அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி – ஆளும் வர்க்க அதிகாரத்திற்கு பதிலடி – காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்

நாட்டுப்புற ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி பிள்ளைகள், அரசு பள்ளிகளில் இல்லை என்றால், வேறு எங்கு சென்று ஆங்கிலவழி கல்வி கற்பார்கள்?

சமீபத்தில், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அரசாங்கம், 2020-21 கல்வியாண்டில் இருந்து அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை அமல்படுத்துவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அடுத்த கல்வியாண்டில் இருந்து, எல்லா அரசுப் பள்ளிகளிலும் உள்ள 1 முதல் 6-ஆம் வகுப்புகளில், தெலுங்கை ஒரு கட்டாயப் பாடமாக கொண்டு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்கு ஏழு மாதங்கள் முன்னதாகவே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது அவசரகதியிலான நடவடிக்கையும் அல்ல, அம்மாநில மக்களுக்கு தெரியாத விஷயமும் அல்ல. இது அவருடைய தேர்தல் அறிக்கையின் முக்கிய நவரத்தினங்களுள் ஒன்றுதான். அவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அது ஒரு பிரச்சினைக்குரிய விஷயம்தான், ஒய்.எஸ்.ஜெகனின் அரசாங்கத்தில் உள்ள பிழையைத்தான் நாம் கண்டுபிடித்தாக வேண்டியிருக்கும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலத்தை முக்கிய மொழியாக்கத்தான் மக்கள் அவருக்கு வாக்களித்து அதிகாரத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு எதற்காக இந்த கல்விச் சீர்திருத்தத்தை எதிர்க்கிறார், எதற்காக அவர் மாத்ருபாஷா பரிரஸ்க்ஷனா (தாய்மொழி பாதுகாப்பு) என்ற பெயரில், தன்னுடைய தனியார்-ஆதரவு ஆங்கில வழி கல்விப் பரிவாரங்களை சாலையில் இறக்கிவிட்டுள்ளார்? அவருடைய பேரனின் தாய்மொழி என்ன, அந்தப் பேரனின் தாயும் தந்தையும் தெலுங்கு மொழியில் ஒரு பாடத்தைக்கூட கட்டாயமாக வைத்திராத தனியார் ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் இல்லையா? அவருடைய பேரன் தேவான்ஷுவின் தந்தையும் தாயும் அமெரிக்காவில் படித்து அமெரிக்க உச்சரிப்பையே பின்பற்றுகின்றனர். தெலுங்கு தேசத்தில், உலகத்தரம் வாய்ந்த தெலுங்கு பயிற்றுவிக்கும் மையத்திற்கு அவர்களை ஏன் சந்திரபாபு அனுப்பி வைக்கவில்லை? 

தாயின் மொழிதான் நிரந்தர அடிப்படையா அல்லது அந்தக் குழந்தையின் தாய் புதிய மொழிகளை கற்றுக்கொண்டு வெவ்வேறு மொழிகளில் குழந்தைகளிடம் பேசும்போது அது மாறிவிடுமா? மொழி என்பது மிகையுணர்ச்சியின் கருவியா அல்லது அது ஒரு நபர், குடும்பம், பிரதேசம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு உண்டான கருவியா? ஆங்கிலம் தேசத்திற்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது அல்லது தெலுங்கிற்கு எதிரானது என்றால் அடித்தளமிட்ட ஆசான்கள் ஏன் அந்த மொழியை தக்கவைத்திருக்கிறார்கள், இந்த நாட்டையும் மாநிலங்களையும் ஆளுகின்ற மேல்தட்டு மக்களிடம் மட்டுமே அது ஏன் தப்பிப் பிழைத்துவருகிறது? இந்தியாவின் இளம் தலைமுறை ஆட்சியாளர்கள் ஏன் ஆங்கில வழியில் கல்விகற்றவர்களாக இருக்கிறார்கள்? கிராமத்து ஏழைகளும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் ஆங்கிலம் கற்ற, புத்தம்புது இந்திய ஆட்சியாளர்கள் சங்கத்தில் சேர்ந்துகொள்ளக் கூடாதா?

நவம்பர் 9, 2019 தேதியிட்ட ஈநாடு பத்திரிக்கையின் ஆசிரியர் பக்கத்தை ஒருவர் பார்த்திருந்தால் அதில் ஆங்கிலவழி கல்விக்கு எதிரான கிளர்ச்சிகளை ஆந்திராவில் தூண்டிவிடுவதற்கான முன்மொழிவு இருப்பதை பார்த்திருக்கலாம். நாட்டுப்புற பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஏழைக்குழந்தைகள், தங்களுடைய கிராமங்களில் ஆங்கில வழிக் கல்வி கற்றால் தெலுங்கு மொழி செத்துவிடும் எனக் கூறினால், ஆங்கில வழி தனியார் பள்ளிகளில் மட்டுமே படித்த மற்றும் படித்துக் கொண்டிருக்கின்ற பணக்கார வீட்டுக் குழந்தைகளின் வீடுகள் மற்றும் காலனிகளில் தெலுங்கு மொழி இன்னமும் செத்துவிடவில்லையே ஏன்? ஆங்கில வழியில் மட்டுமே படித்துவிட்டு, அவர்களால் மட்டும் மாநிலங்கள் மற்றும் நாட்டின் ஆட்சியாளர்களாக ஆக முடிகிறதே அது எப்படி? ஜெகன் மோகன் ரெட்டி முதல் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன், நரா லோகேஷ், கே.டி.ராமா ராவ், சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா, ஆதித்யா தாக்கரே ஆகிய அனைவருமே ஆங்கில வழியில் படித்த தலைவர்கள்தான். நாட்டுப்புற ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி இளைஞர்கள், அவர்களைப் போன்றே உருவாக ஆசைப்படக்கூடாதா என்ன? அரசு பள்ளிகளில் இல்லை என்றால், அவர்கள் வேறு எங்கு சென்று ஆங்கிலவழி கல்வி கற்பார்கள்? ஏழைக் குழந்தைகளும் தன்னைப் போன்றே ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒய்.எஸ்.ஜெகன் விரும்புகிறார். அவருடைய கொள்கையில் என்ன தவறு இருக்கிறது?

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியால் ஆந்திரப் பிரதேச அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் ஆங்கில வழிக் கல்வியானது, ஆந்திரப் பிரதேசம் என்ற முதல் மொழிவாரி மாநிலத்தை அழித்துவிடும் என்ற வாதம், முற்றிலும் முரண்பாடானது. ஈநாடு பத்திரிக்கையானது, தொலைதூர கிராமங்கள் மற்றும் பழங்குடிப் பகுதிகளில் வாழுகின்ற, அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியால் பயனடைகிறவர்கள்கூட இந்த முடிவை எதிர்க்க வேண்டும் என்கிறது. இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட, மிகையுணர்ச்சிகொண்ட, எரிச்சல் ஏற்படுத்தும் வாதமாகும்.

ராமோஜிராவின் இளைய மகனும், மிக இளம் வயதிலேயே மறைந்துவிட்டவருமான சுமன், நிஜாம் கல்லூரியில் பிஏ படித்த என்னுடைய மாணவர் ஆவார். அவர் ஆங்கிலவழி பள்ளிக்கல்வி பின்புலத்தைச் சேர்ந்தவர். அவர் பேசும் தெலுங்கு அவ்வளவு நன்றாக இருக்காது, ஆனால் ஆங்கிலத்தில் நல்ல பேச்சாற்றல் உள்ளவர். கற்றுக்கொள்வதில் அவருக்கிருந்த உண்மையான தீவிர ஆர்வத்தை நான் பாராட்டி வந்திருக்கிறேன். அவருடைய வகுப்பில் சர்வதேச உறவுகள் குறித்து பாடமெடுத்திருப்பதால், அந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க தனிப்பட்ட முறையில் என்னைத் தேடி வருவார். விவாதத்திற்குரிய கேள்வி இதுதான்: ஒரு பெரிய தெலுங்கு ஊடகத்துறையே நடத்திவந்த ராமோஜிராவ், தன்னுடைய மகனை ஏன் ஒரு ஆங்கில வழிப் பள்ளியில் சேர்த்தார்? அவருடைய தாய்மொழியை பயிற்றுவிக்கும் பள்ளியில் ஏன் அவர் சேர்க்கவில்லை? நாட்டுப்புற ஏழைத் தாய்களின் பிள்ளைகள் தங்களுடைய கிராமங்களிலேயே உள்ள அரசு பள்ளியில் ஆங்கிலவழி கல்வி கற்பதில் என்ன தவறு? பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ் மற்றும் திரைப்பட நகரங்ளில் காணாமல் போய்விடாத தெலுங்கு ஏழைகளின் வீட்டில் இருந்து மட்டும் எப்படிக் காணாமல் போகும்?  

ராமோஜிராவ்கூட சில வருடங்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள அப்துல்லாபூர்மேட்டில், அவருடைய மனைவியின் பெயரில் ரமா தேவி பப்ளிக் ஸ்கூல் என்ற பெயரில் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தை நடத்தி வந்திருக்கிறார். இந்தப் பள்ளிக்கூடம் எப்படி முதலாவது தெலுங்கு மொழிவாரி ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்திற்கு சேவை செய்திருக்கும்? தன்னுடைய பொழுதுபோக்கு சேனல்களை நடத்தும் முக்கிய தொகுப்பாளர்களின் பள்ளிக்கல்வி பின்புலத்தை அறிந்துகொள்ள, கணக்கெடுப்பு நடத்துவதற்கு ராமோஜிராவ் அனுமதித்திருப்பாரா என்ன? அவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலவழி பள்ளிக்கல்வி பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களால் ஆங்கில பேச்சுக்குள் வரமுடிந்துள்ளது என்பதை சுலபமாக அறிந்துகொண்டுவிடலாம். ராமோஜிராவ் முழுமையாக சம்பந்தப்பட்டுள்ள திரைப்படத்துறையில் ஒரு கணக்கெடுப்பு நடத்தலாம். இளம் கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகள் அனைவருமே ஆங்கிலவழி கல்விகற்றுவர்கள், என்றாலும் தெலுங்கு படங்களில்தான் நடித்துக் கொண்டிருக்கார்கள். 

ராமோஜிராவ் மற்றும் சந்திரபாபுவின் குடும்ப நெட்வொர்க்குகளோடு சம்பந்தப்பட்ட எல்லா சக்திகளையும் கொண்டு, சரிசமமாக ஆங்கிலம் கற்கும் ஏழை தலித்/பிற்படுத்தப்பட்டோர்/ஆதிவாசி குழந்தைகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்பதைத்தான் இவையெல்லாமே காட்டுகின்றன. அடித்தட்டு சாதி/ஏழைகளுக்கு எதிரான இந்த மொழி ஏமாற்றுவேலை தற்காலத்திற்குரியது மட்டுமல்ல. இந்த மிகத்திறமையான ஏமாற்றுவேலை வரலாற்றுப்பூர்வமானது.

பாரசீக மொழி ஆட்சிமொழி ஆவதற்கு முன்னர் புராதான மற்றும் மத்திய காலகட்டங்களில் சமஸ்கிருதமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. சமஸ்கிருதம் கற்றுத்தருவது தனியார் குருகுலங்களின் வசம் இருந்தது. இந்த குருகுலங்களிலோ அல்லது வெளியிலோ சமஸ்கிருதம் கற்பதற்கு சூத்திரர்கள் மற்றும் தலித்துகளுக்கு உரிமை கிடையாது. நாட்டுப்புற பகுதிகளில் பாரசீக மொழி ஆட்சிமொழி ஆனபிறகு, மேட்டுக்குடி முஸ்லீம்களாலும், பணக்கார மேல்தட்டு சாதியினராலும்தான் பாரசீகம் கற்றுக்கொள்ள முடிந்ததே தவிர கிராமத்து ஏழைகளால் அல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஆங்கிலம் ஆட்சிமொழி ஆனது. இந்தியாவிற்கு ஒரு மிஷனரியாக வந்த ஒரு பிரிட்டிஷ் காலணி செய்யும் தொழிலாளியான வில்லியம் கேரே என்பவரின் முன்னெடுப்பினால் 1817-இல், கல்கத்தாவில் ஆங்கிலம் பயிற்று மொழி தொடங்கி வைக்கப்பட்டது.

பம்பாய் பிராந்தியத்தில், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் பாலகங்காதர திலகரைத் தவிர்த்து, ஆங்கிலம் கற்ற முதல் சூத்திரர் மஹாத்மா ஜோதிராவ் புலே ஆவார். அதுதான், ஆங்கிலக் கல்வியுடன் அடித்தட்டு சாதி மக்களின் விடுதலை தொடங்கிய இடம்.

1947-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரித்து, அரசு பள்ளிகளில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கரின் வலியுறத்தல் இருந்தபோதிலும், நேரு அரசாங்கமானது ஆங்கிலவழி பயிற்றுவித்தலை தனியார் பள்ளிக்கல்விக்கு அளித்துவிட்டு, அரசு பள்ளிகளில் பயிற்று மொழிகளாக பிராந்திய மொழிகளை இணைத்துக்கொண்டது. கல்வியமைப்பு மற்றும் மொழியில் சரிசமமான உரிமைகளை மறுத்த இந்தக் கொள்கைதான், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு ஆளும் வர்க்க மொழி மறுக்கப்பட்டதில் முக்கிய பங்காற்றியது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பள்ளிக்கல்வியை ஒரு சரிசமமான வாய்ப்புள்ள நிலைக்கு கொண்டுவருவதற்கான நடைமுறையை ஆந்திரப் பிரதேச அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது. அவரைச் சுற்றியுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஊடக நெட்வொர்க்குகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நாட்டுப்புற தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை வெகுமக்கள் இந்த விளையாட்டை உற்று நோக்குவார்கள். ஏழைகளுக்கு எதிராக நாயுடுவும் அவருடைய ஆங்கிலக் கல்விக்கு எதிரான ஆதரவாளர்களும் ஆடுகின்ற இந்த ஆட்டம், ஏழைகளின் மிகவும் தீர்மானமான உரிமைபெறும் திட்டத்தில் வந்து நிற்குமேயானால், அந்த ஆடுகளத்திலேயே அவர்களால் இருக்க முடியாது.   

 

தமிழில்: மர்மயோகி

 

காஞ்சா அய்லய்யா ஷெபர்ட்: அரசியல் கோட்பாட்டாளர், சமூகப் போராளி மற்றும் எழுத்தாளர்.

Add new comment

Restricted HTML

  • You can align images (data-align="center"), but also videos, blockquotes, and so on.
  • You can caption images (data-caption="Text"), but also videos, blockquotes, and so on.