தமிழக சிறப்பு வேளாண் மண்டலம் நிறைவேறுமா?

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் மற்றும் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக சிறப்பு வேளாண் மண்டலம் அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

1996-ல் மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்கான முயற்சிக்கு காரணமாக அமைந்தார். 2009-ல் மன்மோகன் சிங் அரசினால் இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்துக்கு, ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஆய்வு பணிகள் நடத்தி, நான்கு ஆண்டுக்கு ஆய்வு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2013-ல் விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக அன்றைய அ.தி.மு.க. அரசு ஆய்வுப் பணிகளை முடக்கியது. 2017-ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் அரசிடம் அழுத்தம் கொடுத்து வேதாந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மீண்டும் அனுமதிபெற்று நெடுவாசல், கதிராமங்கலம் பகுதிகளில் ஆய்வை தொடங்கியது.

இந்ததிட்டத்தை பா.ஜ.க. அரசின் வழிகாட்டுதலில் இன்றைக்கு ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது. மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த மக்களோடும், டெல்டா விவசாயிகளோடும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராட்டம் நடத்தின. பின்னர் பா.ஜ.க. அரசு எதிர்ப்பு நோக்கில் தி.மு.க.வும் காங்கிரசும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டன.

இன்றைக்கு ஒ.என்.ஜி.சி. நிறுவனம் தோண்டிய 768 கிணறுகளில் 187 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. வேதாந்த நிறுவனம் 274 கிணறுகளை தோண்ட முயற்சி செய்து வருகிறது.

இந்த சூழலில் வேளாண் பாதுகாப்பு மண்டலம் அறிவிப்பு என்ன பாதுகாப்புகளை தரும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களும் புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளும் டெல்டா மாவட்டமாக குறிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் சுமார் 28 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் சாகுபடியால் ஆண்டுக்கு 33 லட்சம் டன் நெல் கிடைக்கிறது. இந்த பகுதிகள்தான் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதை எப்படி செயல்படுத்த முடியும்?

சமீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஆய்வுக் கிணறுகளை தோண்ட சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும், மக்களின் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரின் வேளாண் சிறப்பு மண்டலம் அறிவிப்பு வந்துள்ளது.

வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி கூடப்போகும் தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு முன்னால், தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை போன்ற தீர்மானங்கள் மத்திய அரசினால் கண்டுகொள்ளப்படவில்லை..

இந்த வேளாண் சிறப்பு மண்டல அறிவிப்பால் புதிய அரசியல் நகர்வு உருவாகியுள்ளதாக தோன்றுகிறது. தமிழகத்தில் மீண்டும் தேசியக் கட்சிகளை காலூன்றவிடாமல் தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்ற அரசியல் நகர்வு மீண்டும் எழுந்துள்ளதாகவே தோன்றுகிறது.

தமிழக சட்டமன்றத்தின் நீட், எழுவர் விடுதலை தீர்மானங்களைப் போல சிறப்பு வேளாண் மண்டல சட்டமன்றத் தீர்மானமும் பா.ஜ.க. அரசால் கிடப்பில் போடப்படுமா? அல்லது தமிழக அரசின் தீவீரத்தால் உயிர்ப்பெறுமா? அல்லது இந்த எடப்பாடி அரசு தன்னுடைய கடமை முடிந்துவிட்டது, இனி மத்தியில் ஆளும் பா.ஜ.க. கையில்தான் எல்லாம் இருக்கிறது என மத்திய அரசை கைகாட்டிவிட்டு சென்றுவிடுமா?

காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

 

– முத்தையா வெள்ளையன்

Total Page Visits: 173 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *