ஆற்றல் மறுப்பு என்றால் என்ன? - டான் ஃபிட்ஜ்

சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலின் பேரளவு உற்பத்தியானது மாசற்றதாகத்தான் இருக்க முடியும் என்ற ஊகத்திற்குள் பலரும் பாதுகாப்பாக ஒளிந்துகொள்கிறார்கள்.

1970-ஆம் ஆண்டின் முதலாவது பூவுலகு தினத்தினுடைய ஐம்பதாவது கொண்டாட்ட தினம் 2020-ஆம் ஆண்டில் வரவிருக்கிறது. இந்த அரைநூற்றாண்டு காலத்தில் சூழியலானது மையநீரோட்டத்திற்கு வந்துவிட்டாலும், அது தன்னுடைய ஆரம்பகட்ட கவனத்தை மறந்துவிட்டு பசுமை முதலாளியத்திற்கு இடம் மாறிவிட்டது. ஆரம்பகால பூவுலகு தினங்களின்போது பிரபலமாக விளங்கிய கோஷமான குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி என்பது கைவிடப்பட்டதைக் காட்டிலும் வேறு எங்கேயும் இதைத் தெள்ளத்தெளிவாக காணமுடியாது.

இன்றைய பூவுலகு தினத்தின் பேசப்படாத சொற்றொடர் மறுசுழற்சி, அவ்வப்போது மறுபயன்பாடு, அத்துடன் குறைத்தல் என்ற வார்த்தையை ஒருபோதும் உச்சரிக்காதே, என்பதாகத்தான் இருக்கிறது. குறைத்தல் என்று சொல்வது ஒருவிதமான பாவச்செயல் என்பது இருபத்தியோராம் நூற்றாண்டு சுற்றுச்சூழலியல் அகராதியில் ஊடுருவிவிட்டது. தினசரி பயன்பாட்டுப் பொருள்களை திட்டமிட்டு பழையதாக்குதல் என்பதை எதிர்கொள்வதென்பது எப்போதாவதுதான் ஒரு சூழியல் இலக்காக தோன்றப்பெறுகிறது. குறிப்பிட்ட சில பொருள்கள் மற்றும் சிறிய வீடுகளை சொந்தமாக்கிக் கொள்ளுதல் என்ற கருத்தாக்கமே சூழியல் பயன்பாட்டுப் பொருள்களை வழிபடுதல் என்பதில் சரணைடந்துவிட்டது. சமூகங்களை மறுவடிவமைப்பு செய்து கச்சிதமாக்குதல் என்ற கருத்துருவாக்கத்தால் தனிநபர் கார்கள் அவசியமில்லை என்ற கருத்தாக்கமானது உலகளாவிய மின்சார கார்கள் என்ற தொலைநோக்குப் பார்வைகளால் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது. எளிமையாக வாழுங்கள், அதனால் மற்றவர்களும் எளிமையாக வாழ முடியும் என்ற சொற்பதம் இப்போது வெறித்த பார்வைகளாத்தான் நிலைகொண்டிருக்கின்றன. நீண்டகாலத்திற்கு முன்பே மறக்கப்பட்டவை புத்தர், யேசு மற்றும் தோரோவின் எளிமையான வாழ்க்கை முறைகள்தான்.

பத்திரப்படுத்துதல்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்போது அது ஏறக்குறைய எப்போதுமே தாவரங்களையோ அல்லது விலங்குகளையோ பாதுகாத்தல் என்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் அரிதாகத்தான் ஆற்றலை பாதுகாத்தல் என்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. சமூகத்தை மறுகற்பனை செய்தல் என்ற கருத்தாக்கமே ஆற்றலை மக்கள் குறைவாக பயன்படுத்தினால் நல்வாழ்வு வாழமுடியும் என்பதுதான். ஆனால் அதுவும்கூட, சூரிய/காற்று மின்சாரத்தின் முடிவற்ற விரிவாக்கம் என்ற தொலைநோக்கினாலும், 100% மாசுபாடில்லாத ஆற்றல் என்ற சுயமுரண்கொண்ட சொற்றடராலும் விழுங்கப்பட்டுவிட்டது.

ஆனால். . .  சற்று பொறுங்கள் – சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் இயல்பிலேயே சுத்தமானதுதான் இல்லையா? இல்லை, இந்தப் பிரச்சினையினுடைய மையப்புள்ளியே அதுதான். பலரும், அச்சுறுத்தக்கூடிய காலநிலை பேரழிவினால் மிகவும் திசைதிரும்பியிருப்பதால், வாழ்வின் இருப்பிற்கு ஏற்படக்கூடிய பிற அச்சுறுத்தல்கள் எதையும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. காலநிலை மாறுபாட்டு மறுப்பு என்பதை நேர்மையாக கண்டிக்கின்ற குறுகிய பார்வையுள்ள சிலரோ, பிற வகைப்பட்ட ஆற்றல் உற்பத்திக்குள் இருக்கின்ற ஆபத்துக்களை அங்கீகரிப்பதற்கு மனமில்லாத நிலைக்கே இட்டுச்செல்கிறார்கள், இந்தப் பிரச்சினையை மாசற்ற ஆற்றல் ஆபத்து மறுப்பு எனலாம்.

 புதைபடிவ எரிபொருள்கள், மற்ற வகைப்பட்ட ஆற்றலால் பதிலீடு செய்யப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அத்தகைய ஆற்றல் மூலங்களும் இத்தகைய எதிர்மறையான துணைப்பொருள்களை கொண்டிருக்குமானால், குறைவான ஆற்றலைப் பயன்படுத்துவதே அறிவுப்பூர்வமான ஆற்றல் பயன்பாட்டுக்கு வழியமைப்பதில் உள்ள ஆரம்பப் புள்ளியும், இறுதிப்புள்ளியுமாக இருக்க வேண்டும். கூடவே, அவற்றிற்கு இடைப்பட்ட புள்ளிகளை ஆக்கிரமிப்பதாயும் இருக்க வேண்டும். இதைத் தொடர்ந்து வருவது என்னவென்றால், மாசற்ற, புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் என்பதன் சொல்லப்படாத 15 கட்டுக்கதைகளாகும். யாருமே இதைப்பற்றி முணுமுணுக்கக்கூட செய்யாமல் பலரும் மிகுந்த முட்டாள்தனமிக்கவர்களாக இருக்கிறார்கள். மேலும், சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலின் பேரளவு உற்பத்தியானது மாசற்றதாகத்தான் இருக்க முடியும் என்ற ஊகத்திற்குள் பாதுகாப்பாக ஒளிந்துகொள்கிறார்கள்.

கட்டுக்கதை 1. மாசற்ற ஆற்றல்என்பது கார்பன் சமநிலையுள்ளது.மாசற்ற” ஆற்றலானது பசுமையில்ல வாயுக்களை வெளியிடுவதில்லை என்ற மிகத்தவறான நம்பிக்கைக்கு, மாற்று ஆற்றல் மூலாதாரத்தின் பட்டியலில் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வரும் அணுசக்தியைக் கொண்டு சிறந்த உதாரணம் காட்டப்படுகிறது. ஆம், அணுசக்தி இயக்கத்தின்போது மிகவும் குறைவான பசுமையில்ல வாயுக்களே வெளியிடப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், இந்த மின்சார உற்பத்தி நிறுவன கட்டுமானத்திலும் (இறுதியாக அதை பிரித்தெடுப்பதிலும்), கூடவே நியூக்ளியர் மூலப்பொருளை வெட்டியெடுத்தல், பிரித்தல், அதற்கான போக்குவரத்து மற்றும் முடிவேயில்லாமல் சேமித்து வைத்தல் ஆகியவற்றிலும், புதைபடிவ எரிபொருள்கள் பயன்படுத்தப்படுகிறது என்பதை மறந்துவிடுதல் தவறானதாகும். இதனுடன் நியூக்ளியரை இயங்கச் செய்யும் தொடர்ச்சியான இயந்திரங்களை கட்டமைப்பதற்கு புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவது மற்றும் கொதிநீரை காலியாக்குவதால் நீர்நிலை சூழியலை தொந்தரவு செய்வது ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டே ஆகவேண்டும்.

அதேபோல், பிற கார்பன் சமநிலை ஆற்றலை உற்பத்தி செய்வதன் ஆயுள் சுழற்சியைப் பற்றி ஆராய்கையில் அவற்றிற்கு எல்லாமே பெரிய அளவுக்கு புதைபடிவ எரிபொருள்களை சார்ந்திருக்கும் இயந்திரங்கள் தேவைப்படுவது தெரிய வந்திருக்கிறது. எஃகு, சிமெண்ட் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றலுக்கு மையமாக விளங்குகின்றன. அவை பெரும் கார்பன் தடங்களை விட்டுச்செல்கின்றன. இதற்கு ஒரு சிறிய உதாரணம், தொழில்துறை காற்றாலை விசிறியின் அடர்த்தியில் 90% எஃகு இருக்கிறது.

கட்டுக்கதை 2. மாசற்ற ஆற்றல் தீர்ந்துபோகாது, ஏனென்றால் சூரியன் எப்போதுமே பிரகாசிக்கிறது, காற்று எப்போதுமே வீசிக்கொண்டிருக்கிறது. ஆற்றலுக்கு வேண்டியதெல்லாம் சூரிய ஒளியும் காற்றும்தான் என்பதை இந்தக் கூற்று அனுமானிக்கிறது, ஆனால் விஷயம் அதுவல்ல. சூரிய ஒளியும் காற்றும் சூரிய மின்சக்திக்கோ காற்று மின்சக்திக்கோ சமனானதல்ல. புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றலாக நிலைமாற்றம் செய்வதற்கு புதுப்பிக்கப்பட முடியாத, கிடைப்பதற்கே சிக்கலாக இருக்கும் கனிமங்கள் தேவைப்படுகின்றன.

கட்டுக்கதை 3. மாசற்ற ஆற்றல் நச்சுக்களை உருவாக்குவதில்லை. புதைபடிவ எரிபொருள்கள் உற்பத்தியான அதிக அளவிலான நச்சுத்தன்மையோடு சேர்ந்தே இருக்கிறது என நமக்குத் தெரியும். இதனால் லித்தியம், கோபால்ட், செம்பு, வெள்ளி, அலுமினியம், காட்மியம், இண்டியம், காலியம், செனினியம், டெலுரியம், நியோடைமியம் மற்றும் டிஸ்புரோஸியம் ஆகியவற்றை பிரித்தெடுப்பது மற்றும் பதனம் செய்வது ஆகியவற்றில் சம்பந்தப்பட்டுள்ள நச்சுக்களின் அளவை நாம் அலட்சியப்படுத்துவதில்லை.  இதுவே, மாசற்ற ஆற்றல் முதல் புதைபடிவ எரிபொருள்கள் உற்பத்தி வரை சம்பந்தப்பட்டுள்ள நச்சுக்களை ஒப்பிட்டுப் பார்த்துதான்  மாசற்றது என சொல்லப்படுகிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாகுமா?

மற்றுமொரு உதாரணம்: மாற்று ஆற்றலுக்கு அத்தியாவசியமான, ஒரு டன் அரிய வகை தனிமங்களை பதனப்படுத்துவதால், 2,000 டன் நச்சுக்கழிவுகள் உற்பத்தியாகின்றன. கட்டுக்கதை 2-இல் உள்ளது போன்றே சூரிய மற்றும் காற்று மின்னுற்பத்தி செயல்பாட்டின்போது நச்சுக்கள் வேண்டுமானால் உற்பத்தியாகாமல் இருக்கலாம், ஆனால் இது அவற்றை பிற நிலைகளில் ஊடுருவச் செய்துவிடுகிறது.

கட்டுக்கதை 4. மாசற்ற ஆற்றல் குடிநீரை காலியாக்கவோ அல்லது அதனை மாசுபடுத்தவோ செய்வதில்லை. தண்ணீரானது விவசாயத்திற்கானது என்றும், அணுசக்தி மின்சார உற்பத்தி நிலையங்களில் குளிர்விப்பதற்கானது என்றும் வழக்கமாக கருதப்பட்டு வந்தாலும், அது உற்பத்தி மற்றும் சுரங்கத் தொழிலில் மிகப்பெரிய அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு ஆட்டோரிக்சாவை தயாரிப்பதற்கு 3,50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

2015-ஆம் ஆண்டில், சுரங்கத் தொழிலுக்காக 4 பில்லியன் தண்ணீரை அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது, இதில் 70% நிலத்தடி நீர். கனிமங்களை பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கவும், இயந்திரத்தை குளிர்விக்கவும், தூசுக் கட்டுப்பாட்டிற்கும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. தொழில்துறை வருந்துனர்கள்கூட மலிவான தாதுக்களை அதிகமாக நம்பியிருத்தல் என்பதற்காக அதே அளவுக்கான சுத்தகரிக்கப்பட்ட தயாரிப்பை உருவாக்குவதற்கு அதிக அளவிலான தாதுக்களை வெட்டியெடுக்க வேண்டியது அத்தியாவசியமாகிறது, இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும், என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஒரு டன் அரிய வகை கனிம உற்பத்தியால் (அரிய வகை கனிம ஆக்ஸைடுகள் வகையில்) 200 கியூபிர் மீட்டர் அமிலக் கழிவுநீர் உற்பத்தியாகிறது.

கட்டுக்கதை 5. மாசற்ற ஆற்றலுக்கு மிக அதிகப்படியான நிலப்பரப்பு தேவைப்படுவதில்லை. உண்மையில், புதைபடிவ எரிபொருள்களைக் காட்டிலும் மாசற்ற ஆற்றலால் நிலப்பரப்பின் மீது அதிகப்படியான விளைவுகளை ஏற்படுத்த முடியும். தற்போதுள்ள அமெரிக்க ஆற்றல் நுகர்வை புதுப்பிக்கப்படக் கூடிய ஆற்றலை வைத்து பதிலீடு செய்ய உங்களுக்கு குறைந்தபட்சம் சூரியசக்தி, காற்றாலை மற்றும் உயிர்ம எரிபொருள்களுக்காக, அமெரிக்க நிலப்பரப்பில் 25-50% வரை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும்.

ஆற்றல் அறுவடைக்கு இடையில் உள்ள முரண்பாடுகளில் இருந்து ஏதோ ஒன்று தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறது. எடுக்கப்படும் இடத்திலுள்ள நிலத்தின் மீது புதைபடிம எரிபொருளானது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது, ஆனால் ஆற்றலுக்காக அந்த எரிபொருள் எரிக்கப்படும் தொழிற்சாலைகளிலோ ஒப்பீட்டளவில் சிறிய நிலமே பயன்படுத்தப்படுகிறது. முரணாக, சூரிய/காற்றாலை மின்னுற்பத்திற்கு மூலப்பொருள்கள் வெட்டியெடுக்கப்படும் இடம் மற்றும் சூரியத் தகடுகள் அல்லது காற்றாலைப் பண்ணைகள் அமைப்பதற்கென பெரிய அளவிலான நிலப்பரப்பு தேவைப்படுகிறது.

கட்டுக்கதை 6. மாசற்ற ஆற்றல் தாவரம் மற்றும் விலங்கின வாழ்வின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. பாலைவனத்தில் எத்தகைய உயிர்வாழ்க்கையும் இல்லை என்ற நம்பிக்கைக்கு மாறாக மொஹாவி பாலைவனமானது தாவரங்களாலும் விலங்கினங்களாலும் நிரம்பியிருக்கிறது. ஆனால், சூரியத் தகடுகளால் மூடிமறைக்கப்பட்டதால் அவற்றின் வாழ்வு எப்போதுமே குறைத்து மதிப்பிடப்படுகிறது. பவழப்பாறைகள் அழிவது பற்றி கவலைப்படுபவர்கள் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் பாகங்களுக்காக ஆழ்கடல் கனிமவள சுரங்கங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் நீர்நிலை உயிர்வாழ்க்கை அழித்தொழிப்பு குறித்து ஏதும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

காற்றாலை அறுவடை என்பது காடுகளுக்கு அழிவு நாளைக் கொண்டுவரும் இயந்திரமாகத்தான் இருக்க முடியும். இந்த கிரகத்தின் வலுவான காற்றுக்களில் பலவும் காடுகள் சூழ்ந்த முகடுகளில்தான் வீசுகின்றன. 50 டன் ஜெனரேட்டர்களையும், 160 அடி நீள பிளேடுகளையும் இந்த இடங்களுக்கு கொண்டுசெல்ல காற்றாலை உற்பத்தியாளர்கள் புதிய சாலைகளைப் போடுகிறார்கள். மின்சார கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளுக்காக அவை வெட்டவெளி நிலப்பகுதிகள் ஆகிவிடுகின்றன. இவை, சட்டப்பூர்வமாகவும் சட்டவிரோதமாகவும் அத்துமீறுபவர்கள் மற்றும் மரம் வெட்டுகிறவர்கள் சுலபமாக நுழையக்கூடிய இடங்களாகிவிடுகின்றன.

சூரிய/காற்றாலைக்காக முதலில் பயன்படுத்தப்படுகின்ற பெரும் உற்பத்திகரமான நிலத்தில் ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கும்போது தொடர்ச்சியாக அந்த நிலப்பரப்பை (அல்லது கடற்படுகையை) விரிவாக்கம் செய்யவேண்டிய தேவை எழுகிறது. அடுத்துவரும் பத்தாண்டுகளில் 1 மில்லியன் உயிரினங்கள் அழிக்கப்படலாம் என்ற மதிப்பீடானது மாசற்ற ஆற்றலை புதைபடிவ எரிபொருள்களோடு சேர்த்தே பார்க்க வேண்டிய அளவுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கட்டுக்கதை 7. மாசற்ற ஆற்றல் உற்பத்தியானது மனித ஆரோக்கியத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை. முதலாளித்துவ விரிவாக்க நூற்றாண்டுகள் முழுவதிலுமே தங்களுடைய ஆரோக்கியத்தையும் குடும்பத்தினரையும் பாதுகாக்க தொழிலாளர்கள் போராடித்தான் வந்துள்ளார்கள் என்பதுடன் தங்களுடைய சமூகங்கள் நச்சுத்தன்மைக்கு ஆளாவதையும் எதிர்த்து வந்துள்ளனர். மாசற்ற ஆற்றல் அதிகரிப்பில் இது மாறுவதுபோல் எல்லாம் ஒன்றும் தெரியவில்லை. மாறப்போவது என்னவென்றால் குறிப்பிட்ட நச்சுக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதுதான்.

சோலார் செல்களுக்கான மெல்லிய சிலிகான் தகடுகளை உருவாக்கும்போது பெரும் அளவிலான சோடியம் ஹைட்ராக்ஸைடு மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு வெளிவருகின்றன. கிரிஸ்டலின்-சிலிகான் சோலார் செல் நிகழ்முறையாக்கத்தில் பாஸ்பைன், ஆர்சனிக், ஆர்ஸைன், டிரைகுளோரோதேன், பாஸ்பரஸ் ஆக்ஸிகுளோரைடு, எதைல் வினைல் ஆஸ்டேட், சிலிகான் டிரையாக்ஸைடு, ஸ்டேன்னிக் குளோரைடு, டாண்டலம் பெண்டாக்ஸைடு, ஈயம், ஹெக்ஸாவேலன்ட் குரோமியம் மற்றும் பல்வேறு ரசாயன சேர்மானங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மற்றும் வெளியிடுவது ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. வெடிக்கக்கூடிய சைலேன் எனும் வாயுவும் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சமீபத்தில் வந்துள்ள மிகமெல்லிய-தகடு தொழில்நுட்பங்கள் காட்மியம் போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த உட்பொருள்களை பயன்படுத்துகின்றன.

காற்றாலை தொழில்நுட்பத்திற்கு அதற்கேயுரிய பிரச்சினைகள் இருக்கின்றன. மெக்ஸிகோவில் உள்ள டிரான்ஸ் இஸ்த்மஸ் காரிடார் காற்றாலைப் பண்ணையை எடுத்துக்கொண்டால், அங்கிருப்பவர்கள் பெரும்பான்மையான பூர்வகுடியினர், அவர்கள் விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையுமே சார்ந்திருக்கிறார்கள். அங்குள்ள 1,600-க்கும் மேற்பட்ட காற்றாலை விசிறிகளின் கான்கிரீட் அடித்தளங்களும் நிலத்தடி நீரோட்டத்தை கடுமையாக பாதிக்கின்றன . . . அந்த மக்கள் தங்களுடைய நிலங்களில் தொடர்ந்து வேளாண்மை செய்யலாம் என்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், காற்றாலை விசிறிகளை பாதுகாக்கின்ற வேலிகளும், பாதுகாப்பு காவலர்களும் விவசாயிகளை சுதந்திரமாக நகரவிடாமல் தடுக்கின்றனர். இந்த விசிறிகள் நிலத்தில் எண்ணையை கசியவிடுவதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது பற்றவைக்கவும் செய்கின்றன . . . நிறைபேர் இவற்றின் இடையறாத இரைச்சலினால் மனநோய் பிரச்சினைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

புதைபடிவ எரிபொருள்கள் குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய பிரச்சினைகளின் எண்ணிக்கையானது சூரிய/காற்றாலைகளைக் காட்டிலும் மிகவும் அதிகம்தான் என்றாலும், பிந்தையவை தொழில்துறை அளவீட்டின்படி மிகக் குறுகிய காலத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன, அதை ஒன்றிணைப்பது மிகக் கடினமானதாக இருக்கிறது. ஒரு ஆபத்தான நிகழ்முறையானது சேதம் ஏற்படுத்தும்வரை காத்திருக்காமல் பயன்படுத்துவதற்கு முன்பே பாதுகாப்பானதுதான் என்று நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் முன்னெச்சரிக்கை கொள்கையானது குறிப்பிடுகிறது. இதே முன்னெச்சரிக்கை கொள்கையானது, துளையிடுதல் மற்றும் பிற புதைபடிவ எரிபொருள் நிகழ்முறைகளிலும் செய்யப்பட வேண்டும் என்று சரியாக வலியுறுத்துகிறவர்கள் மாசற்ற ஆற்றலுக்கான விசாரணையின் அளவிலும் சமமாக இருக்க கோருவார்களா அல்லது பெட்ரோகெமிக்கல் பெரும்புள்ளிகள் அனுபவிக்கின்ற அதேவிதமான கண்ணடிப்பையும் தலையாட்டலையும்தான் காட்டுவார்களா?

கட்டுக்கதை 8. மாசற்ற ஆற்றல் அறுவடையால் அல்லது அதனுடைய பாகங்கள் மக்கள் வாழுமிடத்தில் இருந்து வெட்டியெடுக்கப்படுவதால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. சுழலும் காற்றாலை கத்திகளால் 100 டெசிபல்கள் வரையிலுமான கார் அலாரம் அளவுக்கான ஓசையை இடைவிடாமல் உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். அவை உறைநிலைக்கு சென்றுவிட்டால் மணிக்கு 200 மைல்கள் வேகத்தில் சுழலும். சூரியத் தகடுகளும் காற்றாலைகளும் நிறைய வெயிலோ அல்லது காற்றோ இருக்கின்ற இடத்தில் மட்டும்தான் கட்டப்படுகின்றன, அதற்கு அருகாமையில் இருப்பவர்கள் விருப்பமின்றி ஏற்றுக்கொண்டதால் எப்போதுமே உயர்-அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள்.

உதிரி பாகங்களை அவை கிடைக்கின்ற இடத்தில் இருந்துதான் வெட்டியெடுக்க முடியும் என்பது தெளிவாகத் தெரிவதால் அது முடிவே இல்லாத எதிர்ப்பாளர்கள் பட்டியலுக்குத்தான் காரணமாக அமைகிறது. மாசற்ற ஆற்றல் பாகங்களுக்காக தோண்டப்படுவதை எதிர்கொள்கின்ற சமூகங்களின் ஒரு நீளமான பட்டியலில் இருந்து இதற்கு சில உதாரணங்களைக் காட்ட முடியும்: “அலாஸ்காவில் உள்ள பூர்வகுடி சமூகங்கள் பிரிஸ்டல் வளைகுடாவில் உள்ள பெபல் சுரங்கத்தில் செம்பு மற்றும் தங்கம் வெட்டியெடுக்கப்படுவதைத் தடுக்க போராடிக் கொண்டிருக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய சாக்கே சால்மன் மீன்பிடிப்பிற்கான தாயகமாகவும், வாழ்வாதாரத்திற்கான அதிமுக்கியப் பகுதியாகவும் விளங்குகிறது. திட்டமிடப்பட்டுள்ள சுரங்கமானது அதன் ஆதரவாளர்களால் காற்றாலை விசிறிகள், பேட்டரிகள் மற்றும் சோலார் தகடுகளில் பயன்டுத்துவதற்கான செம்பின் அதிகரித்த தேவையை பூர்த்திசெய்ய அவசியமானது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற கதைகள் நார்வேயிலும் நடக்கின்றன. அங்கே சமி சமூகமானது செம்புச் சுரங்கத்திற்கு எதிராக போராடுகிறது. பப்புவா நியூ கினியில் ஒரு நிறுவனம் கடல்படுகையில் தங்கம் மற்றும் செம்பு எடுக்க திட்டமிட்டு வருகிறது.

கட்டுக்கதை 9. ஆற்றல் சேகரித்தல் அல்லது அறுவடை செய்தல் குறித்த சச்சரவினால் ஒருவரும் ஒருபோதும் கொல்லப்பட்டதில்லை. ஒவ்வொரு வாரமும் இரண்டு சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் கொல்லப்படுவதற்கு சுற்றுச்சூழல் சச்சரவுகளே காரணம் என்று ஆஸாத் ரஹ்மான் என்பவர் 2019 மே மாதம் எழுதியபோது அவருடைய டேட்டாவானது இரண்டே மாதங்களில் பழையதாகிப் போனது. காரணம், ஜுலை 2019-இல் குளோபல் விட்னஸ் (GW) அமைப்பானது தங்களுடைய நிலத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாத்தமைக்காக 2018-இல் ஒவ்வொரு வாரமும் மூன்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், என்று அட்டவணையிட்டது. அவர்களுடைய அறிக்கையின்படி விவசாயத்திற்கு அடுத்தபடியாக சுரங்கத் தொழில்தான் மிக அபாயகரமான பொருளாதாரப் பிரிவு, அணைகள் போன்ற தண்ணீர் மூலாதாரங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றன.

காற்றாலை மின்சாரத்தால் நடந்திருக்கும் ஒரு கொலையை குளோபல் விட்னஸ் பதிவு செய்திருக்கிறது. புதைபடிவ எரிபொருள்களைக் காட்டிலும் அதிக அளவில் உற்பத்தி செய்தால் அது நிச்சயம் மாசற்ற ஆற்றலுக்கான கொலைகளை அதிகரிக்கவே செய்யும். புவிப் பாதுகாவலர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்படுவது இந்தியாவில்தான் அதிகம் என குளோபல் விட்னஸ் 2018-இல் கண்டுபிடித்துள்ளது, இதற்கு தமிழ்நாட்டில் செம்புச் சுரங்கங்கள் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளே காரணம். செம்புதான் மாசற்ற ஆற்றலுக்கான முக்கிய சக்தியாக விளங்குகிறது.

கட்டுக்கதை 10. ஒரு வாட் மாசற்ற ஆற்றலானது புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்திப் பெறப்படும் ஒரு வாட் ஆற்றலை பதிலீடு செய்கிறது. புதைபடி எரிபொருள்களின் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் சூரிய/காற்று மின்சாரத்தைக் காட்டிலும் அவற்றின் ஆற்றலை சுலபமாக சேமித்துவிட முடியும். சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகியவை விட்டுவிட்டு கிடைப்பவை, அதாவது சூரியன் பிரகாசிக்கும்போதோ அல்லது காற்று வீசும்போதோ மட்டும்தான் அவற்றை சேகரிக்க முடியும். அவற்றின் ஆற்றலை சேமித்தல் மற்றும் மீட்டெடுத்தலுக்கு குறிப்பிட்ட அளவில் ஆற்றல் இழப்பிற்கு காரணமாகும் சிக்கலான நிகழ்முறையே தேவைப்படுகிறது. மேலும், சூரியத் தகடுகளின் குணவியல்பு என்று பார்க்கப்போனால் தூசு அல்லது இலைகள் போன்ற சிறு துண்டுகள் அவற்றின் மேற்பரப்பை தடுக்கலாம்.

ஆகையால், அவற்றின் செயல்திறனானது அவை பொருத்தமான ஆய்வக சூழ்நிலைகளில் செயல்படுவதைக் காட்டிலும் நிஜமான செயல்பாட்டு சூழ்நிலைகளில் மிகவும் குறைவானதாகும். 1000 வாட்ஸ் என்று மதிப்பிடப்படும் சூரியசக்தி அணிகள் உண்மையிலேயே நிலத்தில் 200-400 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே உற்பத்தி செய்கின்றன. அதேபோல், நிலக்கரி நிலையங்கள் 80-90% திறனில் செயல்படும்போது காற்றாலை விசிறிகள் 20-30% அளவுக்கே செயல்படுகின்றன. குறைவான செயல்திறன்களில் இயங்கினாலும் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் இரண்டிற்குமே தவறாக வழிகாட்டும் காலநிலை முன்னறிவிப்பைக் காட்டிலும் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு அதிகப்படியான நிலம் தேவைப்படுகிறது. இது வேறு வகையில் வாழ்விட இழப்பு, நச்சு வெளியேற்றம், மனித ஆரோக்கியம் மற்றும் நிலத் தகராறுகள் போன்ற எல்லாவித பிரச்சினைகளையும் அதிகரிக்கச் செய்கிறது.

கட்டுக்கதை 11. மாசற்ற ஆற்றலானது மூலவளத்தைப் பயன்படுத்துவதில் புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்தும் அளவுக்கு செயல்திறன்மிக்கது. விட்டுவிட்டு கிடைக்கும் மூலாதாரங்களிலிருந்து ஆற்றலை சேமித்தல் மற்றும் மீட்டெடுத்தலுக்கான நிகழ்முறைகள் மிகுந்த சிக்கலானவை. அவற்றை செலவுமிகுந்த, பெரிய மற்றும் கனமான பேட்டரிகளில்தான் சேமித்து வைக்க முடியும். புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல்கள் மனிதத் தேவைகளை திருப்திப்படுத்தும் அளவுக்கு போதுமானவைதான், ஆனால் அவற்றை மாற்றித்தருவதற்குத் தேவையான தொழில்நுட்பங்கள் புதைபடிவ தொழில்நுட்பங்களைக் காட்டிலும் மிகுந்த மூலாதாரத் தேவையுள்ளவை: ஒரு கிலோவாட் மணிநேர புதைபடி ஆற்றலை உருவாக்கக்கூடிய ஒரு இயந்திரத்தை உருவாக்குவதைக் காட்டிலும் அதே ஒரு கிலோவாட் மணிநேர புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை உருவாக்கும் ஒரு இயந்திரத்திற்கான உலோகமானது குறைந்தபட்சம் பத்து மடங்காவது அதிகமாக உள்ளது.

கட்டுக்கதை 12. மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மாசற்ற ஆற்றலின் பிரச்சினைகளைத் தீர்க்கும். இதுதான் பசுமை ஆற்றல் குறித்து எப்போதும் குறிப்பிடப்படுகின்ற ஒரு மாயையாக இருக்க முடியும். ஆற்றல் செயல்திறன் என்பதும் ஆற்றலை விற்பதற்கு ஒப்பானதுதான். வாங்குகிறவர்கள், விற்பனையில் இருப்பதை குறைவாக வாங்க மாட்டார்கள் – அவர்கள் அதிகமாகத்தான் வாங்குவார்கள். ஏர் கண்டிஷனர்கள் 28% அதிக செயல்திறன் மிக்கவை ஆகிறபோது அவை 37% அதிக ஆற்றலை பயன்படுத்துகின்றன என்று ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதன்மூலம் தெரிய வருவது என்னவென்றால், பயனர்கள் தங்கள் வீடுகளை குளுமையாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள், நிறைபேர் ஏர் கண்டிஷனர்களை வாங்குகிறார்கள். அதேபோல், ஆட்டோமொபைல்கள் அதிக ஆற்றல் செயல்திறனைக் காட்டுகின்ற அதேநேரத்தில் போக்குவரத்திற்கான ஆற்றல் பயன்பாடும் அதிகரிக்கிறது. நிறைய ஓட்டுநர்கள் செடான் கார்களில் இருந்து எஸ்யுவிகளுக்கோ அல்லது சிறிய டிரக்குகளுக்கோ மாறியதுதான் இதற்கு காரணம், அத்துடன் சாலைகளில்தான் நிறைய டிரைவர்களும் கார்களும் இருக்கின்றனவே.

ஆற்றல் செயல்திறன் இணைகோடுகளானவை ஒரு குறிப்பிட்ட பண்டத்தின் பயன்பாடு மட்டுமே அதிகரித்தபடியால் உயர்ந்துவிடவில்லை, ஆனால் ஆற்றல் பயன்பாடுமிக்க பிற பண்டங்களையும் வாங்க இது மக்களுக்கு வகைசெய்கிறது என்பதே காரணம். இதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களை இப்படி ஆற்றலை குடித்துத் தீர்க்கும் பொருள்களை அதிகப்படியாக தயாரித்து சந்தையில் குவிக்கத் தூண்டுகிறது. இப்படிக் கூடுதலான பொருள்களை வாங்க விரும்பாதவர்கள் தங்களுடைய அதிகப்படியான பணத்தை வங்கியில்தான் போட்டு வைப்பார்கள், வங்கிகள் பலதரப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பணத்தை வழங்குகிறது, இவர்களில் பலரும் தொழில் செய்கிறவர்களாக இருந்து அந்தக் கடன்களை தங்களுடைய உற்பத்தியை அதிகரிக்கவே பயன்படுத்துவார்கள்.

கட்டுக்கதை 13. மாசற்ற ஆற்றலுக்கான இயந்திர பாகங்களை மறுசுழற்சி செய்வது அதனுடைய பிரச்சினைகளைத் தீர்த்துவிடும். இந்தக் கட்டுக்கதையானது உண்மையில் மறுசுழற்சி செய்யக்கூடிய மூலப்பொருள்களின் விகிதத்தை பெருமளவுக்கு அதிகப்படியாக மதிப்பிடவும், பேரளவு சுத்தமான ஆற்றல் என்பதினுடைய அளவை குறைத்து மதிப்பிடவும் செய்கிறது. 5 மெகாவாட் காற்றாலையானது அதனுடைய பிளேடுகளில் இருந்து மட்டுமே 50 டன்கள் அளவுக்கான பிளாஸ்டிக் காம்போஸிட் கழிவை உற்பத்தி செய்கிறது. ஒரு சூரிய/காற்றாலை கட்டுமானத்தை புதைபடிவ எரிபொருள் அனைத்தையும் பதிலீடு செய்யக்கூடிய வகையில் கட்டமைக்க முடியும் என்றால், மனித வரலாற்றிலேயே அதுதான் மிகப் பிரமாண்டமான கட்டுமானமாக இருந்திருக்க முடியும். பல பாகங்களையும் மறுசுழற்சி செய்யலாம், ஆனால் 100 சதவிகிதத்திற்கும் அதிகமான பாகங்களை மறுசுழற்சி செய்வது சாத்தியமில்லை. அத்துடன், இந்த கட்டுமானத்திற்கு 200, 300 அல்லது அதற்கும் அதிகமான சதவிகித தொழிற்சாலை வளர்ச்சி விகிதம் தேவைப்படும்.

கட்டுக்கதை 14. எப்படிப்பட்ட பிரச்சினைகள் என்றாலும் மாசற்ற ஆற்றல் தங்களுக்குள் சரிசெய்துகொள்ளும். உண்மை இதற்கு நேரெதிரானது. மூலவளங்கள் பயன்படுத்தித் தீர்க்கப்பட்டுவிட்டால் மாசற்ற ஆற்றலின் பிரச்சினைகள் மோசமாகும். சூரிய மற்றும் காற்றாலை அறுவடைக்கு ஏற்ற நிலம் எடுத்துக்கொள்ளப்படும், அத்துடன் தொழில்துறை விரிவாக்க விகிதமும் அதிகரிக்கும். சுரங்கத்திற்கும், சூரியசக்தி சேகரிப்பான்கள் மற்றும் காற்றாலைகளை அமைப்பதற்குமான புதிய இடங்களில் கிடைக்கும் வருவாய் குறைந்துபோவதால் மின்சாரம் எடுத்தல் என்பதே மிக மிக சிக்கலானதாகும்.

கட்டுக்கதை 15. வேறு மாற்று என்பதே இல்லை. நாம் ஏதாவது செய்துதான் ஆகவேண்டும், ஏனென்றால் சரியான திசையில் சற்றேனும் நகர்வதென்பது எதுவுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் நல்லது, என்ற கூற்றில் பிரதிபலிக்கின்ற மார்கரெட் தாட்சரின் வலதுசாரி கண்ணோட்டத்தையே இது திரும்பக் கூறுகிறது. பிரச்சினை என்னவென்றால் ஆற்றல் உற்பத்தியை உருவாக்குதல் என்பது தவறான திசையில் அடியெடுத்து வைத்திருக்கிறதே தவிர சரியான திசையில் அல்ல.

மாசற்ற ஆற்றலை அதிகம் பெருக்குதல் என்பது முன்னதாக குறிப்பிடப்பட்டதுதான். ஆற்றலைப் பாதுகாத்தல் என்பது குறைத்தல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் உட்பொதிந்திருக்கும் ஒரு பழமையான தத்துவமே ஆகும். காலநிலை மாற்றத்தின் பயங்கரமான சாத்தியத்தை மட்டும் பார்க்கக்கூடியவர்கள் மாற்று ஆற்றலின் ஆபத்துக்களை மறுப்பவர்களாகவும் இருப்பதனால் காலநிலை மாற்றத்தை மறுப்பவர்களை கேலி செய்யும் துர்பாக்கியமான தூண்டுதலைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

நச்சுத்தன்மையுள்ள காற்றாலை மின்சாரம் என்பதன் வேர்கள் அதனுள்ளே இல்லை. மாறாக, வரம்பற்ற ஆற்றல் வளர்ச்சியில் வைத்திருக்கும் ஆணவ நம்பிக்கையில்தான் இருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக காற்றாலைகள் யாவும் மரம், கல், செங்கல், முரட்டுத்துணி, உலோகம் போன்ற மறுசுழற்சி செய்யக்கூடிய அல்லது மறுமுறை பயன்படுத்தக்கூடிய பொருள்களை வைத்தே கட்டப்பட்டன. நாம் ஆற்றல் தேவையை குறைத்தோமானால் சிறிய மற்றும் குறைந்த செயல்திறனுள்ள காற்றாலைகள் பிரச்சினையாக இருக்கப் போவதில்லை.

ஆற்றலை தயாரிக்கும் எல்லா வடிவங்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன. மாசற்ற, புதுப்பிக்கப்படக்கூடிய ஆற்றல் என்பதும் சுத்தமானதோ புதுப்பிக்கப்படக் கூடியதோ அல்ல. முடிவேயில்லாத ஆற்றல் பெருக்கத்தின் இலக்கை நாம் கைவிட்டோமானால் எல்லா மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும். குறைவான ஆற்றல் என்பதுதான் ஒரே உண்மையான மாசற்ற ஆற்றல் என்பதே நம்முடைய வழிகாட்டு கொள்கையாக இருக்க வேண்டும்.

தமிழில்: மர்மயோகி

டான் ஃபிட்ஜ், வாஷிங்டன் பல்கலையிலும், செயிண்ட்.லூயி ஃபாண்ட்போன் பல்கலையிலும் சுற்றுச்சூழல் உளவியல் பயிற்றுவித்து வருகிறார்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.