முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ள கார்பன் டைஆக்ஸைடு

மனித நடவடிக்கைகளால் வெளியாகும் மாசுபாடே இந்த கார்பன் அடர்த்திகளுக்கு நீண்டகால அளவில் ஒட்டுமொத்த காரணமாக இருந்து வருகிறது

 

காற்றுமண்டலத்தில் கார்பன் டைஆக்ஸைடின் அளவு இந்த மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக National Oceanic and Atmospheric Administration (NOAA) தெரிவித்துள்ளது. மேலும், புதைபடிம எரிபொருள்கள் மற்றும் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் புவி வெப்பமாதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என சுற்றுச்சூழல் மற்றும் அறிவியலாளர்களை உள்ளடக்கிய சர்வதேச சமூகத்திற்கு புதிய அழைப்பையும் விடுத்திருக்கிறது.

NOAA மோனா லோவா ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, பிப்ரவரி 10 வரையில் காற்றுமண்டலத்தில் இருந்த கார்பன் டைஆக்ஸைடின் தினசரி சராசரி அளவு 416ppm (ppm-Parts Per Million – ஒரு மில்லியனில் உள்ள பாகங்கள்) ஆகும். சமீபத்திய வருடங்களில், வழக்கத்திற்கு மாறாக காற்றுமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பன் டைஆக்ஸைடின் அளவு, காலநிலை நெருக்கடியை இந்த உலகம் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

ஸ்வீடிஷ் சுற்றுச்சூழல் போராளியும், Fridays for Future என்ற, உலகளாவிய பதின்ம வயதினரால் நடத்தப்படும் காலநிலை செயல்பாட்டு இயக்கத்தை நிறுவியவருமான கிரெட்டா தன்பெர்க் NOAA-இன் புதிய கண்டுபிடிப்பினை “சோகமான விஷயம் என்னவென்றால் இது அவசர செய்திகளில் இடம்பெறாது என்பதுதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இதனுடைய முழு அர்த்தத்தையும் யாருமே புரிந்துகொள்ளவில்லை. ஏனென்றால், ஒரு நெருக்கடியை நெருக்கடி என்று கருதமுடியாத அளவுக்கு நாம் நெருக்கடியில் இருக்கிறோம்,” என்கிறார் அவர்.

தர்ன்பெர்க் மட்டுமல்லாது, ஐ.நா. அமைப்பைச் சேர்ந்த பெல்ஜிய காலநிலை அறிவியலாளரான ஜேன்-பாஸ்கல் வான் பெர்ஸேல் என்பவரும் இதுகுறித்து கூறுகையில், “இது நாம் பெருமைப்படுகிற விஷயமல்ல. மாறாக, இந்தப் போக்கை நிறுத்த வேண்டுமானால் புதைபடிம எரிபொருள்கள் மற்றும் காடுகளை அழித்தல் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான நினைவூட்டலே இது,” என்கிறார்.

துணிச்சலான காலநிலை மாறுபாட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து தன்பெர்க்கும் மற்றும் சில சிறார்களும் இடம்பெறும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

போலந்தில் நடைபெற்ற ஐ.நா. COP24 காலநிலை பேச்சுவார்த்தைகளில் தன்பெர்க் ஆற்றிய உரையுடன் வேறு பல குழந்தைகளும், காலநிலை மாற்ற அவசரநிலையை உலகளாவிய அளவில் படிப்படியாக கையாள வேண்டிய அவசியம் பற்றிப் பேசுகின்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. தன்பெர்க் தன்னுடைய பேச்சில், “இதை ஒரு பிரச்சினையாக கருதாமல் இந்தப் பிரச்சினையை நம்மால் தீர்க்க முடியாது,” என்கிறார்.

இங்கிலாந்து வானிலை சேவையான மெட் ஆபீஸ், ஜனவரி மாதம் விடுத்துள்ள எச்சரிக்கையில், “1958-ஆம் ஆண்டில், ஹவாயில் உள்ள மௌனா லோவில், காற்றுமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்ஸைடை அளவிடத் தொடங்கியதில் இருந்து 2020-ஆம் ஆண்டானது மிகப்பெரிய வருடாந்திர அதிகரிப்பை எதிர்கொள்ளப் போகிறது என கணிப்புகள் தெரிவிக்கின்றன,” எனக் கூறியுள்ளது.

மேலும், “இந்த வருடம் மே மாதத்தில் கார்பன் டைஆக்ஸைடு அடர்த்தியின் அளவு 417ppm என்கிற அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று கூறியுள்ள அந்த அமைப்பு, எதிர்பார்க்கப்படும் இந்த அளவானது கடந்த வருடத்தின் பிற்பகுதியில், ஆஸ்திரேலிய காடுகளின் பெரும்பகுதியை அழித்துவிட்ட காட்டுத்தீயினால் ஏற்பட்ட மாசுபாடும் இதற்கு காரணமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

“வருடாந்திர கார்பன் டைஆக்ஸைடின் அளவு 1958-ஆம் ஆண்டு முதல் வருடாந்திர அளவில் அதிகரித்து வருகிறது என்றாலும், புதைபடிவ எரிவாயுக்கள் எரிக்கப்படுவது மற்றும் காடுகள் அழிக்கப்படுதால் இந்த அதிகரிப்பு விகிதமானது முழு சமநிலையில் இருந்ததில்லை, ஏனென்றால் சூழியல் அமைப்பின் கார்பன் உறிஞ்சும் அளவானது, குறிப்பாக வெப்பமண்டலக் காடுகளில், ஏற்ற இறக்கங்களை கண்டு வந்துள்ளது,” என இந்த அமைப்பின் ரிச்சர்ட் பெட்ஸ் விளக்கியுள்ளார்.

“மனிதர்கள் உருவாக்கிய மாசுபாடுகளில் ஏற்படும் வருடாந்திர மாற்றங்களைக் காட்டிலும், சூழியலின் கார்பன் உறிஞ்சு திறன் மற்றும் மூலாதாரங்களின் பலத்தாலேயே காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதில் வருடாந்திர மாற்றம் ஏற்படுவது எங்களுடைய முந்தைய கணிப்புகளின் வெற்றியால் நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர். “இருப்பினும், மனித நடவடிக்கைகளால் வெளியாகும் மாசுபாடே இந்த கார்பன் அடர்த்திகளுக்கு நீண்டகால அளவில் முழுமொத்த காரணமாக இருந்து வருகிறது.”

Source: CommonDreams.org

Total Page Visits: 61 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *