அடக்கப்பண்பு: ஒரு சுருக்கமான வரலாறு -    சத்ய சாகர்

மிக அடிப்படையாகவே, உயிரியல் அல்லது பரிணாம அளவில் நாம் தொடர்ந்து சுலபமாக மறந்துவிடுகின்ற ஒரு எளிய உண்மை எதுவென்றால், நம்முடைய கிரகத்திலேயே மிகவும் வெற்றிகரமான வேட்டையாடிகள் மனிதர்கள் என்பதுதான்.

அரசியல் பேச்சு முதல் சமூக ஊடக வசைமாரிப் பொழிவுகள் வரையிலுமாக, இப்போதுவரை கடந்த ஐந்து வருடத்திற்கும் மேலாக இழிவான மொழி, சைகைகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவை உலகம் முழுவதிலுமே நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. பண்படக்கம் அறவே அற்றுப்போனதுதான் நம் காலத்தின் பிரதான குணவியல்புகள் ஆகிவிட்டன போல் தோன்றுகிறது – அதன்கூடவே சேர்ந்து (அல்லது அதன் காரணமாகவும்) பெரிதாகிவரும் பொருளாதார இன்னல்கள், அரசியல் குழப்பம் மற்றும் சூழியல் அழிவு ஆகியவையும்தான். 

மனித வரலாற்றில் சில்லறைத்தனம், நம்பிக்கையின்மை, ஏமாற்றுதல் மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலாக வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள வன்முறையைப் பயன்படுத்துவது என இவை எல்லாவற்றிற்குமான மாற்று மருந்தாகத்தான் அடக்கப்பண்பு உருவானது. இன்றோ, உலகம் முழுவதிலுமே நாகரீகமான உரையாடலை நாற்றம்பிடித்த நாக்கானது வெகு சீக்கிரத்தில் இடம்பெயரச் செய்துவிட்டது. அதுதான் இனி வரப்போகும் நாட்களில் சச்சரவின் தெளிவான குறிப்பானாக விளங்குகிறது. இந்த ஆபாச வார்த்தைகள் போகுமிடத்தில் எல்லாம் கத்திகள் ஒன்றும் பின்தங்கிவிடுவதில்லை. 

இந்தியாவில் இந்து தீவிரவாத கும்பல்களால் முஸ்லீம்கள் தூக்கில் தொங்கவிடப்படுவது, அமெரிக்காவில் வெள்ளையின மேட்டிமைவாதிகளால் ஹிஸ்பானிய அகதிகள் மீது பைத்தியக்காரத்தனமான துப்பாக்கித் தாக்குதல்கள் நடத்தப்படுவது என இந்த அறிகுறிகள் எல்லாவிடத்திலும் காணப்படுகின்றன. வெறுப்பு எனும் இந்த உலகளாவிய கொள்ளைநோய்ப் பரவல், வெறுமனே மதம்சார்ந்த அல்லது இனம்சார்ந்த வேறுபாடுகளால் மட்டும் நடப்பதில்லை, இங்கிலாந்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள்கூட தினமும் இத்தகைய பயங்கரமான எதிர்வினைகளைத்தான் எதிர்கொள்கிறார்கள்.

இவற்றைப் பார்த்தால் இந்த ஒட்டுமொத்த உலகமும் போருக்குத் தயாராவதைப் போன்றே இருக்கிறது, இன்று நாம் பார்க்கின்ற துன்புறுத்தல்கள் யாவுமே வரப்போகும் காலத்தில் நடக்கவிருப்பதன் வெறும் முன்னோட்டம் மட்டும்தான். டொனால்டு டிரம் முதல் விளாடிமிர் புடின் வரை, அல்லது ஜெய்ர் போல்ஸனாரோ முதல் நரேந்திர மோடி வரை – இன்றைய உலகமானது, இதுவரை உருவானதிலேயே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை மட்டுப்படுத்துவதற்கான ஒவ்வொரு வழிமுறைகள் அல்லது நிகழ்முறைகள் மீதும் வெளிப்படையாகவே காறி உமிழ்கின்ற தலைவர்கள் என்று அழைக்கப்படுகின்ற இவர்களால்தான் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுதங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஆயுதங்கள், தங்களுடைய கட்டளைப்படி நடக்கும் பெரிய ராணுவங்கள், மிகப்பெரிய அளவிலான பிரச்சாரம் மற்றும் செல்வவளம் என, நவீன-காலத்து போர்வெறியர்கள் இந்த கிரகத்தை முடிவற்ற மோதல்கள் நடந்த நாட்களுக்கு பின்னோக்கி இட்டுச் செல்கிறார்கள்.

அப்புறமென்ன, வெறுப்பு, சந்தேகம் மற்றும் வேண்டுமென்றே போர் ஆகியவற்றை தூண்டிவிடுவதன் நோக்கம் என்னவாகத்தான் இருக்க முடியும்? இந்தப் போர் வெறியர்கள் தாங்கள் செய்வதிலிருந்து ஒதுங்கிப்போகாமல் மட்டுமல்லாது குறிப்பிட்ட அளவுக்கு பொதுமக்கள் ஆதரவையும் பெறுகிறார்களே அது எப்படி?

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் பல்வேறுபட்ட நிலைகளில் இருப்பதாகத்தான் தோன்றுகிறது. அரசியல்ரீதியாக, இது ஒன்றும் யதேச்சை நிகழ்வல்ல, இனவாத நிகழ்வுகள் அதிகரிப்பது மற்றும் போலி-தேசியவாதம் ஆகியவற்றுடன் சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கவும், பொது மூலவளங்களை தனியார்மயப்படுத்தவும், தொழிலாளர்கள் அல்லது விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும், ஜனநாயக அமைப்புகளை குழிதோண்டிப் புதைப்பதற்கும் பதுங்கிக் காத்திருக்கின்ற கொள்கைகள் நிறையவே இருக்கின்றன.

இன்று என்னதான் நடக்கிறது என்றால், சோஷலிச மற்றும் கம்யூனிச இயக்கங்களால் அபாயகரமானது என்று குறிப்பிடப்பட்ட, பாசிசத்தின் கரங்களில் வலுவான ஐரோப்பிய மேட்டுக்குடியினர் விழுந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டத்திற்குத்தான் நாம் மறுபடியும் போய்க்கொண்டிருக்கிறோம். காலனிய காலகட்டத்தில் அடிக்கப்பட்ட கொள்ளைகளை பங்கிட்டுக்கொள்ள ஒருவரை ஒருவர் அழிக்கும் போரில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், சாதாரண குடிமக்கள் ஒருவருக்கொருவர் எதிராக திரும்புவதற்கான இனவாத மற்றும் தேசியவாத அரசியலையும் அவர்கள் வேண்டுமென்றே ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

இருப்பினும், உலகப் போர்களால் ஏற்பட்ட அழிவு மற்றும் சிந்திய ரத்தம், ஜனநாயக அமைப்புக்களின் பரவலைக் கண்ட புதிய உலக ஒழுங்கு, தொழிலாளர்களுக்கான பெரும் உரிமைகள், மூர்க்கத்தனமான போர்களையோ அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையோ தடுத்த நிறுத்துவதற்கான இயக்கமுறைகள், காலனியநீக்கம் மற்றும் உலகளாவிய மூலவளங்களை பெருமளவில் பகிர்ந்துகொள்வது ஆகியன அவர்கள் தொடர்ந்து முன்புபோல ஆள்வதை சாத்தியமில்லாமல் செய்திருக்கிறது.

ஆனாலும், இந்த காலகட்டமானது, குடிமக்கள் உரிமைகள், வள மறுபகிர்மானம், பலவீனமான நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றின் மீதும், உலகளாவிய அல்லது தேசிய மேட்டிமையினர் கைகளில் அதிகாரம் ஒன்று குவிவதற்கான வழியில் குறுக்கிடுகின்ற எதன் மீதும், புதிய அலை தாக்குதல்களுக்கான வழியை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய ஒழுங்கை குலைப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளும்கூட, ஒரு நூற்றாண்டிற்கு முந்தைய பாசிசம், இனவாதம் மற்றும் தேசியவாதம் ஆகியவற்றோடு அடையாளப்படுத்தக் கூடியவைதான். இவை எல்லாம் சேர்ந்து சுத்தமான புனைவை வரலாறு என்கின்றன.

உதாரணத்திற்கு, ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ, இன்றும்கூட, நாசி இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று மறுக்கின்றவர்கள் அல்லது இனவாத மேட்டிமை கொண்ட நாசி கொள்கைக்கு ஆதரவாக இருக்கின்றவர்கள்  குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெகு வேகமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு கடந்த காலத்தின் துயரங்களைப் பற்றி எந்த நினைவும் இல்லை. அவர்களைப் பொறுத்தவரை இரண்டாம் உலகப் போர் என்பதே தந்திரமாக உருவாக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம்தான். 

இந்தியாவிலும்கூட, சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் பிரிவினையின்போது நடந்த இனப்படுகொலை வன்முறையானது முற்றிலுமாக மறக்கப்பட்டுவிட்டதைப் போல்தான் தோன்றுகிறது. அதேநேரத்தில், அணுகுண்டு தாக்குதலுக்கு பலியான உலகின் ஒரே நாடாகிய ஜப்பான், இப்போது தன்னுடைய வரலாற்றுரீதியான போட்டியாளராகிய சீனாவை விஞ்சுவதற்காக மறுபடியும் ஆயுதம் தரிப்பதில் மும்முரமாக இருக்கிறது. சீனாவும்கூட தன்னுடைய வேராகிய சோஷலிசத்திற்கு துரோகமிழைத்துவிட்டு முதலாளித்துவ ஜாம்பாவானாகி வருகிறது. கூடவே, அது இனவாத தேசமாகவும் மாறிவிட்டது, இதற்கு அது தன்னுடைய உய்குர் முஸ்லீம் மக்களை படிப்படியாக தரம்தாழ்த்துவதே ஆதாரம்.

வெறுப்பைக் கிளறிவிடும் மேட்டுக்குடியினரை புரிந்துகொள்ளக்கூடிய அதேநேரத்தில் சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் குடிமக்கள் ஆகியோர் பாசிச பிரச்சாரத்தால் தடுமாறுவதையும், பல நூற்றாண்டுகளாக கடும் போராட்டத்திற்குப் பின் அடைந்த தங்களுடைய உரிமைகளை அவர்கள் கைவிட்டுவிடுவதையும் எப்படித்தான் விளக்க முடியும்? இங்கே, இது சம்பந்தப்பட்ட காரணங்கள் மிகவும் சிக்கலானவை, மனித உயிர்களின் இயல்பு மற்றும் இயற்கை அன்னையை மனிதர்கள் நடத்துகின்ற விதம் ஆகிய இரண்டை வைத்துத்தான் இதைத் தீர்க்க முடியும்.

மனிதர்கள் எனும் கருத்தாக்கம் பெரும்பாலும் அமைதி விரும்புவதாகத்தான் இருக்கிறது, ஆனால் மோசமான அரசியல்வாதிகள், நயவஞ்சக நிறுவனங்கள் அல்லது சுரண்டல் சமூகம் அல்லது பொருளாதார அமைப்புக்களின் காரணமாகவே போர்தொடுக்க நிர்பந்திக்கப்படுதல் என்பதில் – என் பார்வையில் – சிறிதளவே உண்மை இருப்பதாகத்தான் தெரிகிறது. பல சாதாரண மனிதர்களிடத்திலும்கூட உள்ளுக்குள் மிக ஆழமாக ரத்த வேட்கை இருந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை ஏற்க வேண்டியதும் முக்கியம். பாசிசத்தை எதிர்ப்பதில் யதார்த்தமான வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்றால், இந்த அம்சத்தை புறக்கணிப்பதென்பது பேரழிவை வரவேற்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

மிக அடிப்படையாகவே, உயிரியல் அல்லது பரிணாம அளவில் நாம் தொடர்ந்து சுலபமாக மறந்துவிடுகின்ற ஒரு எளிய உண்மை எதுவென்றால், நம்முடைய கிரகத்திலேயே மிகவும் வெற்றிகரமான வேட்டையாடிகள் மனிதர்கள் என்பதைத்தான். மிகவும் பயங்கரமான போட்டியாளர்களாகள் ஒவ்வொன்றும் – புலி முதல் காண்டாமிருகம் வரையில் –அழிவின் விளிம்பில் இருப்பவையாக ஆக்கப்பட்டுவிட்டன. அவையெல்லாம் ஏதோ அறக்கொடையில் வாழ்பவையாக தரம்தாழ்த்தப்பட்டு, தங்களுடைய இரண்டு கால் எஜமானர்களின் கருணையில் வாழ்கின்றன. சக்திவாய்ந்தவைகள் அழிக்கப்பட்டுவிட்ட அதே நேரத்தில், அடிபணிகின்றவை – பசு, பன்றி, ஆடு மற்றும் நாய் – வன்முறையாலும் தந்திரத்தாலும் வீட்டு விலங்குகளாக்கப்பட்டன.

பிற உயிர்களுக்கு எதிரான ஆதிக்க உயிரினத்தின் இந்த நீண்டகால போராட்டம் மற்றும் இயற்கைக்கு உள்ளேயுமான போராட்டத்தின் விளைவாக மனிதர்கள் தங்களுடைய சொந்த உயிரினத்தவரிடம்கூட ஆதிக்கம் செலுத்தக்கூடிய உயிரியல் இயல்பைப் பெற்றுவிட்டார்கள் போல் தோன்றுகிறது. ஒருவருடைய வார்த்தை அல்லது கட்டளைப்படி மனிதர்கள் நடப்பது, பேசுவது மற்றும் சிந்திக்கக் கூடியவர்களானது ஆகியவற்றைவிட வேறு எது அதிகப்படியான அதிகாரத்தை வழங்கியிருக்க முடியும்?

எளிய கட்டளைகளுக்கு கீழ்படிகின்ற, குறைந்த செலவில் பராமரிக்கப்படுகின்ற ஒரு பருப்பொருள் என்று செயற்கை அறிவுத்திறனை வரையறை செய்தால், வரலாறு முழுவதிலுமே மனித அடிமைகள்தான் அதனுடைய முதலாவது மாதிரிகளாக இருந்திருப்பார்கள். ஆனால் மனிதனாக இருப்பதில் அவர்களை அடிமைப்படுத்துவதற்கு வெற்று வன்முறை மட்டுமே போதுமானதாக இல்லை. காலம் செல்லச்செல்ல பல்வேறுவிதமான பிற சாதனங்களும் உருவாகின. அவற்றில் முதன்மையானது என்றால், தினசரி அடிப்படையில் பெருந்திரளான மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார வாழ்வுகளை முறைப்படுத்திய நிறுவனங்கள் எனலாம் – அதாவது, பணம் முதல் திருமணம் வரையிலும், கல்வி முதல் கேளிக்கை வரையிலும்.

கடனை கட்டுப்படுத்துதல், செல்வ வளம் அல்லது அதிகாரத்தால் கவரப்படுதல் மற்றும் மத நம்பிக்கைகளால் உருவாக்கப்பட்ட வறட்டு உணர்ச்சிகள் ஆகியவை கெட்டிப்பட்டுப்போன சமூக படிநிலைகளை உருவாக்கி தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தப்பட்டன. அவை இந்திய சாதிய அமைப்புமுறை அல்லது இன்று உலகம் முழுவதிலும் நாம் பார்க்கின்ற பரந்துபட்ட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என எதுவாகவும் இருக்கலாம். கல்வி நிறுவனங்கள் அல்லது ஊடகம், கூடுமானவரையில் மனித விடுதலைக்கான கருவிகள் ஆகியனவையும் இந்த அடிமைகளை கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கவும், பல்வேறு தவறான கோடுகளால் முடிவேயின்றி பிரிவுபடுத்தவும் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மொழி முதல் மதக் கோட்பாடு வரை, பாலினம் முதல் உணவுக்கான முன்னுரிமை என்பதுவரை பரந்துபட்டு காணப்படுகின்றன.

ஒடுக்கப்பட்டவர்கள்கூட தங்களைக் காட்டிலும் குறைந்த சலுகைப் பெற்றவர்களிடத்தில் தங்களை மேம்பட்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். தங்களை எஜமானர்களைப் போல் உணர்வதனால் தலைமையில் இருப்பவர் என்ற போதையை அவர்கள் அனுபவிக்கிறார்கள் என்ற உண்மையே இதுபோன்ற பிரிவினைக்கு உதவிகரமாக இருக்கின்றன.

மனிதர்கள் தங்களுக்குள் சிறுகூட்டங்களாக, தனிக் குழுக்கள் அல்லது சாதி போன்ற அமைப்புக்களாக பிரிந்துகொண்டு போருக்குச் செல்லுதல் என்ற இந்த உந்துதல்தான் உலக கூட்டத்தின் உச்சத்தில் இருக்கின்றவர்களால் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்தக் கட்டமைப்பை உடைத்துக்கொள்வது அவர்களுக்கே எதிரானதாகத் தெரிகிறது.

மிகச் சாதாரணமான மக்கள்கூட இப்போது வேண்டுமென்றே வெறுப்பு எனும் மடத்தனத்தை தங்களிடத்தில் நிரப்பிக்கொண்டு பல்வேறு இலக்குகளையும் நிறுவிக்கொள்கிறார்கள் – இதனை மதம் மற்றும் கலாச்சார சிறுபான்மையினர், அகதிகள், ஏழை, பெண்கள் மற்றும் பொதுவாக வேற்று என்று கருதப்படக்கூடிய எவர் வரையிலும் நீண்டுசெல்கிறது.

ஆகவே, இத்தகைய பிரம்மாண்ட உலக சக்திகளின் முன்பாக ஒருவர் செய்யக்கூடியது, மனித உயிர்களின் இருளார்ந்த நோக்கங்களை ஒன்றுதிரட்டி பெருங்குழப்பத்தை உருவாக்குவது மற்றும் வெறுப்பைப் பரப்பி படுகொலைகள் செயதல் என்பதாகத்தான் இருக்கிறது – இவையெல்லாமே அவர்களுடைய ஆதிக்க குணத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகத்தானோ? தங்களைச் சுற்றியுள்ள தீமைக்கு வன்முறையற்ற முறையில் பதில் செல்வதற்காக, மனிதர்களிடத்தில் நற்குணத்தை நாடிய காந்தியையோ அல்லது ஆன்மீக முன்னோர்களையோ பின்பற்றுவதில்தான் இதற்கான பதில் இருக்கிறதா?

என்னால் அதை உறுதியாக சொல்ல இயலவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, நம்முடைய கிரகத்துடன் நாம் கொண்டுள்ள உறவுமுறையிலிருந்தே நம்முள் ஆழமாக பதிந்துவிட்ட இயல்பான சுரண்டல் பழக்கத்தினால், மனித உயிர்களிடத்தில் மட்டுமே கவனம் செலுத்துகின்ற எந்த ஒரு ஆன்மீகமும்கூட இதற்குப் போதுமானதாக இருக்காது

இயற்கையுடனான தங்களுடைய உறவில், உன்னால் திருப்பிக் கொடுக்க முடிந்ததைக் காட்டிலும் ஒருபோதும் அதிகம் எடுத்துக்கொள்ளாதே என்ற, ஒரு எளிய கொடுத்து வாங்கும் கொள்கையைப் பின்பற்றுகின்ற, உலகின் எல்லாப் பகுதிகளில் உள்ள பூர்வகுடி மக்களின் ஆன்மீகமாகத்தான் அது இருக்க முடியும். மற்றொருபுறம் நவீன நாகரீகமானது மிக அதிகமாக எடுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய நச்சுக் கழிவுகளை மட்டுமே இந்த பூமிக்குத் திருப்பித் தருகிறது – இதுதான் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய சமநிலை.

வன்முறை கூடாது என்பதைப் பரிந்துரைக்கும் காந்திய பரிந்துரையைப் பொறுத்தவரையில் இங்கே நாம் மறுபடியும் பூர்வகுடி மக்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எப்போதுமே அமைதியான மக்களுடன் அமைதியை தக்க வைக்கிறார்கள், ஆனால் போரை விரும்புகிறவர்களுடன் சண்டையிட அவர்கள் ஒருபோதும் தயங்குவதேயில்லை. எதிராளியானவர் அறமற்று பழிபாவத்திற்கு அஞ்சுவதே இல்லை எனும்போதும், நிரந்தர அதிகாரத்திற்கான தேடலில் மனிதகுலத்திற்குரிய எல்லா கொள்கையையும் துறந்துவிட விரும்பும்போதும் இதுதான் நடக்கும்.

முன்னோக்கி செல்வதற்கான ஒரு மறைகுறிப்பு பல்வேறுவிதமான அடிமைத்தனத்திற்கு எதிரான கடந்தகால போராட்டங்களின் நினைவுகளிலும் காணக்கிடைக்கிறது. எல்லா காலத்திலுமே, உலக அடிமைகள் கிளர்ந்தெழுந்து தங்களுடைய எஜமானர்களுக்கு எதிராக பலதரப்பட்ட வழிகளிலும் போராடியிருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கேயென்று மதங்களை நிறுவிக்கொண்டார்கள், தங்களுடைய கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை கொண்டாடியிருக்கிறார்கள், தங்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்தியதோடு ரத்தக்களரியான புரட்சிகளையும் நடத்தியிருக்கிறார்கள் – அதிகாரம் மற்றும் மூலவளங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும், எல்லாவற்றிற்கும் மேலாக தங்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும் எனவும் தங்களுடைய எஜமானர்களை அவர்கள் நிர்பந்தித்து வந்திருக்கிறார்கள்.

இன்று நாம் வெகுசாதாரணமாக மனிதர்கள் அனைவரும் சமமே என்று சொல்லிக்கொள்கிறோம் – இது இந்தக் கொள்கையை நிறுவுவதற்கான மிகப்பெரிய போராட்டங்களின் விளைவே ஆகும், அவையும்கூட வரலாற்றினூடாக ஏற்கப்படுவதில்லை. இன்றும்கூட இந்த உலகை ஆள்பவர்களுக்கு அது ஒரு வெறுக்கத்தகுந்த விஷயமாகத்தான் இருக்கிறது. வேறுவகையில் சொன்னால், சுலபனமான தீர்வுகள் என்பதே இல்லை. முற்றுகைக்கு ஆளாகியிருக்கும் நம்முடைய கிரகத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் இடையில் அமைதியான உடனொத்த வாழ்வை நிறுவுவதற்கு பகுத்தறிவு, தர்க்கம், உண்மைக் காரணிகள், ஆதாரப்பூர்வமான விஷயங்கள் ஆகியன மேல்மட்டத்திற்கு வந்து அக்னிப் பரீட்சை நடத்துவதன் வாயிலாகத்தான் அது சாத்தியமாகும்.

புரிந்துகொள்ளக் கூடியதுதான் என்றாலும்,பழையன கழிதலுக்காக ஒப்பாரி வைப்போமேயானால், இந்த உலகத்தை முன்பிருந்ததைக் காட்டிலும் மிக மோசமானதாக ஆக்கிவிடக்கூடிய மாய நம்பிக்கைக்கு மட்டுமே அது காரணமாக அமையும். என் பார்வையில், ஒருவர் எப்படிப்பட்ட அமளியிலும் ஒதுங்கிச் சென்றுவிடக்கூடாது, மாறாக, அதை இந்த உலகத்தை சிறப்பாக மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். நாம் எல்லோருமே அமைதியை நேசிக்கிறோம், ஆனால் இன்றைய உலகின் எஜமானர்கள் புரிந்துகொள்ளக்கூடிய ஒரே மொழி போர்தான் என்றால், இந்த உலக மக்களும் தங்களை ஒடுக்குகிறவர்களின் தாய்மொழியிலேயே பேசுவதற்கு தயாராகத்தான் வேண்டும்.

அடக்கப்பண்பு என்பதைப் பொறுத்தவரையில், ஒருவர் அதனுடைய முன்னிகழ்வுகளை கவனமாக ஆராய்ந்து பார்த்தால், ஒடுக்குபவரை ஒடுக்கப்பட்டவர் வரலாற்றுரீதியாக வெற்றிகொண்டதில் இருந்து உருவான ஒரு ரத்தம் தோய்ந்த துணைப்பொருளாகவே அது தோன்றியிருப்பதைக் காணலாம்.

 

தமிழில்: மர்மயோகி

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.