சுதந்திர ஜிம்பாப்வேயின் முதல் தலைவர் முகாபே மரணம்

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த சுதந்திர ஜிம்பாப்வே நாட்டின் முதல் அதிபரான ராபர்ட் முகாபே தனது 95-வது வயதில் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்தார். அவர் கடந்த பல மாதங்களாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுவந்தார். 

முன்பு ரொடேசியா என்று அழைக்கப்பட்ட ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரேயில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் 1924-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று முகாபே பிறந்தார். அச்சமயத்தில் பிரிட்டிஷ் வெள்ளையின காலனி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறுவயதில் தனிமை விரும்பியாகவும், படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராகவும் முகாபே இருந்திருக்கிறார்.  அவருக்கு பத்து வயது இருக்கும்போது அவருடைய தந்தை குடும்பத்தை கைவிட்டு சென்ற பின்னர்  முகாபே 17 வயதிலேயே பள்ளி ஆசிரியராக தகுதி பெற்றார். பின்னர் ஆசிரியர் பணிக்காக கானா நாட்டிற்கு சென்ற முகாபே ஆரம்பத்தில் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அங்கிருந்து நாடு திரும்பிய பின்னர் 1964-ஆம் ஆண்டு அவருடைய அரசியல் செயல்பாடுகளுக்காக அடுத்த 10 வருடங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். 

1974-இல் சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் ஆயுதமேந்தி கொரில்லா போர்முறையில் போராட்டத்தைத் தொடர்ந்து மக்களிடையே பிரபலமானார். பிறகு பிரிட்டிஷ் நாட்டுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் ஆயுதப்போராட்டத்தை கைவிட்ட பின்னர் 1980-இல் நடைபெற்ற தேர்தல்களில் முகாபேயின் நாட்டுப்பற்று முன்னணி கட்சி பெரும் வெற்றி பெற்று அவர்  பிரதமரானார். அதன்பிறகு தொடர்ந்து 37 ஆண்டுகள் பதவி வகித்த முகாபே தேசிய அளவில் நடந்த பெரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து 2017-ஆம் ஆண்டில் அந்நாட்டு ராணுவத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அவர் அதிகாரத்திற்கு வந்தபோது ஒரு முன்னாள் பள்ளி ஆசிரியராக தன் நாட்டு மக்கள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு கல்வி கற்பதை உறுதிப்படுத்த உண்மையிலேயே முயற்சி மேற்கொண்டார். அந்தக் கண்டத்திலேய அதிக கல்வியறிவு பெற்ற மக்களைக் கொண்ட நாடாக ஜிம்பாப்வே விளங்குவதற்கு முகாபேயே காரணமாவார். அதிபரான சமயத்தில் அவருக்கு கியூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர் போன்றோருடன் அவருக்கு நட்புறவு நிலவி வந்தது. 

ஜிம்பாப்வே விடுதலை பெற்றபோது அந்த நாட்டின் நாயகனாக கொண்டாடப்பட்ட முகாபே தன்னுடைய இறுதிக் காலத்தில் ஊழல்மிக்க சர்வாதிகாரியாக பார்க்கப்பட்டார். முந்தைய தலைமுறையினர் அவரை தேசபக்தி மிக்க அரசியல் போராளியாகவும், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தியவராகவும் பார்க்கின்ற அதேநேரத்தில் இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அவரை ஒரு சர்வாதிகாரியாகவே நினைவுகூர்கின்றனர். 

மேற்குலகத்தினரின் நவ-காலனிய போக்கிற்கு எதிர்ப்பு, ஆப்பிரிக்கர்களே தங்கள் நிலத்தின் மூலவளங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியது மற்றும் தன்னுடைய நாட்டின் வெள்ளையினத்தவருடைய நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீது சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டது ஆகியன இருந்தபோதிலும் அவருடைய ஆட்சிகாலத்தில் ஜிம்பாப்வே பெரும் பொருளாதார பின்னடைவையே சந்தித்தது.

முகாபே தன்னுடைய பதவியை தனிநபர் வழிபாடாக உருவாக்கிக் கொண்டது, அவருடைய இரண்டாவது மனைவியின் அரசியல் ஆசைகள் போன்றவை அவருடைய அரசியல் வீழ்ச்சியுடன் தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றன.     

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.