைப்பு நீதிநெறி – வெங்கட்நாராயணன் எஸ்

இந்தியா போன்ற பன்முக கலாச்சார நாட்டில்

அதனுடைய தேசிய அடையாளத்தை

கடந்த காலத்தில் கண்டெடுக்க முடியாது,

மாறாக, மதச்சார்பற்ற முன்னெடுப்புகளின் வழியே

உணர்வுப்பூர்வமாகத்தான் கட்டமைக்க முடியும்

சமூகத் தீமைகள் மற்றும் அவற்றின் விளைவான சமூக பாகுபாடுகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த நிலையிலும், கல்வியினுடைய விடுதலையளிக்கும் திறனை ஜோதிராவ் புலே, பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற பல சமூக சீர்திருத்தவாதிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதேபோல் பாலோ ஃபிரையர்(Paulo Freire) தன்னுடைய “Pedagogy of the Oppressed – ஒடுக்கப்பட்டோரின் ஆசிரியன்” என்ற கிளாஸிக்கல் புத்தகத்தில் Conscientizacao என்பதன், அதாவது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முரண்பாடுகளை உணர்ந்துகொள்ளும் வகையில் கற்றுக்கொள்ளுதல், மற்றும் உண்மையை ஒடுக்கிவைக்கும் சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தலின் முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்குகிறார்.

இத்தகைய நிலைமாற்ற கல்வி நிஜமாக வேண்டுமானால் கல்வியானது ஆசிரியரும் மாணவரும் உரையாடித் தீர்வுகண்ட பின்னர் மாணவரிடத்தில் சேகாரமாகக்கூடியதாக இருக்க வேண்டும், அவ்விடத்தில்தான் அந்த தகவலானது எத்தகைய இயல்புமாற்ற தன்மைகளுக்கும் ஆளாகாமல் கற்றுக்கொள்பவரின் மனதில் சேகாரமாகும் என்கிறார் பாலோ. ஆனால், தற்கால சமூகமானது வாழ்வின் எல்லா அம்சங்களையும் அளவீட்டு அலகில் வைத்தே பார்க்கிறது, இத்தகைய சமூகத்தில்தான் தனிமனிதர்களுடைய சாதனைகள் அனைத்தும் மதிப்பெண்கள், ஊதியங்கள் என்று அளவிடக்கூடிய அளவுக்கு சுருக்கப்பட்டுவிட்டன. சமூக நிலைமாற்றத்திற்கான எத்தகையதொரு மதிப்பீட்டு குணவியல்புகளும் செல்லாதவையாகிவிட்டன.

கொள்கை வகுக்கும் அறைகளில் நடக்கும் கல்வித்தரம் குறித்த விவாதங்கள் எல்லாமே எத்தனை பள்ளிகள்/கல்லூரிகள்/பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன, எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எவ்வளவு நிதி இருக்கிறது போன்ற அளவீட்டு எண்களுக்குள்ளேயே சிறைபட்டுக் கிடக்கின்றன. இவை முக்கியம்தான், ஆனால் ஒரு சரிநிகர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்விக்கு இருக்கின்ற நிலைமாற்ற செயல்திறனை அடையாளம் கண்டு சாத்தியமாக்குவதில் நாம் இதற்கும் அப்பால் சிந்தித்தாக வேண்டும்.

நம்முடைய கல்வியமைப்பிற்கு பிளாட்டோனியத்தின் இயல்கடந்த லட்சியவாதத்தையோ அல்லது பெருமைக்குரிய கடந்தகாலத்தையோ பின்பற்ற வேண்டிய தேவை இல்லை. ஏனென்றால், நாம் பின்பற்றவேண்டிய அரசியலமைப்பு நீதிநெறி மதிப்பீடுகளை சுட்டிக்காட்டி, இந்திய அரசியலமைப்பில் ஏற்கனவே கருத்தியல் அடித்தளம் இடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு நீதிநெறியை இளம் தலைமுறையினரிடத்தில் வளர்த்தெப்பதற்கு கல்வி அமைப்பினுடைய தரம் மற்றும் வெற்றியானது எண்ணிக்கைகளையும் தாண்டிச் சென்றாக வேண்டும். சுதந்திரம் அடைந்ததில் இருந்தே, கடந்த காலங்களில் இந்தக் கருத்தானது பல்வேறு கமிஷன்/கமிட்டிகளாலும் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, ஆனால் வகுப்பறையில் கற்பிக்கும் நடைமுறைகளில் ஒருபோதும் சேர்த்துக்கொள்ளப்பட்டதே இல்லை.

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையேற்ற, University Education Commission (1949) அறிக்கையானது, நம்முடைய அரசியலமைப்பு வரைவினுடைய முன்னுரையிலேயே சமூக தத்துவம்தான் நம்முடைய கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புகளை ஆளுகிறது என்பதை வலியுறுத்தியிருக்கிறது. முதலியார் ஆணையம் என்றும் அழைக்கப்படுகின்ற 1953-ஆம் ஆண்டு Secondary Education Commission அறிக்கையில், சமூகத் தீமைகள் மற்றும் சுரண்டலுக்கு உண்டான உணர்வுகளின் அடிப்படையில் சமூகநீதி மதிப்பீட்டை புகட்டுவதற்கான அடித்தளத்தை பள்ளிக்கல்விதான் அளித்தாக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இதே அறிக்கையில், பலதரப்பட்ட நம்பிக்கைகள், இனங்கள் மற்றும் சமூகங்களால் ஆன நம்முடைய ஜனநாயகத்தின் உயிர்பிழைத்தலுக்கு வேண்டிய சகிப்புத்தன்மை மதிப்பீட்டிற்கு பள்ளிக் கல்வியே அடித்தளம் இடவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீண்டகால தேசிய விழைவுகளை நிறைவேற்றுவதில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக கல்விதான் இருக்க முடியும் என்பதை The Kothari Commission (1964) அடையாளம் காட்டியிருக்கிறது. அரசியலமைப்பு இலக்குகளான சோஷலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை சாத்தியமாக்குவதை நோக்கிய அறிவியல் மனப்பாங்கு மற்றும் சுதந்திரமான மனநிலையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை National Policy of Education (1986 & 1992) வலியுறுத்தியுள்ளது. மேலும், கல்வி அமைப்பானது பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களுடைய சமூக நிலையை மாற்றக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதுடன், அறிவை மழுங்கடித்தல், மத தீவிரவாதம், வன்முறை, மூடநம்பிக்கை மற்றும் ஊழ்விதிக் கோட்பாடு போன்றவற்றை நீக்கி அழிக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் எனவும் அந்தக் கொள்கை விரும்பியது.

National Curricular Framework (2005), பாடத்திட்ட சீர்திருத்தத்தின் வழியாக பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மதிப்பீடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றது. ஜனநாயகத்திற்கான நம்முடைய கடமைப்பாட்டையும், சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பின்மை, பிறர் குறித்த அக்கறை, மனித கண்ணியம் மற்றும் உரிமைகள் ஆகியவற்றுக்கு உண்டான மதிப்பீடுகளையும் கல்வி அமைப்பே வலுப்படுத்த வேண்டும் எனவும் மேற்கொண்டு வலியுறுத்தியுள்ளது. Committee to Advise on Renovation and Rejuvenation of Higher Education அல்லது யாஷ் பால் கமிட்டி (2009), பாலினம், சாதி மற்றும் வர்க்க பேதங்கள் ஆகியவற்றை குறைப்பதிலும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு ஏற்றதாய் இருப்பது மற்றும் அதனுடைய விளைவு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. பல்கலைக்கழகத்தை மதிப்பிடும்போது, சுற்றியுள்ள சமூக உலகத்திடம் இருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாமல், அந்தப் பல்கலைக்கழகங்களை தடுப்பதற்கு கல்விசார்ந்த உயர்நிலையானது சமூக நோக்கிலான மேம்படுத்தலோடும் சேர்த்தே மதிப்பிடப்பட வேண்டும்.

National Curriculum Framework for Teacher Education (2009), அமைதி, ஜனநாயகம், சமத்துவம், நீதி, சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசியலமைப்பு மதிப்பீடுகளை ஆசிரியர்களே மேம்படுத்த வேண்டும் என மறுபடியும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. Draft National Education Policy (2019), கட்டுத்தளையின்மை மற்றும் சுதந்திரம்; சமத்துவம், நீதி மற்றும் நியாயம்; பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளுதல்; மனிதத்தன்மை மற்றும் சகோதரத்துவ இயல்பு; சமூக பொறுப்புணர்வு மற்றும் சேவையாற்றும் இயல்பு; நேர்மை மற்றும் வாய்மையின் அறவியல்பு; அறிவியல் நாட்டம் மற்றும் பகுத்தறிவுக்கும் பொது உரையாடலுக்கும் வேண்டிய பொறுப்பேற்பு; அமைதி; அரசியலமைப்புரீதியிலான சமூக செயல்பாடு என இவை எல்லாவற்றிற்கும் உரிய ஜனநாயகப் பார்வை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், இந்த வரைவு மதச்சார்பின்மைக்கு உண்டான மதிப்பீட்டை வெளிப்படையாகவே நீக்கியிருக்கிறது.

