மூலாதாரங்கள் குறித்த கேள்வி - ராமச்சந்திர குஹா

ஆர்எஸ்எஸ்-ன் புனிதமற்ற புனிதநூல்

 

புத்தகம் பதிப்பிப்பதில் பெங்களூரு பிரபலமானதல்ல. பெரிய ஆங்கில மொழி பதிப்பாளர் யாரும் அங்கே அலுவலகம் வைத்திருக்கவில்லை. அதேநேரம், முன்னணி கன்னட மொழி பதிப்பாளர்கள் மைசூரு மற்றும் தர்வாத் ஆகிய நகரங்களில்தான் மையம் கொண்டிருந்தனர். என்னுடைய சொந்த ஊர் என்றபோதிலும், ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இந்திய அரசியல் மற்றும் சமூகவியல் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இங்குதான் பதிப்பிக்கப்பட்டது. அதுதான் எம்.எஸ்.கோல்வால்கர் எழுதிய சிந்தனைத் திரட்டு (Bunch of Thoughts) என்ற புத்தகம். இவர்தான் முப்பது வருடங்களுக்கும் மேலாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை நடத்தியவர், தன்னுடைய இறப்புக்குப் பின்னரும்கூட இந்த அமைப்பின் முதன்மை கருத்தியலாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்து வருபவர். உண்மையில், நாக்பூரில் உள்ள எல்லா ஆர்எஸ்எஸ் அலுவலகத்திலும் ( அதைத் தொடர்ந்து எல்லாவிடத்திலும்) கோல்வால்கரின் தாடிவைத்த முகமானது எல்லோருமே பார்க்கும்படி காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். 

கோல்வால்கரின் சிந்தனைத் திரட்டு 1966-இல், அப்போது பெங்களூர் என்றழைக்கப்பட்ட சாம்ரஜ்பேட்டில் அமைந்திருக்கும் விக்ரமா பிரகாஷன் நிறுவனத்தால் முதல்முறையாக பதிப்பிக்கப்பட்டது. அதன் ஆங்கில மொழியாக்கத்தில், அவருடைய பல வருட தேர்ந்தெடுத்த பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அந்தப் புத்தகத்தை நான் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னர் படித்திருக்கிறேன், சமீபத்தில் அதை மறுமுறை படித்தேன். அதற்கு காரணம், பாரதீய ஜனதா கட்சியானது மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை நடத்திவருகிறது. கோல்வால்கரை ஆராதிக்கும் அதனுடைய பிரதமர்  தன்னுடைய புண்ணியஸ்ரீ குருஜி புத்தகத்தில் அவரைப் பற்றி நீளமாக பாராட்டி எழுதியிருக்கிறார்.

கோல்வால்கரின் சிந்தனைத் திரட்டு மிகப்பெரும் அளவில் தற்கால நிகழ்வுகளுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. பிஜேபி-இன் பல்வேறு முக்கியத் தலைவர்களும் ஆர்எஸ்எஸ் சிந்தனைப் பள்ளியில் படித்தவர்கள். அந்தக் கட்சியின் செயல்பாடுகள் கோல்வால்கரின் சிந்தனையில் ஆழமாக பிணைப்புற்றும், அதனால் செல்வாக்கு பெற்றும் விளங்குகிறது. தங்களுடைய புனிதப் புத்தகமாக ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்கின்ற வகையில் கிறி்ஸ்துவர்களுக்கு பைபிள், முஸ்லீம்களுக்கு குரான் மற்றும் மார்க்சியத்தை பின்பற்றுகிறவர்களுக்கு கம்யூனிஸ அறிக்கை எப்படியோ அப்படிப்பட்டதுதான் ஒரு ஹிந்துத்துவவாதிக்கு சிந்தனைத் திரட்டு என்பதும். கோல்வால்கரின் புத்தகங்களைப் படிக்காத ஹிந்துத்துவ செயல்பாட்டாளர்களும்கூட அவற்றை பயிற்றுவிப்பவர்களின் வழியாக அதனுடைய கருத்தாக்கங்களை புரிந்துகொள்கின்றனர்.

கோல்வால்கரின் சிந்தனைத் திரட்டினுடைய மைய வாதம் என்னவென்றால், ஹிந்துக்கள் என்போர் ஒருவரே, அவர்கள் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், எல்லா காலத்திலும் அவரேகளே அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். கோல்வால்கரின் கூற்றுப்படி, அதனுடைய புராதான தெளிவுறாத தோற்றுவாய்களில் இருந்தே, ஹிந்து சமூகமானது பல்வேறு காலப்பகுதிகள் மற்றும் வடிவங்களின் சிக்கல்களுடன் மிக விரிவான அளவிலும், ஆனால், பலதரப்பட்ட பார்வைகள் மற்றும் தெளிவுபடுத்தல்களின் வழியாகவும் அடிப்படையில் ஒரே சரட்டில் இணைக்கப்பட்டே வளர்ச்சியுற்றிருக்கிறது.இந்த ஒன்றிணைந்த சரடு என்ன என்பது துல்லியமாக வரையறுக்கப்படவே இல்லை. ஹிந்துக்கள் எப்போதும் ஒரே இடத்திலேயே இருந்திருக்கிறார்கள், இந்தியா எப்போதும் ஒரே தேசமாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமலேயே இது சொல்லிச் செல்கிறது.  

மத்திய காலகட்டத்தில் தமிழர்கள் மற்றும் சிந்திக்கள், பிராமணர்கள் மற்றும் தலித்துக்கள் ஒருவரேதான் என்று உணர்ந்திருக்கக்கூடிய ஒரு தனி இந்தியன் அல்லது ஹிந்து தேசமானது உண்மையிலேயே இருந்திருக்குமா? புராதான மற்றும் ஹிந்து தேசம் என்ற தன்னுடைய உரிமைகோரலை அனுபவவாத ஆதாரத்துடன் தாங்கிப்பிடிப்பதை விட்டுவிட்டு கோல்வால்கர் இதனை ஒரு கச்சாவான வீண்பெருமையுடன் செய்கிறார்.    

அவர்களுடைய தற்போதைய நிலைமை வீழ்ச்சியுறும் தறுவாயில் இருந்தாலும், கோல்வால்கர் இரண்டாவதாக அனுமானிப்பது என்னவெனில், ஹிந்துக்கள் இந்த உலகத்திற்கு தலைமையேற்கவும் வழிகாட்டவும் விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாகும். அவர், மனித சகோதரத்துவத்திற்காக கடைபிடிக்க வேண்டிய அடிப்படிகளை, ஒன்றிணைந்த உலக ஹிந்துக்களின் சிந்தனையால் மட்டுமே வழங்க முடியும், என்கிறார். மேலும், உலக தலைமைத்துவம் என்பது, “விதிப்படி ஹிந்துக்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்ற ஒரு தெய்வீக நம்பிக்கை என்போம், என்கிறார். (மேற்கொண்டு கோல்வால்கர், ஹிந்துக்கள் உலகின் தலைமையேற்க விதிக்கப்பட்டவர்கள் என்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஹிந்துக்களுக்கு தலைமையேற்க விதிக்கப்பட்டது என கருதுகிறார்.)

ஆர்எஸ்எஸ்-ன் இந்த தலைமை சிந்தாந்தவாதி ஹிந்துயிஸம் தவிர்த்த பிற மதங்களை எப்படிப் பார்க்கிறார்? கோல்வால்கர் புத்தரை பாராட்டுகிறார், ஆனால் அவரைப் பின்பற்றுகிறவர்களை கடுமையாக சாடுகிறார். புத்தர், இந்த மண்ணின் பழமையான தேசியப் பாரம்பரியங்களை வேரறுக்கத் தொடங்கினார். நம்முடைய சமூகத்தில் பேணிக்காக்கப்பட்ட மகத்தான கலாச்சார நற்பண்புகள் தேடி அழிக்கப்பட்டன, என்கிறார் கோல்வால்கர். பௌத்தர்களின் செல்வாக்கினால், பௌத்த முகமூடி அணிந்த அந்நிய ஆக்கிரமாப்பாளர்களை வரவேற்று அவர்களுக்கு உதவி செய்த பௌத்த மதவெறியர்களால், இந்த தேசத்திற்கான அர்ப்பணிப்பும் அதனுடைய பாரம்பரியமும் இந்தளவுக்கு கீழே போய்விட்டது. பௌத்த பிரிவானது தாய் சமூகத்திற்கும் தாய் மதத்திற்கும் துரோகியாகிப்போனது, என்கிறார் அவர்.  

இந்திய பௌத்தர்களின் இந்தக் குறுக்கீடு தேசபக்தியுள்ளதாகத் தெரியவில்லை. 1950-கள் மற்றும் 1960-களில் எழுதிவந்த கோல்வால்கர், பி.ஆர்.அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறிய பின்னர் அந்தச் செயலை எப்படிப் பார்த்திருப்பார்? அம்பேத்கர் தாய் சமூகத்திற்கும் தாய் மத்தத்திற்கும் எதிரானவர் என்று அவர் நினைத்திருப்பாரா? இந்த இரண்டு கேள்விகளுக்குமே சிந்தனைத் திரட்டு மௌனம் காக்கிறது. சுவாரஸியம் என்னவென்றால், அம்பேத்கரிடத்தில் புதிதாக பாசத்தைக் கண்டடைந்துள்ள ஆர்எஸ்எஸ்-க்கு முரணாக, இந்த மாபெரும் தலித் விடுதலையாளரைப் பற்றி கோல்வால்கரின் புத்தகம் பெரிதாக எதையும் குறிப்பிடவில்லை. அதேநேரம், கோல்வால்கர் சாதிய அமைப்பை தீவிரமாக ஆதரிக்கிறார், அது நூற்றாண்டுகளாக ஹிந்துக்களை ஒருங்கிணைத்து அமைப்பு முறைப்படுத்தியிருக்கிறது என்கிறார். இவ்வகையில் அவர் எழுதும்போது, ஒருபக்கம் சாதிய அமைப்புமுறை கொண்ட ஹிந்து சமூகமானது கிரேக்கர்கள், ஹுனாக்கள், முஸ்லீம்கள் மற்றும் ஐரோப்பியர்களுடைய சூறையாடல்களை இரண்டாயிரம் வருடங்களாக எதிர்கொண்டு மாண்டுவிடாமலும் வெற்றிகொள்ளப்படாமலும் இருக்கிறது, மற்றொருபுறம், சாதியற்ற சமூகங்கள் என்றழைக்கப்படுபவை மண்ணோடு மண்ணாகி மீண்டு எழு முடியாமலே போய்விட்டன, என்று குறிப்பிடுகிறார்.  

வருணாசிர தருமத்தை பாதுகாக்கவே கோல்வால்கர் சாதியைக் குறிப்பிடுகின்ற அதேநேரத்தில், அவருடைய பிரதான எழுத்தில் பாலின உறவுகளுக்கு எத்தகைய கவனத்தையும் கொடுக்கவில்லை. சிந்தனைத் திரட்டானது ஒட்டுமொத்தமாகவே ஹிந்து சமூகத்தில் தலித்துகளும் பெண்களும் ஒடுக்கப்படுவதை புறம்தள்ளிவிடுகிறது. அதேநேரம், இதன் ஆசிரியர் இந்திய முஸ்லீம்கள் மற்றும் இந்திய கிறிஸ்துவர்கள் மீது மிகுந்த சந்தேகம் கொண்டவராய் இருக்கிறார். இஸ்லாத்திற்கோ கிறிஸ்துவத்திற்கோ மதம் மாறிய மக்களின் மனப்போக்கு என்னவாக இருக்கும்? அவர்கள் இந்த நிலத்தில்தான் பிறந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் உப்புக்கு அவர்கள் உண்மையானவர்களா? அவர்களை வளர்த்தெடுத்த இந்த மண்ணிற்கு அவர்கள் நன்றிக்கடன் உள்ளவர்களா? தாங்கள் இந்த மண்ணின், அதனுடைய பாரம்பரியத்தின் பிள்ளைகள் எனவும், அதற்கு சேவையாற்றுவதே மிகச்சிறந்த நற்பேறு என்பதையும் உணர்ந்திருக்கிறார்களா? அவளுக்கு சேவையாற்றுவது தங்கள் கடமை என்பதை உணர்ந்திருக்கிறார்களா? இல்லை! தங்களுடைய நம்பிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்த தேசத்திற்குண்டான பாசமும் அர்ப்பணிப்பும் அவர்களிடத்தில் காணாமலேயே போய்விட்டது.

இங்கே கோல்வால்கர் கேட்கும் கேள்விகளுக்கும், 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய யூத எதிர்ப்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் இடையில் கவனிக்கத்தக்க ஒற்றுமை இருக்கிறது. பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் பிரிட்டிஷ் தேசியவாதிகள் அனைவருமே தங்கள் நாட்டிலுள்ள யூதர்கள் தங்களுடைய தாய்மண்ணிற்கு போதுமான விசுவாசமுள்ளவர்கள் அல்ல என்று சந்தேகப்பட்டார்கள்.

ஆதாரப்பூர்வமாக அல்லாமல், குணவியல்புரீதியாக இந்தியா முழுவதிலும் எண்ணிறைந்த குட்டி பாகிஸ்தான்கள் இருக்கின்றன என்கிறார் கோல்வால்கர். குறிப்பாக, மேற்கு உத்திரப்பிரதேச முஸ்லீம்களை பாகிஸ்தானின் ஏஜெண்டுகளாகவே பார்க்கும் அவர் டெல்லியில் இருந்து ராம்பூர் மற்றும் லக்னோ வரையில் உள்ள முஸ்லீம்கள் ஆபத்தான திட்டங்களை வகுப்பதிலும், ஆயுதங்களை குவிப்பது மற்றும் தங்கள் ஆட்களை ஒன்றுதிரட்டுவதிலும் மும்முரமாக இருக்கிறார்கள். அநேகமாக, நம்முடைய நாட்டுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவது என பாகிஸ்தான் தீர்மானிக்கும்போது உள்ளுக்குள்ளிருந்தே தாக்குவதற்காக அவர்கள் காத்திருக்கலாம், என்கிறார்.

கோல்வால்கரை பொறுத்தவரையில், ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உண்டான முதன்மையான கடமை என்னவென்றால், நம்முடைய ஹிந்து தேசியத்தின் பழமையான சத்தியத்திற்கு ஆதரவாக, நம்முடைய ஹிந்து மக்களின் புனிதமான தயையுள்ளமும் வெற்றிகொள்ள முடியாத மாண்பையும் உருவாக்குவதுதான். ஹிந்துக்களின் கடமை என்று எம்.கே.காந்தி குறிப்பிடுகின்ற விஷயங்களுடன் இந்த மேலாதிக்க கண்ணோட்டத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். காந்தியின் கூற்றுப்படி, தீண்டாமையை ஒழிப்பதும், பெண்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவருவதும்தான் ஒவ்வொரு ஹிந்துவினுடைய கடமையாகும். சாதிகளுக்கு இடையிலான ஒத்திசைவை உருவாக்குவதுதான் ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஹிந்துவாக இருத்தல், அல்லது இந்தியனாக இருத்தல் என்ற இருவிதமான கண்ணோட்டங்கள் இருக்க முடியாது என்பதால் கோல்வால்கர் மற்றும் காந்தி முறையே வழங்குகின்ற கருத்துக்கள் அடிப்படையிலேயே எதிரெதிரானவையாக இருக்கின்றன.

இந்த நீண்டகால ஆர்எஸ்எஸ் தலைவர், ஜனநாயகமானது தனிமனிதருக்கு அதிகப்படியான சுதந்திரத்தை வழங்குகிறது என்ற அடிப்படையில் அதையும் ஏற்க மறுக்கிறார். நரேந்திர மோடி வேண்டுமானால் இந்திய அரசியலமைப்புதான் ஒரே புனிதப் புத்தகம் என்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளலாம், ஆனால் அருடைய குருஜி கோல்வால்கர், அந்த ஆவணம் ஆழ்ந்த பிழைகொண்டது என்றும், அது புறம்தள்ளப்பட வேண்டும், அல்லது குறைந்தபட்சம் மறுவரைவு செய்யப்பட வேண்டும் என கருதுகிறார். காரணம் என்னவென்றால், (சிந்தனைத் திரட்டில் அவர் குறிப்பிட்டுள்ளபடி) “நம்முடைய தற்போதுள்ள அரசியலமைப்பை வடிவமைத்தவர்கள் நம்முடைய ஒரே வகைப்பட்ட தேசியம் என்ற தீர்மானத்தில் உறுதியான வேர்கொண்டவர்கள் அல்ல. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என அமைக்கப்பட்டதில் அவர் கோபம்கொள்கிறார், அவருடைய கண்ணோட்டத்தில் இந்தக் கூட்டரசு கட்டமைப்பானது தேசிய ஒருமைப்பாடின்மை மற்றும் தோல்விக்கான விதைகளையே விதைக்கும். மத்திய அரசுக்கே எல்லாவிதமான அதிகாரங்களும் இருக்க வேண்டுமென கோல்வால்கர் விரும்பினார். மோடி வேண்டுமானால் இப்போது ஒன்றுபட்ட கூட்டரசின் நற்பண்புகள் பற்றிப் பேசலாம், ஆனால் அவருடைய குரு, கோல்வால்கர், நம்முடைய நாட்டின் அரசியலமைப்பினுடைய, கூட்டரசு கட்டமைப்பைப் பற்றிய எல்லாப் பேச்சுக்களும் ஆழமாக குழிதோண்டிப் புதைக்கப்படுவதே நல்லது, என்கிறார். மேலும், அரசியமைப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தி மறு வரையறை செய்வோம், இதனால் ஒரேயொரு அரசாங்கத்தை நிறுவலாம், என்று வலியுறுத்துகிறார்.   

சிந்தனைத் திரட்டு புத்தகத்தைப் படிக்கின்ற எவரும் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஒரு பிற்போக்குவாத குருட்டுப் பார்வை கொண்டவர் என்பதுடன் அவருடைய கருத்தாக்கங்களுக்கோ அல்லது பக்கச்சார்புகளுக்கோ இன்றைய நவீன, சுதந்திர ஜனநாயகத்தில் இடமில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஒத்திகை பார்க்கப்படாத, விதிமுறைகள் அல்லாத பத்திரிக்கையாளர் சந்திப்பை வழங்கும் துணிவு பிரதமருக்கு எப்போதாவது வருமானால், ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர் அவரிடம் கேட்க வேண்டிய முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்றால், ஐயா, கோல்வால்கரிடம் உங்களுக்கு (நீண்டகாலமாக) உள்ள மரியாதையை ஒரு கையிலும், அம்பேத்கர் மற்றும் காந்தியிடம் உங்களுக்குள்ள (புதிய கண்டுபிடிப்பு) மதிப்பு மரியாதையை மறுகையிலும் வைத்துக்கொண்டு எப்படி சரிகட்டுவீர்கள்?”

 

தமிழில்: மர்மயோகி

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.