காபிடே சித்தார்த்தா தற்கொலையா ? பின்னனி என்ன ?

இந்திய பெருநகர உயர் நடுத்தர வர்க்க இளைஞர்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் தாங்கள் விரும்புவோருடன் விரும்புபவற்றை உரையாடுவதற்கு கடந்த இருபதாண்டுகளாக தெரிவு செய்யும் இடமாக இருந்துவருவது "Cafe Coffee Day' கடைகளே. 

இக்கடைகளில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் செலவழிக்கலாம். அத்துடன் இலவச இணைய தள வசதி. ஆனால் ஒரு காபி நூறு ரூபாய் ஆகும். 

இன்று இணைய தள வசதியானது செல்பேசியில் வந்துவிட்டாலும் அன்று அவ்வாறல்ல. அதற்காகவும் உயர் நடுத்தர வர்க்க ஆண்/பெண் இளைஞர்கள் அங்கு செல்வர். இவர்கள் யாரை சந்திக்க அங்கு செல்கிறார்களோ அவர் வராவிட்டாலும் அந்த மேசையில்(மேசையையும் முன்கூட்டியே ரிசர்வ் செய்துகொள்வர். பெரும்பாலும் மூலையில் உள்ள மேசைகளே.) தகவலை வைத்துவிட்டும் செல்லலாம். இத்துணை வசதிகளை வழங்கும் Cafe Coffee Day கடைகளை உயர் நடுத்தர வர்க்க இளைஞர்கள் ஏன் நாட மாட்டார்கள்? அத்துடன் இக்கடைகளுக்கு செல்வது அந்தஸ்துக்கு உரியது. மேலும் Y தலைமுறையாகவும் அறியப்படலாம். 

இன்றோ இக்கடைகளுக்கு சொந்தக்காரரான சித்தார்த் என்ற முதலாளி தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது. அவருடைய கார் ஓட்டுநரின் தகவலும் அவர் எழுதியுள்ள கடிதமும் அதை நம்ப வைக்கின்றன. 

ஆனால் மேற்காண் உயர் நடுத்தர வர்க்கத்தினர் இந்த தற்கொலையை புரிந்து கொள்ள மாட்டார்கள். 

'பங்குச் சந்தை மோசடி மன்னன்' ஹர்ஷத் மேத்தா போல் சாமர்த்தியமாக மோசடி செய்யத் தெரியாதவராகவோ மோடியின் ஆட்சியில் விஜய் மல்லையா உள்ளிட்டு முப்பத்தாறு கம்பி நீட்டிய தொழிலதிபர்கள் போல் இலண்டன் சென்று தப்பிப்பதற்கு சாமர்த்தியம் இல்லாதவராகவோதான் சித்தார்த்தை புரிந்து கொள்வார்கள். 

இவர்கள் சிலர் அல்ல. இலட்சக்கணக்கினர். இந்தியா மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் என சுமார் இத்தகைய 1700 கடைகளுக்கே அன்றாடம் இலட்சக்கணக்கில் வருவர். இவர்களில் பலர் அன்றாட வாடிக்கையாளர்கள். 

இந்தியப் பொருளாதார நெருக்கடியானது ஆயிரக்கணக்கான கோடிகளில் தொழிலை நடத்தும் தொழிலதிபர்களையும் பலி வாங்குகிறது; மேலே பார்த்தவாறு இந்தியாவில் இருக்க முடியாமல் ஓட வைக்கிறது; அனில் அம்பானி போன்றோரை திவால் ஆக்குகிறது; சுப்ரதோ ராய்(சஹாரா குழும முதலாளி) போன்றோரை மாதக்கணக்கில் சிறையிலடைக்கிறது(சில ஆண்டுகளுக்கு முன் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவன முதலாளி சிறையில் மாதக்கணக்கில் செலவழித்தார்.). 

இந்தியப் பொருளாதார நெருக்கடியானது சாமானிய மக்களையும் பல நூறு கோடிகளில் தொழிலை நடத்தும் முதலாளிகளையும் பலி வாங்குகிறது. இரு பிரிவினரும் ஒன்றல்ல. அவர்களின் கஷ்டங்களும் ஒன்றல்ல என்றாலும். 

ஆனால் மேற்குலக நாடுகளின் ஏகாதிபத்திய முதலாளிகளின் பல நிறுவனங்கள் திவாலானாலும் அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் சிறையில் அடைக்கப்படுவதும் இல்லை; அவர்கள் தற்கொலைகள் செய்வதும் இல்லை. மாறாக பங்குச் சந்தை மோசடிகளுக்காகவே சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடனுக்காகவோ திவாலாகிவிட்டாலோ அவ்வாறல்ல. 

மேற்குலகு நாடுகளில் நிலவுடைமை மதிப்பீட்டின்பேரில் கடன் தொல்லைகளை கவுரவப் பிரச்னையாக பார்க்காமல், கடன் வசூலிப்பை கவுரவச் சிக்கலாக பார்க்க வைக்காமல் உடனே settlementக்கு வந்துவிடும் வளர்ந்த முதலாளியமாக அங்கு நிலவுகிறது(அங்குதான் குற்றச் செயல்களை செய்தோர் settlement அடிப்படையில் நட்ட ஈட்டை வழங்கும் அளவுக்கு இருக்கிறதே.). அதனால் அங்கு முதலாளிகள் தற்கொலை செய்துகொள்வதோ சிறைக்கு செல்வதோ வேறு நாடுகளுக்கு திருட்டுத்தனமாக தப்பிச் செல்வதோ இல்லை.

வருமான வரித் துறையும் நெருக்குதலை கொடுத்திருக்கிறது. சித்தார்த் இறுதியாக எழுதிய கடிதத்தை பார்க்காமலேயே அதி்ல் உள்ள கையெழுத்து அவருடையதல்ல எனவும் வருமான வரித் துறையின் உயரதிகாரி தெரிவிக்கிறார் என போலீஸ் அதிகாரி தெரிவித்திருக்கிறார். வருமான வரித்துறையைச் சேர்ந்த அந்த உயரதிகாரி இன்று தனது பணியிலிருந்து ஓய்வடைகிறார். 2. முதலாளிகளில் ஒரு பிரிவினர் இன்னமும் நிலவுடமை மதிப்பீட்டில் வாழ்வதால் கடன் சிக்கலை கவுரவச் சிக்கலாகவே காண்கின்றனர். 3. இந்திய நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில்(Economic Survey) கடன் என்பதையே பாவம் எனவும் கடனை திருப்பிச் செலுத்தாமல் இறப்பதும் பாவம் எனவும் இதற்கு இந்து நம்பிக்கைகள்,  குரான், பைபிள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. 

இந்நிலையில் சித்தார்த் போன்றவர்கள் கடன் சிக்கலை பெரிய அவமானமாக பார்த்து தற்கொலை முடிவையே மேற்கொள்வர். மேலும் அவர் பாரம்பரிய தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இத்தொழிலில் அவரது குடும்பமானது 140 ஆண்டுகளாக இருந்துவருகிறது. இதனால் கடன் சிக்கலை அவமானமாக காண்பது அவரைப் போன்றவர்களுக்கு இயல்பு. பிற்கால அல்லது இன்றைய தலைமுறை என்றால் ஏதோவொரு settlementக்கு வந்து உயிரை இழந்திருக்க மாட்டார்கள்.

 

- பாஸ்கர்

 

 

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.