அரசியலமைப்பு நீதிநெறி என்பது, அதன் முகப்புரையில் போற்றிக் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களை அடைவதற்காக, இந்திய அரசியலமைப்பின் அடிப்படை நீதிநெறி மதிப்பீடுகளை அடைவதை நோக்கிய நம்முடைய பொறுப்புடைமையே ஆகும். பேராசிரியர்.பிரதாப் பானு மேத்தா வலியுறுத்தியுள்ளதைப் போல், அரசியலமைப்பு நீதிநெறியை பின்பற்றுதலுக்கு சாதி, மதம், இனம், தொல்குடி, மொழி போன்ற நம்முடைய ஆதிகால மற்றும் நாம் விரும்பி ஏற்றிராத அடையாளங்களில் இருந்து நம்மை பல்வேறு வகைகளிலும் துண்டித்துக்கொள்ள வேண்டியிருக்கும். கல்வி வழியிலான இத்தகைய அரசியலமைப்பு கலாச்சார பன்முகத்துவமே அரசியல் தேசியவாதத்தை வலுப்படுத்தும். இதில், அடையாளம் அடிப்படையிலான கலாச்சார தேசியவாதம் அல்லாமல், சாதி, வர்க்கம், மதம், பாலினம் மற்றும் தொல்குடி அடையாளம் நீங்கிய குடியுரிமை உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே உள்ளடங்கியிருக்கும். இந்தியா போன்ற, பலதரப்பட்ட அடையாளங்களையும் கடந்து பரந்திருக்கின்ற, வரலாற்றுரீதியாக வளர்ச்சியுற்றுள்ள ஒரு பன்முக கலாச்சார நாட்டில் அதனுடைய தேசிய அடையாளத்தை கடந்த காலத்தில் கண்டெடுக்க முடியாது, மாறாக, அதனை மதச்சார்பற்ற முன்னெடுப்புகளின் வழியே உணர்வுப்பூர்வமாகத்தான் கட்டமைக்க முடியும்.

இந்தியாவை அதனுடைய பன்முகத்தன்மையுடனும் மற்றும் பல்வேறு மதம், தொன்மை, இனம் மற்றும் கலாச்சார குழுக்களாக இருக்கின்ற, ஒரு அரசியல் தேசத்தின் பிராந்திய வரம்புகளுக்குள்ளாக, எல்லா உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ள அரசியல் சமூகமாகவும் வெளிப்படுத்த வேண்டும் என நம்முடைய கல்வி அமைப்புதான் தீர்மானம் செய்துகொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, சாதிய பாகுபாடு, கலாச்சார மற்றும் மத சகிப்பின்மை ஆகியவற்றுடன், அதிகரித்துவரும் சமத்துவமின்மை மற்றும் குறைந்துவரும் அறிவியல் ஆர்வம் ஆகியவற்றில் வெளிப்படுகின்ற நமது சமூக மூடத்தனங்களை நம்முடைய அரசியல் தேசியவாதத்தை வலுப்படுத்துவதன் மூலம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். ஆதலால், சிறப்பான இந்தியாவை உருவாக்குவதற்கு இளைய தலைமுறையினர் அரசியலமைப்பு நீதிநெறியை உண்மையாக உள்வாங்கிக்கொள்ளும் வகையில் நம்முடைய கல்வியமைப்பை மறுநிர்ணயம் செய்ய வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

 

தமிழில்: இரா.செந்தில்

வெங்கட்நாராயணன் எஸ்

– போர்ட் பிளேர், அந்தமான் சட்டக்கல்லூரி பேராசிரியர்.

இத்தாலி, பெவியா பல்கலைக்கழகத்தில்

2018-ஆம் ஆண்டு CICOPS ஃபெலோஷிப் பெற்றவர்.

Source: countercurrents.org

Total Page Visits: 29 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *