ஆம் ஆத்மி வெற்றியும், வெற்றிபெறாத மதச்சார்பற்ற இந்தியாவும் – பினு மாத்யூ

 

இனி வரப்போகும் தேர்தல்களுக்கு டெல்லி ஒரு முன்மாதிரியாக இருக்கலாம், ஆனால், மதச்சார்பற்ற இந்தியா இன்னமும் வெற்றிபெறவில்லை

 

முழு வீச்சிலான வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டபோதிலும், பிரதமர் நரேந்திர மோடியின் பிஜேபி டெல்லி மாநில தேர்தலில் வெற்றிபெறத் தவறிவிட்டது. பொறுப்பில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 63 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. பிஜேபி 7 இடங்களை வென்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.

இந்த தேர்தலை இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் என்று அழைக்குமளவுக்கு வெறுப்பு அரசியல் அடிப்படையில் பிஜேபி பிரச்சாரம் செய்தபோதிலும் அது மக்களின் மனதை வெற்றிகொள்வதில் தோல்வியடைந்துவிட்டது. மற்றொருபுறம் ஏஏபி-யின் பிரச்சாரம் நல்ல ஆட்சித்திறனை அடிப்படையாக கொண்டிருந்தது. சமூக சுகாதாரம், கல்வி, இலவச மின்சாரம் மற்றும் ஏழைகளுக்கான உணவு போன்ற தன்னுடைய வெற்றிகரமான பணிகளை முன்னிறுத்தியது.

இந்தியாவின் வெறுப்பு நிரம்பிய அரசியலில் இந்த டெல்லி தேர்தல் முடிவு ஒரு பெரும் நிம்மதியை வரவழைத்தாலும், ஏஏபி இந்த தேர்தலை மிகப் பழைய மதிப்பீடுகளாகிய மதச்சார்பின்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றை வைத்து வென்றுவிடவில்லை. ‘நாசி நியூரம்பெர்க் குடியுரிமை சட்டங்களை போன்றுள்ளது’ என அருந்ததி ராய் குறிப்பிட்ட, அரசியலமைப்புக்கு முரணான குடியுரிமை சீர்திருத்த சட்டம் (சிஏஏ) குறித்து இந்தக் கட்சி மௌனம் சாதித்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370 நீக்கம், அயோத்தி தீர்ப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் ஆகியனவற்றை உள்ளிட்ட விஷயங்களில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசாங்கம் எடுத்த சர்ச்சைக்குரிய எல்லா முக்கிய முடிவுகள் குறித்தும் இந்தக் கட்சி மௌனம் சாதித்து வந்துள்ளது. பிஜேபி-இன் “பி” அணியாக ஏஏபி மத்திய-வலதுசாரி அரசியல் ஆட்டம் ஆடுவது தெளிவாகவே தெரிகிறது.

தன்னுடைய வெற்றியுரை பேச்சின்போது இந்த வெற்றியை “பாரத மாதாவுக்கு” அர்ப்பணித்ததன் மூலம் கெஜ்ரிவால் தன்னுடைய மத்திய-வலதுசாரி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். கெஜ்ரிவாலின் செலுத்திய நன்றிகளுள் ஹனுமன் கடவுளும் அடங்குவார். “இன்று செவ்வாய்க்கிழமை, அனுமன்-ஜிக்கு உரிய நாள். டெல்லியை தன்னுடைய ஆசீர்வாதங்களால் ஹனுமன்-ஜி நனைத்திருக்கிறார். நன்றி, ஹனுமன்-ஜி,” என்று கூறியுள்ளார் டெல்லி முதலமைச்சர். தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் உச்சரித்த ஹனுமன் வாழ்த்துப் பாடல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் வெற்றிபெறுவதற்காக அவர் இந்துத்துவாவிடம் அடைக்கலமாகிவிட்டார் என்று குற்றம்சாட்டும் அளவுக்கு பிஜேபி-யை தூண்டிவிடவும் செய்திருக்கிறார்.

“பாரத் மாதா கீ ஜெய்,” என்ற கோஷங்களும் எழுப்பப்பட்டுள்ளன, இது ஏஏபி கூட்டங்களில் சாதாரணமாக கேட்கப்படக்கூடிய ஒன்றல்ல.

முன்னாள் வருமானவரி அதிகாரியாக இருந்து, போராளியாகி, பிறகு அரசியல்வாதியும் ஆகிவிட்ட அவர் மூன்றாவது முறையாக நேரடி முதல்வராயிருக்கிறார்.

இது பாசிச பிஜேபி-க்கு எதிரான வெற்றியாக இருந்தாலும்கூட நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளுக்கு கிடைத்த வெற்றி என்று இதனை அழைத்துவிட முடியாது. இந்தியாவில் இனி வரப்போகும் தேர்தல்களுக்கு டெல்லி ஒரு முன்மாதிரியாக இருக்கலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மதச்சார்பற்ற இந்தியா இன்னமும் வெற்றிபெறவில்லை.

தமிழில்: மர்மயோகி

 

பினு மாத்யூ, ஆசிரியர்: countercurrents.org

Total Page Visits: 27 - Today Page Visits: 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *