கடந்த இரண்டு வாரங்களில் கன்யாகுமார் ஏழுமுறை தாக்கப்பட்டுள்ளார் – செய்திகள் தொகுப்பு – பிப்ரவரி, 12

 

கடந்த இரண்டு வாரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கன்யாகுமார் ஏழுமுறை தாக்கப்பட்டுள்ளர் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த செவ்வாய் அன்று (11.02.2020)  பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள சேர்காட்டி என்ற இடத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருடைய காரில் வந்துகொண்டிருந்தபோது மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் கன்யாகுமார் காயமடைந்தார். இந்த தாக்குதலுக்கு பின்னால் பா.ஜ.க. இருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

NPR, NRC, CAA ஆகியவற்றிக்கு எதிராக மாநிலம் தழுவிய ஜனகன யாத்ரா என்ற பேரணி கன்யாகுமார் தலைமையில் நடந்துவந்தது. அதற்கான பொதுக்கூட்டத்திற்கு வரும்போது அவர் தாக்கப்பட்டார். கன்யாகுமாருடன் இந்தப் பேரணியில் பீகார் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மன்சி (ஹிந்துஸ்தான் அவாமி மோர்சா),  காங்க்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஷகில் அகமது கான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த தாக்குதல் பற்றி பீகார் தலைமை செயலாளர் கூறும்போது,  நாங்கள் நிலைமையை உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். சுதந்திரம் மற்றும் பாதுகாப்புடன் ஒவ்வொருக்கும் தங்கள் கருத்தை தெரிவிக்க உரிமை உண்டு. இதை மாநில முதல்வர் நிதிஷ்குமார் நன்கு உணர்ந்துள்ளர் என்று தெரிவித்தார்.

 

பிற செய்திகள்

ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி பா.ஜ.க.வுடன்இணைப்பு

பாபுலால் மராண்டி தலைமையிலான ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா(பிரஜதாரி) கட்சி வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி பா.ஜ.க.வுடன் இணைக்கப்படும் என்று அதன் தலைவர் பாபுலால் மராண்டி தெரிவித்தார். மேலும் கூறும்போது,  கட்சியின் மத்தியகுழு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கமால் இணைப்பிற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெறும் இணைப்பு நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்துகொள்கின்றனர் என்றார்.

ஜார்கண்ட் விகாஸ் மோர்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரதீப்  யாதவ், பந்து துர்கே ஆகியோர் இந்த  இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இவர்கள் அக்கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். பா.ஜ.க.வுடன் சேரும் நிலையில் இவர்கள் இருவரும் டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய தோல்வியை சந்தித்த ஜார்கண்ட் விகாஸ் மோர்சா மூன்றே மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது. அதில்  இருவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதராவாகவும் ஒருவர் கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.க.வில் சேருவது குறிப்பியடத்தக்கது.

 

தமிழகத்தில் சட்டவிரோதமாக வசித்த 40 வங்கதேசத்தவர் வெளியேற்றம்

பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு  குடிபெயர்ந்துள்ள மூஸ்லீம் தவிர்த்த பிற மதத்தினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு பேராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த் சூழலில் தமிழக காவல்துறை, மாநிலத்தில் முறையான ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை தேடும் படலத்தை தொடங்கியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை முதலிய இடங்களில்  சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களிடம் குடும்ப அட்டை, வாக்களார் அடையாள அட்டை, கடவுச்சீட்டு போன்றவை இருந்தும், அவையெல்லாம் போலியானவை என்று காவல்துறையினர்  தெரிவித்தனர்.

மேலும், இவர்கள் மேற்கு வங்கம் வழியாக தமிழகத்தில் நுழைந்துள்ளனர் என்றும், அவர்கள் வங்கதேசத்திற்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி

6 உள்ளாட்சி அமைப்புகளில் 167 வார்டுகளில் நடைபேற்ற தேர்தலில் காங்கிரஸ் 69 வார்டுகளிலும், பா.ஜ.க.59 வார்டுகளிலும் ஜனதா தளம்(எஸ்) 15 இடங்களிலும், சுயேட்சைகள் 24 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

நான்கு நகரசபைகளில் காங்கிரசும், பா.ஜ.க. ஒரு  நகரசபையிலும் வெற்றிபெற்றுள்ளது. உன்சூர் நகரசபையில் தொங்குநிலை ஏற்பட்டுள்ளது.

 

நெருக்கடிக்கு பணிந்தார் எடியூரப்பா

கர்நாடகத்தில் 6-ஆம் தேதி பா.ஜ.க.மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக பத்து மந்திரிகள் பதவியேற்றனர். அவர்களுக்கு நான்கு நாட்களுக்குப் பிறகு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. இதில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்களில் திருப்தி இல்லையென்று பி.சி.பாட்டீல், ஆனந்சிங், சிவராம் ஹெப்பர்,  ஸ்ரீமந்த் பாட்டீல் ஆகிய மந்திரிகள் கடும் அதிருப்தி அடைந்து முதல்வர் எடியூரப்பாவை சந்தித்து நெருக்கடி கொடுத்தனர்.

இலாக்காக்கள் ஒதுக்கப்பட்ட ஒருநாளிலே அவர்கள் கேட்ட இலாக்காக்கள்  ஒதுக்கப்பட்டன. இதற்கு மாநில கவர்னர் அனுமதியளித்துள்ளார்.

 

அயர்லாந்து தேர்தலில் இடதுசாரி கட்சியின் பெயின் வெற்றி

டப்ளின்: அயர்லாந்து தேர்தலில் இடதுசாரி கட்சியான ஷின்பெயின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. மொத்தமுள்ள 160 இடங்களில் 42 இடங்களில் போட்டியிட்டு 24.53 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று 38 இடங்களில் வென்றுள்ளது.

கடந்த பல பத்தாண்டுகளாக வலதுசாரி கட்சிகளான பியானா பயல் மற்றும் பைன் கயேல் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தன. கடந்த ஆட்சியிலிருந்த பைன் கயேல் கட்சி இந்த தேர்தலில் 35 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்னொரு வலதுசாரி கட்சியான பியானா பயல் கட்சி 37 இடங்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றது.

மொத்தமுள்ள 160 இடங்களில் ஆட்சி அமைக்க 80 இடங்கள் தேவைப்படுகின்றன. யாருக்குமே பெருபான்மை இல்லாத நிலையில் ஷின் பெயின் கட்சியின் தலைவர் மேரி மெக்டொனால்ட் கூறும்போது,  இந்த வெற்றி மிக சாதரண மக்களின் வெற்றியாகும். மக்கள் எங்கள் சித்தாந்தத்திற்கு வாக்களித்துள்ளதால் ஒருமித்த கருத்துள்ள பசுமைக் கட்சி, தொழிலாளர் கட்சி, சமூக ஜனநாயகவாதிகள், பி.எப்.பி. கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரத்தில் அமருவதற்கான வேலைகள் உடனடியாக தொடங்கப்படும் என்றார்.

 

  • Newsmyth Editorial Team
Total Page Visits: 12 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *