அமெரிக்கா ஒரு நாகரீக தேசமா? – ரான் ஃபார்தஃபர்

 “கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான், கடைசி நதியும் நஞ்சாக்கப்பட்ட பின்னர்தான், கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான், பணத்தை சாப்பிட முடியாது என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.” ~ Cree Prophecy

இந்தக் கட்டுரையின் தலைப்பு பலருக்கும் முட்டாள்தனமாக தெரியலாம். அமெரிக்கா நிச்சயமாக ஒரு நாகரீக தேசம்தான் என்றே அவர்கள் பதிலுரைப்பார்கள். நாகரீகமடைந்த என்பதற்கு மிக முன்னேறிய சமூகத்தையும் கலாச்சாரத்தையும்தானே நாம் வரையறையாக வைத்திருக்கிறோம். மேலும், நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு அறிகுறியாக, உலகில் இருப்பதிலேயே சிறந்தவைகள் என நம்முடைய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் சேர்த்து நம்முடைய அருங்காட்சியகங்கள், திரையரங்கங்கள் மற்றும் சிம்பொனி ஆகியவற்றை நாம் பெருமையுடன் குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நாகரீமடைந்த என்பதற்கான பிற வரையறைகளில் காணப்படும் பெயரடைகள் மனிதத்தன்மை, அறவியல் மற்றும் பகுத்தறிவு ஆகியவையாகும். இதற்கான எதிர்ப்பதங்கள் காட்டுமிராண்டித்தனம், மூர்க்கத்தனம் மற்றும் மனிதத்தன்மையற்றது என்பனவற்றை சொல்லலாம்.

ஒரு நாகரீக சமூகம் அல்லது நாடானது நன்கு உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறையைக் கொண்டிருக்கும், அது அங்கு வாழும் மக்களை நியாயமாக நடத்தும்.

நாகரீகமடைந்த என்பதற்கான வரையறைகளோ அல்லது பயன்பாடோ இவ்வகையில்தான் விளக்கமளிப்பதற்கு வாய்ப்பளிக்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்கா ஒரு உயர் வளர்ச்சியுற்ற சமூகம் மற்றும் கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது என்பதை நான் நிச்சயம் ஒப்புக்கொள்வேன். இருந்தாலும், நம்முடைய உயர் வளர்ச்சியுற்ற அரசியல் அமைப்பு, வளமான மற்றும் அதிகாரம் மிகுந்தவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும் வகையில்தான் மோசமாக சீரழிந்து போயிருக்கிறது. இந்தச் சீரழிவின் விளைவாக, நம்முடைய அரசாங்கம் மற்றும் பொருளாதார அமைப்பானது, பலரது நலனை மீறி சிலருக்கு மட்டுமே நியாயமற்ற வகையில் லாபத்திற்கான முன்னுரிமை அளிக்கிறது. இதனால், ஒரு உயர் வளர்ச்சியுற்ற சமூகம் மற்றும் கலாச்சாரமானது நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றுதான் நான் வாதிட வேண்டியிருக்கிறது, ஆகவே அமெரிக்கா ஒரு நாகரீகமடைந்த நாடாகத்தான் இருக்கும் என்பது உண்மையல்ல. மேலும், பெரும்பாலான மேற்கத்திய ஐரோப்பாவைப் போல் அல்லாமல், உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் காணப்படும் மனித உரிமைகள் பலவற்றையும் அமெரிக்கா நடைமுறைப்படுத்தவில்லை.

நம்முடைய மனிதத்தன்மையற்ற நடத்தைக்கான மேலதிக ஆதாரத்திற்காக பின்வரும் செயல்களை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளுமா அல்லது அனுமதிக்கத்தான் செய்யுமா:

அமெரிக்க செவ்விந்தியர்கள் இனஅழிப்பு அல்லது அடிமைத்தனம்;

பெரும் அளவிலான மக்கள், குழந்தைகள் உட்பட குடும்பத்தினர்களுடன் வீடற்றவர்களாக இருப்பது;

சிறுபான்மையினர் மற்றும் ஏழைகளுக்கு மிக பயங்கரமான அளவிற்கு எதிராக இருக்கின்ற நீதித்துறை அமைப்பு;

மிக அதிகமான கல்விக்கான செலவு, மாணவர்கள் பலரும் பல பத்தாண்டுகளுக்கு பெரும் கடனை திருப்பிச் செலுத்தவேண்டிய சுமைக்கு ஆளாகியிருப்பது;

சுகாதார காப்பீட்டு மற்றும் மருந்தாக்கியல் துறைகள் சுகாதார பராமரிப்பை மிகுந்த செலவுக்குரிய ஒன்றாக ஆக்கியிருப்பதால் மக்களில் பலராலும் அதை தாங்கிக்கொள்ள முடியாத நிலை;

சில முதலாளிகள் தங்களுடைய பணியாளர்களின் குடும்பத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட ஏற்படுத்திக்கொடுக்க இயலாத அளவுக்கு குறைவான ஊதியம் வழங்குவது;

தங்களுடைய இனத்தின் அடிப்படையில் குடிமக்கள் சிலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது;

அகதிகள் மற்றும் குடியேறிகள் மீதான அச்சுறுத்தும் அத்துமீறல்;

காற்று, தண்ணீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தியும், அருகாமையில் வாழும் மக்களுடைய ஆரோக்கியத்தை அச்சுறுத்தவும் செய்கின்ற தொழில்துறை: மற்றும்

அரசாங்கத்தினுடைய செயல்பாடின்மை அல்லது காலநிலை பேரழிவிற்கு இட்டுச்செல்லுகின்ற தொடரும் வாழ்க்கைமுறை ஆகியவற்றினூடாக, வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது.

ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களுக்கு வந்தபோது, அவர்கள் அங்கு வாழ்ந்த பூர்வகுடி மக்களை காட்டுமிராண்டிகளாகவே பார்த்தனர். ஆயினும், அமெரிக்க இந்தியர்களுடைய பின்வரும் இரண்டு மேற்கோள்களை பரிசீலித்துப் பாருங்கள்:

“நம்முடைய குழந்தைகள், பேரக்குழந்தைகள் மற்றும் இன்னும் பிறக்காத குழந்தைகளுக்காக நாம் காடுகளை பாதுகாத்திட வேண்டும். பறவைகள், விலங்குகள், மீன்கள் மற்றும் மரங்கள் போன்று, தங்களுக்காக பேசமுடியாதவற்றிற்காகவும் நாம் காடுகளை பாதுகாத்திட வேண்டும்.” ~ Qwatsinas, Nuxalk Nation

“கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான், கடைசி நதியும் நஞ்சாக்கப்பட்ட பின்னர்தான், கடை மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான், பணத்தை சாப்பிட முடியாது என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.” ~ Cree Prophecy

சுற்றுச்சூழல் பாதுகாப்பே அவசியமானது, பணத்திற்கான பேராசை மிகவும் ஆபத்தானது, அதனால் நம்முடைய செயல்கள் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதை பூர்வகுடி மக்கள் புரிந்து வைத்திருந்தனர். காலநிலை பேரழிவு நம் எல்லோருக்குமே தெளிவாகத் தெரிந்துவிட்டபடியால்தான் நாம் இறுதியாக இந்தக் கூற்றுக்களை ஏற்றுக்கொள்ள தொடங்கியிருக்கிறோம்.

மேலும், அமெரிக்க இந்திய தேசங்கள் உட்பட பிற நாடுகளுக்கு எதிராக நாம் மேற்கொண்டிருக்கும் நெறிமுறையற்ற போர்க் குற்றங்கள் வெட்கக்கேடான அளவுக்கு அநாகரீகத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. உதாரணத்திற்கு, ஜே.ராபர்ட் ஓபன்ஹைமரின்(அணுகுண்டின் தந்தை) கூற்றுப்படி, இரண்டாம் உலகப்போர் எழுப்பிய தார்மீக பிரச்சினைகளுடன் அப்போதைய போர் செயலாளர் ஹென்றி ஸ்டிம்ஸன் போராடிக் கொண்டிருந்தார், போரினால் ஏற்பட்ட “திகைப்பூட்டும் அளவுக்கான” மனசாட்சியின்மை மற்றும் பரிவின்மை குறித்த தன்னுடைய அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். “கலக்கமுறாமலும், அக்கறையில்லாமலும், மௌனமாக நாம் வரவேற்ற ஐரோப்பாவின் மீதான பேரளவு குண்டுவீச்சுக்கள் மற்றும், ஜப்பான் மீதான அணுகுண்டு வீச்சினால்,” தான் மிகுந்த தொந்தரவுக்கு ஆளானதாக ஸ்டிம்ஸன் குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ ஜெனரல் ஒமர் பிராட்லியும் இதே விஷயத்தை மறுபடியும் குறிப்பிட்டுள்ளார்: “நம்முடைய உலகம் நியூக்ளியர் ராட்சசர்களாலும், அறம்சார் சிசுக்களாலும் ஆனது. நமக்கு அமைதியைப் பற்றித் தெரிந்ததைவிட போரைப் பற்றித்தான் நன்றாகத்தான் தெரியும், நாம் வாழ்வதைப் பற்றி தெரிந்துகொண்டதைவிட கொலைசெய்வதைப் பற்றித்தான் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம்.”

அமெரிக்க அதிபர்களான ரூஸ்வெல்ட் மற்றும் ட்ரூமன் ஆகியோருக்கு அலுவல் தலைவராக பணியாற்றிய அட்மிரல் லியாஹி, அணுகுண்டை பயன்படுத்துவது குறித்து விமர்சித்துள்ளார்: “ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது காட்டுமிராண்டித்தனமான ஆயுதத்தைப் பயன்படுத்தியது ஜப்பானுக்கு எதிரான நம்முடைய போரில் எந்தவிதமான உதவியையும் அளித்துவிடவில்லை . . . ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டிருந்த ஜப்பானியர்கள் சரணடைவதற்கு தயாராகவே இருந்தனர் . . . அணுகுண்டை முதலாவதாக பயன்படுத்தியவர்கள் என்ற வகையில், இருண்ட காலங்களின்போது காட்டுமிராண்டிகளிடையே சாதாரணமாக காணப்பட்ட அறம்சார் மதிப்பீடுகளையே நாமும் பின்பற்றியிருக்கிறோம் என்பதே என் கருத்து. இப்படிப்பட்ட முறையில் போரை நடத்த நான் பயிற்றுவிக்கப்படவில்லை, பெண்களையும் குழந்தைகளையும் அழித்துவிட்டு போர்களில் வென்றுவிட முடியாது.”

துரதிஷ்டவசமாக, இத்தகைய அநாகரீகமான காட்டுமிராண்டிக் கொள்கைகளைத்தான் நாம் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கிறோம், உதாரணம், கொரியா, வியட்நாம் மற்றும் ஈராக். நம்முடைய கொள்கைகளுடன் ஒத்துப்போகாத வட கொரியா, வெனிசுலா மற்றும் ஈரான் போன்ற நிறைய நாடுகளின் மீது நாம் பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறோம், அத்துடன், இந்த குரூரமான இரக்கமற்ற தடைவிதிப்புகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களே ஆகும். தனக்கு அச்சுறுத்தலாக இல்லாத நாடுகள் மற்றும் மக்களை அழித்தொழிக்கின்ற அதேநேரத்தில் இப்படி தேவையில்லாமலும், சட்டவிரோதமாகவும் கொலைகள் செய்கின்ற அமெரிக்காதான் நாகரீக தேசமாக நடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழில்: மர்மயோகி

murmayogi@gmail.com 

  • ரான் ஃபார்தஃபர், டெக்ஸாஸ் பல்கலைக்கழக பயோஸ்டேடிடிக்ஸ் ஓய்வுபெற்ற பேராசிரியர். காங்கிரஸ் மற்றும் கொலராடோ மாகாண ஆளுநர் பதவிக்கான கிரீன் பார்ட்டி கட்சியின் முன்னாள் வேட்பாளர்.

Source Credit: countercurrents.org

Total Page Visits: 116 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *